×

மேட்டுப்பாளையத்தில் வரலாறு காணாத அதிஉச்ச மழை.. ஒரே நாளில் 37 செ.மீ மழைப்பொழிவு : தமிழகத்தில் 8 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!!

சென்னை: கனமழை காரணமாக இன்று தமிழகத்தில் எட்டு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.குமரிக்கடல், தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு-மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நள்ளிரவு முதல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி, கோவை மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதையடுத்து மாணவர்களின் நலன் கருதி 8 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று (நவ.23) விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். அதன்படி, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, புதுக்கோட்டை, நீலகிரி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கும், தேனி மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே கோவையில் தொடர் மழை காரணமாக மேட்டுப்பாளையம் தாலுகாவில் உள்ள 193 பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும் என்று மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நேற்று ஒரே நாளில் 37.3 செ.மீ. அதி கனமழை பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து ஒரு நாளில் பதிவான அதிகபட்ச மழை அளவு இதுவாகும்.நீலகிரி கீழ் கோத்தகிரியில் ஒரே நாளில் 24 செ.மீ மழை பெய்துள்ளது. மேலும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் கனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

The post மேட்டுப்பாளையத்தில் வரலாறு காணாத அதிஉச்ச மழை.. ஒரே நாளில் 37 செ.மீ மழைப்பொழிவு : தமிழகத்தில் 8 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Kumarikalal, ,Nadu ,
× RELATED அனைத்து நியாயவிலைக் கடைகளிலும்...