×

‘பள்ளிக்கு லீவ் விடா விட்டா… வேற ஊருக்கு மாத்திடுவோம்’: கலெக்டருக்கு சிறுவர்கள் அன்பு எச்சரிக்கை

நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் அருகே வடக்கு பால்பண்ணைச்சேரியை சேர்ந்த சகோதரர்களான மூன்று மற்றும் இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் ரிணவ்லிங்கேஷ் , சாய்கிருஷ் ஆகியோர் பள்ளிக்கு செல்லாமல் நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு விடுமுறை அறிவிப்பு எப்போது வெளியாகும் என டிவியை தான் பார்த்துக்கொண்டு காத்திருந்தனர். ஆனால் விடுமுறை அறிவிப்பு வெளியாகவில்லை.

இதனால் ஏமாற்றம் அடைந்த சகோதரர்கள், ‘எங்க தெருவில் கனத்தமழை பெய்யுது. வெளியில் வரமுடியவில்லை. நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு லீவ் விடுங்க கலெக்டர் ஐயா. இல்லையென்றால் உங்களை வேறு ஊருக்கு மாத்திடுவோம்’ என்று மழலை சிரிப்புடன் கோரிக்கை விடுத்தனர். கலெக்டருக்கு சகோதரர்கள் விடுத்த இந்த அன்பு எச்சரிக்கை வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

விடுமுறை அளிக்க ஹெச்.எம்.க்கு அதிகாரம்
நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று அதிகாலை 4 மணியளவில் பலத்த இடியுடன் தொடங்கிய கனமழை காலை 8 மணி வரை நீடித்தது. பின்னர் விட்டு விட்டு மதியம் வரை நீடித்தது. பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு வெளியாகும் என பெற்றோர்களும், மாணவர்களும் காத்திருந்தனர். ஆனால் இந்த 2 மாவட்டங்களில் விடுமுறை அறிவிப்பு வெளியாகவில்லை. பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும் என்ற அறிவிப்பு வெளியானது. அப்படியே விடுமுறை என்றால் சம்பந்தப்பட்ட பள்ளி சூழலுக்கு ஏற்ப தலைமையாசிரியர்கள் விடுமுறை அறிவிப்பதை முடிவு செய்து கொள்ளலாம் என 2 மாவட்ட கலெக்டர்கள் நேற்று அறிவித்தனர்.

இந்த அறிவிப்பு தலைமையாசிரியர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தவே, முதன்மை கல்வி அலுவலகம், மாவட்ட கல்வி அலுவலகத்தை தொடர்பு கொண்டனர். இதன்பின்னர் ஒரு சில பள்ளிகளுக்கு தலைமையாசிரியர்கள் விடுமுறை அறிவித்தனர். ஆனால் விடுமுறை அறிவிப்பை மாணவர்கள் மத்தியில் எப்படி கொண்டு சேர்ப்பது என தெரியாமல் தலைமையாசிரியர்கள் குழப்பத்தில் இருந்தனர். பெற்றோர்களுடன் மழையில் நனைந்தபடி வந்த மாணவர்கள், பள்ளி விடுமுறை என்ற அறிவிப்பை பார்த்தவுடன் மீண்டும் நனைந்தபடியே வீடுகளுக்கு திரும்பி சென்றனர்.

The post ‘பள்ளிக்கு லீவ் விடா விட்டா… வேற ஊருக்கு மாத்திடுவோம்’: கலெக்டருக்கு சிறுவர்கள் அன்பு எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Nagapattinam ,North Palpannaicherry ,Nagpur ,
× RELATED நாகையில் இருந்து 13ம் தேதி...