×

செய்யாறு விவசாயிகள் மீதான வழக்குகளை திரும்பப் பெற வேண்டும்: முத்தரசன் வலியுறுத்தல்

திருவண்ணாமலை: செய்யாறு விவசாயிகள் மீதான வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது, திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு பகுதி மேல்மா உள்ளிட்ட சுற்று வட்டார விவசாயிகள் அரசின் நில எடுப்பு நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராடி வருகின்றனர். கடந்த ஜூலை மாதம் இரண்டாம் தேதி அரசு நில எடுப்பு நடவடிக்கையை கைவிட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் தொடங்கினர். அந்தப் போராட்டம் அமைதியாக நீடித்து வந்த நிலையில், தொடர்புடைய அதிகாரிகள், அரசுப் பிரதிநிதிகள், விவசாயிகள் உணர்வுகளை உள்வாங்கி பிரச்சினைக்கு தீர்வு காண தவறியதால் போராட்டம் அடுத்த கட்டம் நோக்கி தீவிரமானது.

தீவிரமான போராட்டத்தை காவல்துறை மூலம் ஒடுக்கி விடலாம் என்ற முறையில் போராடிய விவசாயிகள் மீது கடுமையான சட்டப் பிரிவுகளில் 11க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்து, 20க்கும் மேற்பட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து, சிறையில் இருந்த ஏழு விவசாயிகள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, அதற்கான உத்தரவுகளை சிறையில் இருந்தவர்களிடம் வழங்கிய செய்தி, போராடி வந்த விவசாயிகளை ஆத்திரமுட்டியது. போராட்டத்தை மேலும் விரிவான பகுதிக்கு நெட்டித் தள்ளியது. இந்தச் சூழலில் சிறையில் இருந்து வரும் விவசாயிகளின் குடும்பத்தினர் முறையிட்டனர் என்ற பெயரில் அரசு கடுமையான நிபந்தனைகள் விதித்து ஆறு விவசாயிகள் மீது குண்டர் சட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.

அதே சமயம், போராட்டத்தை ஒருங்கிணைத்து, வழி நடத்தி வரும் அருள் மீது போடப்பட்ட குண்டர் சட்டம் தொடர்கிறது. இது தவிர விவசாயிகள் மீதான வழக்குகளும் தொடர்கின்றன. அரசின் நடவடிக்கை செய்யாறு பகுதியில் அமைதி திரும்ப உதவவில்லை என்பதை அரசு கவனத்துக்கு தெரிவித்து, விவசாயிகள் மீதான மேல்மா சிப்காட் நில எடுப்பு எதிர்ப்புப் போராட்டம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெற்று, சிறையில் உள்ள அனைத்து விவசாயிகளையும் நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும் எனவும், நில எடுப்பு நடவடிக்கை முற்றிலுமாக நிறுத்தப்பட்டு, விவசாயிகளின் பிரதிநிதிகளிடம் அரசு பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காண வேண்டும் எனவும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு முதல் அமைச்சரை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது என குறிப்பிட்டுள்ளார்.

The post செய்யாறு விவசாயிகள் மீதான வழக்குகளை திரும்பப் பெற வேண்டும்: முத்தரசன் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Mutharasan ,Thiruvannamalai ,State secretary ,Communist Party of India ,Seyyar ,Dinakaran ,
× RELATED அரசியல் ஆதாயம் தேடும் மலிவான செயலில்...