×

நீதிமன்றம் விளையாட்டு மைதானமல்ல; தவறான காவல் நிலையத்தை சேர்த்து எங்கள் நேரத்தை வீணடிக்க வேண்டாம்: மன்சூர் அலிகான் முன் ஜாமீன் மனு விசாரணையின்போது அமர்வு நீதிமன்றம் அதிருப்தி


சென்னை: தவறான காவல் நிலையத்தை வழக்கில் சேர்த்து மனுத் தாக்கல் செய்ய நீதிமன்றம் விளையாட்டு மைதானம் அல்ல என நடிகர் மன்சூர் அலிகான் முன் ஜாமீன் வழக்கில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. நடிகர் மன்சூர் அலிகான் தன்னைப் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்கு நடிகை திரிஷா தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், மன்சூர் அலிகானுக்கு தமிழ் திரையுலகினர் பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்குமாறு தமிழக டிஜிபி-க்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.

இதையடுத்து பெண்களை இழிவுபடுத்தி பேசுதல் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் சென்னை ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல்நிலையத்தினர் நடிகர் மன்சூர் அலிகான் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மன்சூர் அலிகான் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நீதிபதி எஸ்.அல்லி முன்பு விசாரணைக்கு வந்தபோது, மன்சூர் அலிகான் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், முன் ஜாமீன் மனுவை திரும்ப பெறுவதாக வாதிட்டார்.இதையடுத்து நீதிபதி, எதற்காக மனுவை தாக்கல் செய்தீர்கள்??எதற்காக தற்போது திரும்ப பெறுகிறீர்கள்?? என கேள்வி எழுப்பினார்.

அப்போது, எதிர் மனுதாரராக ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தை சேர்ப்பதற்கு பதிலாக, தவறுதலாக நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தை சேர்த்துள்ளதால் மனுவை திரும்ப பெறுவதாக தெரிவிக்கப்பட்டது. இதைக்கேட்ட நீதிபதி அல்லி, நீதிமன்ற நேரத்தை வீணடிக்க வேண்டாம். நீதிமன்றம் விளையாட்டு மைதானம் இல்லை என்று தெரிவித்தார். இதையடுத்து மன்சூர் அலிகான் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட புதிய மனு நாளை விசாரணைக்கு வருகிறது.

The post நீதிமன்றம் விளையாட்டு மைதானமல்ல; தவறான காவல் நிலையத்தை சேர்த்து எங்கள் நேரத்தை வீணடிக்க வேண்டாம்: மன்சூர் அலிகான் முன் ஜாமீன் மனு விசாரணையின்போது அமர்வு நீதிமன்றம் அதிருப்தி appeared first on Dinakaran.

Tags : MANSOUR ALIGAN ,Chennai ,Session Court ,Mansour Ali Khan ,
× RELATED சென்னை சேப்பாக்கத்தில்...