×

நடிகை திரிஷா குறித்து சர்ச்சையாக பேசிய விவகாரம்: முன் ஜாமின் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடிகர் மன்சூர் அலிகான் மனு..!!

சென்னை: நடிகை திரிஷா குறித்து சர்ச்சையாக பேசிய விவகாரம் தொடர்பாக முன் ஜாமின் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடிகர் மன்சூர் அலிகான் மனு தாக்கல் செய்துள்ளார். நடிகை திரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் நடிகர் மன்சூர் அலிகான் பேசிய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்டாக வேண்டும் என நடிகர் சங்கம் உள்பட பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தினர். இதுகுறித்து தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து இது தொடர்பாக தமிழக காவல்துறையும் வழக்குப்பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என டிஜிபிக்கு அறிவுறுத்தியது.

அதன்பேரில் ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் போலீசார் நடிகர் மன்சூர் அலிகான் மீது பெண்களை இழிவுபடுத்துதல் உள்ளிட்ட 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை தற்போது நிலுவையில் உள்ளது. இதனிடையே, இன்று விசாரணைக்கு ஆஜராக மன்சூர் அலிகானுக்கு போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர். இந்நிலையில், வழக்கு தொடர்பாக முன் ஜாமின் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடிகர் மன்சூர் அலிகான் மனு தாக்கல் செய்துள்ளார். வழக்கின் மனுவானது இன்று அல்லது நாளை விசாரணைக்கு வர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இன்று காலை 11 மணியளவில் விசாரணைக்காக மன்சூர் அலிகான் ஆஜராகும் பட்சத்தில், அவரிடம் விசாரணை மேற்கொண்டு அது தொடர்பான விவரத்தையும் நீதிமன்றத்தில் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண் நடிகை திரிஷா என்பதால், அடுத்தகட்டமாக அவரிடம் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை மேற்கொள்ள திட்டமிட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

The post நடிகை திரிஷா குறித்து சர்ச்சையாக பேசிய விவகாரம்: முன் ஜாமின் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடிகர் மன்சூர் அலிகான் மனு..!! appeared first on Dinakaran.

Tags : Trisha ,Mansoor Ali Khan ,Chennai Principal Sessions Court ,Chennai ,Dinakaran ,
× RELATED கூவத்தூர் விவகாரத்தில் அதிமுக...