×

2024-25ம் கல்வியாண்டு முதல் பி.பி.ஏ., பி.சி.ஏ. தொடங்க அனுமதி பெற வேண்டும்: ஏ.ஐ.சி.டி.இ. அதிரடி உத்தரவு

சென்னை: ‘‘2024-25ம் கல்வியாண்டு முதல் பி.பி.ஏ., பி.சி.ஏ. படிப்புகளை தொடங்குவதற்கு ஏ.ஐ.சி.டி.இ.யின் அனுமதி பெற வேண்டும்’’ என அனைத்து கல்லூரிகளுக்கும் ஏ.ஐ.சி.டி.இ., தலைவர் சீத்தாராம் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுவரை பி.பி.ஏ., பி.சி.ஏ. போன்ற படிப்புகளுக்கு இணைப்பு பல்கலைக்கழகங்களிடம் இருந்தும், எம்.சி.ஏ., எம்.பி.ஏ. ஆகிய படிப்புகளுக்கு அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலிடம் (ஏ.ஐ.சி.டி.இ.) இருந்தும் அனுமதி பெற்றால் போதும் என்ற நிலை இருந்து வருகிறது.

இந்த நிலையில், பி.பி.ஏ., பி.சி.ஏ. படிப்புகளை ஒழுங்குப்படுத்தும் நோக்கில், ஒவ்வொரு ஆண்டும் இந்த படிப்புகளுக்கு அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலிடம் அனுமதி பெற வேண்டும் என்ற புதிய உத்தரவை ஏ.ஐ.சி.டி.இ. தலைவர் சீத்தாராம், கல்லூரி முதல்வர்களுடனான ஆன்லைன் கூட்டத்தில் பேசும்போது உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்படி, இதுவரை எம்.சி.ஏ., எம்.பி.ஏ. படிப்புகளுக்கு ஏ.ஐ.சி.டி.இ.யிடம் அனுமதி பெற்ற நிலையில், 2024-25ம் கல்வியாண்டு முதல் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் பி.பி.ஏ., பி.சி.ஏ. படிப்புகளை தொடங்குவதற்கு ஏ.ஐ.சி.டி.இ.யின் அனுமதி கண்டிப்பாக பெற வேண்டும் என்ற நிலை உருவாகியிருக்கிறது. அதே சமயம் பி.காம்., பி.ஏ. போன்ற படிப்புகள் ஏ.ஐ.சி.டி.இ.-ன் கீழ் கொண்டுவரப்படாது என்றும் அதிகாரிகள் தரப்பில் சொல்லப்பட்டு உள்ளது.

சீத்தாராம் பேசும்போது, ‘‘ஏ.ஐ.சி.டி.இ., இளங்கலை படிப்புகளுக்கு ஒரு புதிய மாதிரி பாடத்திட்டம் மற்றும் பாடப்புத்தகங்களை கொண்டு வர உள்ளது. மேலாண்மை, கணினி பயன்பாட்டு படிப்புகள் உலகளவில் அதிகரித்து வருகின்றன. அதிலும் குறிப்பாக செயற்கை நுண்ணறிவு மிகவும் பிரபலம் அடைந்து வருகிறது. மேலும் தொழில் நிறுவனங்களும் பல்வேறு வகையான மேலாண்மை படிப்புகளைதான் எதிர்பார்க்கின்றன. அந்தவகையில் வளர்ந்து வரும் அனைத்து பகுதிகளையும் இந்த படிப்புகள் உள்ளடக்கியதாக இருக்கும்’ என்றார்.

The post 2024-25ம் கல்வியாண்டு முதல் பி.பி.ஏ., பி.சி.ஏ. தொடங்க அனுமதி பெற வேண்டும்: ஏ.ஐ.சி.டி.இ. அதிரடி உத்தரவு appeared first on Dinakaran.

Tags : P. C. ,Chennai ,P. ,Dinakaran ,
× RELATED ஏன்? எதற்கு? எப்படி?