×

உத்தரகாண்ட் சுரங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களின் உயிரை காப்பாற்றிய திருச்செங்கோடு ரிக்: மூன்றாவது முயற்சியில் வெற்றி

திருச்செங்கோடு: உத்தரகாண்ட் சுரங்கத்தில் சிக்கியிருக்கும் 41 தொழிலாளர்களை காப்பாற்ற திருச்செங்கோட்டை சேர்ந்த ரிக்குகள் உதவி உள்ளது. உத்தரகாண்ட் மாநிலம், உத்தரகாசியில் இந்தியா-சீனா எல்லைப்பகுதியில் சாலை அமைக்க கடந்த 12ம் தேதி சுரங்கப்பாதை தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் 41 பேர், சுரங்கப்பாதையில் சரிவு ஏற்பட்டதால் உள்ளே சிக்கிக் கொண்டனர். 11ம் நாட்களாக அவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. பல்வேறு தொழில்நுட்பங்கள் பயன்படுத்தி மீட்பு பணி நடந்து வருகிறது.

எண்டோஸ்கோபி கேமரா மூலம் 41 தொழிலாளர்களும் உயிருடன் இருப்பது கண்டறிப்பட்டுள்ளது. இந்த சூழலில், தொழிலாளர்களை பத்திரமாக மீட்கும் முயற்சியில் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டைச் சேர்ந்த தரணி ஜியோ டெக் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இந்த நிறுவனம் இம்மாதிரியான பணிகளில் நிபுணத்துவம் பெற்ற வல்லுனர்களை கொண்டது ஆகும். இவர்களது முயற்சியால் தான், தொழிலாளர்கள் பத்திரமாக இருப்பது கண்டறியப்பட்டது.

தற்போது இடிபாடுகளை அகற்றும் பணியில் இந்த நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இதற்கு இவர்கள் ரிக் தயாரிப்பில் முன்னோடி நிறுவனமான பிஆர்டி நிறுவனம் தயாரித்த ஜிடி-5 என்ற நவீன வசதிகள் கொண்ட ரிக்கை பயன்படுத்துகின்றனர். இந்த ரிக் மிகவும் நவீனமானது. 360 டிகிரியில் சுழலும் வசதி கொண்டது. அதனால் கீழே, மேலே, பக்கவாட்டு என எந்த நிலையிலும் துளையிடும் திறன் கொண்டது. 6 அங்குல விட்டத்துடன் பாறைகளை உடைத்து, 80 மீட்டர் துளை ஏற்படுத்தும் வலிமை கொண்டது. மேலும் துளையிடும் போதே, துளையில் குழாயை சொருகும் வசதி உள்ளது.

இதுகுறித்து பிஆர்டி நிறுவன மேலாண் இயக்குநர் பரந்தாமன், தரணி ஜியோடெக் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் ஜெயவேல் ஆகியோர் கூறியதாவது: உத்தரகாசியில் சுரங்கத்தில் தொழிலாளர்களை மீட்கும் முயற்சிக்கு, தரணி ஜியோடெக் நிறுவனத்தை அரசு அணுகியது. சுரங்கம் அமைத்தல், அணை கட்டுதல், சாலை அமைத்தல் போன்ற பணிகளுக்கு நவீன தொழில்நுட்பங்களை, தரணி ஜியோடெக் நிறுவனம் கடந்த 25 வருடங்களாக அளித்து வந்துள்ளது. அதேபோல், தொழிலாளர்களை மீட்கும் சவாலான முயற்சியில், பிஆர்டியின் ஜிடி-5 ரிக் பயன்படுத்தப்படுகிறது.

இதில், 2 தடவை தடங்கல் ஏற்பட்டு, மூன்றாவது முயற்சியில் வெற்றி பெற்றோம். இதன் மூலம் தான், தற்போது சுரங்க பாதைக்குள் சிக்கியிருக்கும் தொழிலாளர்களுக்கு உணவு, மருந்து, குடிநீர் மற்றும் அவர்கள் எவ்வாறு இருக்கிறார்கள் என்று கண்டறிய, கேமரா மற்றும் ஆக்சிஜன் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் கொடுக்கப்பட்டது. இதற்கு அடிப்படை பிஆர்டி நிறுவனத்தின் ஜிடி-5 ரிக் ஆகும். தற்போது மீட்பு பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post உத்தரகாண்ட் சுரங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களின் உயிரை காப்பாற்றிய திருச்செங்கோடு ரிக்: மூன்றாவது முயற்சியில் வெற்றி appeared first on Dinakaran.

Tags : Uttarakhand ,Trichy ,Uttarakhand State ,Uttarakasi ,Dinakaran ,
× RELATED உத்தரகாண்டில் லேசான நிலநடுக்கம்