×

தி.மலை அண்ணாமலையார் கோயிலில் கோலாகலம்; கார்த்திகை தீபவிழா மகா தேரோட்டம்: 5 தேர்கள் அடுத்தடுத்து பவனி


திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருவிழாவின் 7ம் நாளான இன்று மகா தேரோட்டம் தொடங்கியது. இதில் முதலில் விநாயகர் தேர் பவனி நடந்தது. லட்சக்கணக்கான பக்தர்கள் ‘அரோகரா’ பக்தி கோஷத்துடன் மாடவீதிகளில் தேரை இழுத்தனர். இதைத்தொடர்ந்து சுப்பிரமணியர், உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார், பராசக்தியம்மன், சண்டிகேஸ்வரர் என பஞ்சமூர்த்திகளும் அலங்கரிக்கப்பட்ட தனித்தனி தேர்களில் இன்று நள்ளிரவு வரை உலா வருகின்றனர். ‘நினைத்தாலே முக்தி தரும்’ திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 17ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை மற்றும் இரவு நேரங்களில் பஞ்சமூர்த்திகள் மாடவீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.

விழாவின் 6ம்நாளான நேற்றிரவு 116வது ஆண்டாக பிரசித்திபெற்ற வெள்ளி தேரோட்டம் நடந்தது. 10 நாட்கள் நடக்கும் தீபத்திருவிழாவில் முக்கிய திருவிழாவாக மகாதேரோட்டம் 7ம் நாளான இன்றுகாலை தொடங்கியது. பஞ்ச ரதங்கள் (5 தேர்கள்) பவனி இன்று காலை முதல் இரவு வரை நடக்கிறது. முதலில் காலை 7.43 மணியளவில் விநாயகர் தேர் புறப்பாடு தொடங்கியது. இதில் சிறப்பு அலங்காரத்தில் விநாயகர் எழுந்தருளினார். விநாயகர் தேர், நிலையை அடைந்தபிறகு சுப்பிரமணியர் தேரோட்டம் நடந்தது. இதைத்தொடர்ந்து அண்ணாமலையார் அருள்பாலிக்கும் பெரிய தேர் எனப்படும் ‘மகா ரதம்’ பவனி தொடங்கியது. அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் `அண்ணாமலையாருக்கு அரோகரா’ என பக்தி கோஷமிட்டபடி வடம் பிடித்து தேரை இழுத்தனர்.

தேரில் உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார் சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தனர். வேதமந்திரங்கள் முழங்க மாடவீதியில் தேரோட்டம் ஆடி அசைந்தபடி வந்தது. மகா ரதம் நிலையை அடைந்ததும், பராசக்தியம்மன் தேர் புறப்பாடு நடைபெறுகிறது. பெண்கள் மட்டுமே இந்த தேரை வடம் பிடித்து இழுத்துச்செல்வது தனிச்சிறப்பாகும். தேரோட்டத்தின் நிறைவாக சண்டிகேஸ்வரர் தேர் பவனி நடக்கிறது. பக்தர்களின் பாதுகாப்புக்காக 2 தீயணைப்பு வாகனங்கள், மருத்துவ குழுவினருடன் கூடிய நான்கு 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் மகா ரதத்தை பின்தொடர்ந்து சென்றன. தேர் சக்கரங்களை சுற்றிலும் 20 மீட்டர் இடைவெளி வரை பக்தர்கள் யாரும் செல்லாதபடி, போலீஸ் பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டிருந்தது. தேரோட்டத்தில் சுமார் 5 லட்சம் பக்தர்கள் கலந்துகொண்டனர்.

வடக்கு மண்டல ஐஜி கண்ணன் தலைமையில் சுமார் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 200க்கும் மேற்பட்ட இடங்களில் சிசிடிவி ேகமராக்கள், முக்கிய சந்திப்புகளில் அதிநவீன சுழலும் ேகமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மகாதீப பெருவிழாவுக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் பக்தர்களின் வருகை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இன்று காலை முதல் இரவு வரை 5 தேர்கள் அடுத்தடுத்து மாட வீதிகளில் பவனி வருகின்றன. இதனால் நகரம் முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்கள் நிரம்பியுள்ளனர். நகரம் விழாக்கோலமாக காட்சியளிக்கிறது. மேலும் தீப விழாவை காண வரும் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பஸ்கள், ரயில்கள் இயக்கப்படுகிறது.

கார்த்திகை தீப விழா யூடியூபில் ஒளிபரப்பு
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா விபரங்களை தெரிந்துகொள்ள கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 425 3657 அளிக்கப்பட்டுள்ளது. வரும் 26ம்தேதி பரணி தீபம், மகா தீபம் ஏற்றும் நிகழ்வுகளை பக்தர்கள் காண திருக்கோயில் உட்பிரகாரத்தில் 4 இடங்களிலும், கோபுரங்களின் வெளியே மற்றும் தற்காலிக பஸ் நிலையங்கள் உள்ளிட்ட 20 இடங்களிலும் அகன்ற திரைகள் அமைக்கப்பட்டுள்ளன. திருக்கோயிலில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகள் மற்றும் திருவிழாக்கள், அண்ணாமலையார் கோயிலின் https://youtube.com/@arunachaleswarar என்ற யூடியூப் மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

The post தி.மலை அண்ணாமலையார் கோயிலில் கோலாகலம்; கார்த்திகை தீபவிழா மகா தேரோட்டம்: 5 தேர்கள் அடுத்தடுத்து பவனி appeared first on Dinakaran.

Tags : Kolakalam ,D. Malai Annamalaiyar Temple ,Kartika ,Thiruvannamalai ,Karthika Deepatri festival ,Maha Chariot ,Tiruvannamalai ,Malai Annamalaiyar Temple ,Karthik ,Diwali ,
× RELATED டென்மார்க் நாட்டில் 7ம் ஆண்டாக ஒளி திருவிழா கோலாகலம்..!!