×

உத்தரகாண்ட் சுரங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களை மீட்கும் பணி இறுதிக்கட்டத்தை நெருங்கியது: இன்னும் 12 மீட்டர் துளையிட்டால் போதும்

உத்தர்காசி: உத்தரகாண்ட் சுரங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களை மீட்கும் பணி இறுதிகட்டத்தை எட்டி உள்ளது. சுரங்கத்திற்குள் இன்னும் 12 மீட்டர் தூரத்திற்கு துளை போட்டால் தொழிலாளர்களை மீட்டு விடலாம் என மீட்புக்குழு தெரிவித்துள்ளது.

உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசியில் சார்தாம் மகாமார்க் பரியோஜனா தேசிய நெடுஞ்சாலை திட்டத்தின் கீழ், சில்க்யாரா பெண்ட் முதல் பர்கோட் பகுதி வரை 4.5 கிமீ தொலைவுக்கு மலையை குடைந்து சுரங்க சாலை அமைக்கும் பணி கடந்த 2018ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அடுத்த ஆண்டு நிறைவடைய உள்ள இந்த சுரங்கத்தின் இறுதிகட்ட பணிகள் நடந்து வந்தன. கடந்த 12ம் தேதி சுரங்கத்திற்குள் 41 தொழிலாளர்கள் பணியாற்றிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென சுரங்கத்தின் ஒரு பகுதி இடிந்து, மண் சரிந்தது. இதனால், சில்க்யாரா பகுதி நுழைவாயில் இருந்து சுரங்கத்தில் 260 மீட்டர் தூரத்தில் 41 தொழிலாளர்களும் வெளியேற முடியாமல் சிக்கிக் கொண்டனர்.

தகவலறிந்ததும் தொழிலாளர்களை மீட்க உத்தரகாண்ட் மாநில நிர்வாகம், மாநில பேரிடர் மீட்பு படை, தேசிய பேரிடர் மீட்பு படை, ஒன்றிய சாலை போக்குவரத்து அமைச்சகம், தேசிய நெடுஞ்சாலை மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனம், தேசிய நெடுஞ்சாலை ஆணையம், எல்லை சாலை மேம்பாட்டு அமைப்பு உள்ளிட்ட பல்வேறு அரசு துறையிலிருந்து மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். முதலில் சுரங்க இடிபாடுகள் வழியாக 60 மீட்டர் தூரத்திற்கு சிறிய குழாய் செலுத்தி தொழிலாளர்களுக்கு உணவு, காற்று வசதி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து 900 மிமீ விட்டம் கொண்ட இரும்பு குழாயை 60 மீட்டர் வரை சுரங்கத்திற்குள் செலுத்தி அதன் வழியாக தொழிலாளர்களை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதற்காக அமெரிக்காவின் ஆகர் டிரில்லிங் இயந்திரம் கொண்டு வரப்பட்டு சுரங்க இடிபாடுகளில் துளையிடும் பணி மேற்கொள்ளப்பட்டது. கடந்த 17ம் தேதி டிரில்லிங் பணியின்போது சுரங்கத்திற்குள் விரிசல் ஏற்பட்டதால் 24 மீட்டருடன் துளையிடும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. ஒருவாரமாகியும் தொழிலாளர்கள் மீட்கப்படாததால் குடும்பத்தினரும், உறவினர்களும் கவலை அடைந்தனர்.

இதற்கிடையே, கடந்த 20ம் தேதி சிறிய குழாய்க்கு அருகில் மற்றொரு 6 அங்குல பெரிய குழாய் வெற்றிகரமாக உள்ளே செலுத்தப்பட்டது. இதன் மூலம் திட உணவுகள், மருந்துகள், தகவல் தொடர்பு சாதனங்கள் அனுப்பப்பட்டன. கேமரா மூலம் தொழிலாளர்கள் சுரங்கத்திற்குள் பத்திரமாக இருக்கும் வீடியோ காட்சிகள் வெளியிடப்பட்டதால் மீட்பு பணியில் மிகுந்த நம்பிக்கை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து சுரங்கத்தில் மேலே இருந்து செங்குத்தாக துளை போடுவது உள்ளிட்ட 5 விதமான மீட்பு முயற்சிகள் திட்டமிடப்பட்டன. அதற்கான ஆயத்த பணிகளும் செய்யப்பட்டன.

இந்நிலையில், மீட்பு பணியின் 11வது நாளான நேற்று, சில்க்யாரா நுழைவாயில் பகுதியில் நிறுத்தப்பட்ட துளையிடும் பணி மீண்டும் ஆகர் டிரில்லிங் இயந்திரம் கொண்டு தொடங்கப்பட்டது. இது வெற்றிகரமாக கைகொடுத்தது. 6 மீட்டருக்கு ஒரு இரும்பு பைப் பொருத்தப்பட்டது. ஒவ்வொரு கட்டமாக மேற்கொள்ளப்பட்ட துளையிடும் பணி நேற்றிரவு இறுதி கட்டத்தை எட்டியது. இரவு 7 மணி அளவில் 45 மீட்டர் தூரத்திற்கு துளையிட்டு அதில் இரும்பு குழாய் பொருத்தப்பட்டது. அவற்றை வெல்டிங் செய்யும் பணி துரிதகதியில் நடந்தது.

தேசிய நெடுஞ்சாலை மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவன நிர்வாக இயக்குநர் மஹ்மூத் அகமது கூறுகையில், ‘‘சுரங்கத்தின் நுழைவாயிலில் இருந்து தொழிலாளர்கள் சிக்கியிருக்கும் பகுதியை அடைய 57 மீட்டர் துளையிட வேண்டும். தற்போது 45 மீட்டர் துளையிட்டு முடிக்கப்பட்டுள்ளது. இன்னும் 12 மீட்டர் துளையிட்டால் போதும். எந்த தடையும் ஏற்படாமல் இருந்தால், புதன்கிழமை (நேற்று) இரவு அல்லது வியாழன் (இன்று) காலை தொழிலாளர்கள் மீட்கப்படுவார்கள்’’ என்றார்.

மீட்பு பணி இறுதி கட்டத்தை எட்டியதைத் தொடர்ந்து, உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி டேராடூனில் இருந்து உத்தர்காசிக்கு நேற்றிரவு விரைந்தார். மேலும், சுரங்க பகுதியில் 40 ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டன. தொழிலாளர் மீட்கப்பட்ட உடனேயே அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க 8 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை ஒன்றும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. 41 தொழிலாளர்களும் விரைவில் மீட்கப்பட உள்ளதாக அதிகாரிகள் கூறியதைத் தொடர்ந்து சில்க்யாரா பகுதியில் கடந்த 11 நாட்களாக காத்திருக்கும் தொழிலாளர்களின் குடும்பத்தினர், உறவினர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மூன்றாவது நாளாக பிரதமர் விசாரிப்பு
சுரங்க மீட்பு பணிகள் குறித்து தொடர்ந்து 3வது நாளாக நேற்றும் பிரதமர் மோடி, உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு விசாரித்தார். தொழிலாளர்களுக்கு உணவு, மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் புதிய குழாய் மூலம் வழங்கப்படுவது குறித்து கேட்டறிந்தார்.

பாதுகாப்பு விதிகள் புறக்கணிப்பு: காங்.
மாநில காங்கிரஸ் தலைவர் கரண் மகாரா மற்றும் கட்சியின் மூத்த தலைவர் பிரீதம் சிங் ஆகியோர் நேற்று சில்க்யாராவுக்குச் சென்று மீட்புப் பணிகளை ஆய்வு செய்தனர். பின்னர், சக்ரதா தொகுதி எம்எல்ஏ பிரீதம் சிங் அளித்த பேட்டியில், ‘‘பாதுகாப்பு விதிகளை புறக்கணித்து விட்டு இதுபோன்ற நீளமான சுரங்கப்பாதை அமைக்கும் பணியில் ஈடுபட்ட கட்டுமான நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

அனைத்து சுரங்கப்பாதை பாதுகாப்பு குறித்து ஆய்வு
சில்க்யாரா சுரங்கப்பாதை சம்பவத்தை தொடர்ந்து நாடு முழுவதும் கட்டப்பட்டு வரும் அனைத்து சுரங்கப்பாதைகளின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய இருப்பதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நேற்று தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள், டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனின் நிபுணர்கள் குழு இணைந்து நாடு முழுவதும் கட்டப்பட்டு வரும் சுரங்கப்பாதைகளின் பாதுகாப்பு தரத்தை ஆய்வு செய்து 7 நாட்களுக்குள் அறிக்கை அளிப்பார்கள்’ என கூறப்பட்டுள்ளது. தற்போது இமாச்சல பிரதேசத்தில் 12, காஷ்மீரில் 6, மகாராஷ்டிரா, ஒடிசா, ராஜஸ்தானில் தலா 2, மபி, கர்நாடகா, சட்டீஸ்கர், உத்தரகாண்ட், டெல்லியில் தலா 1 சுரங்கப்பாதை என 78 கிமீ தொலைவுக்கு 29 சுரங்கப்பாதைகள் கட்டப்பட்டு வருகிறது.

The post உத்தரகாண்ட் சுரங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களை மீட்கும் பணி இறுதிக்கட்டத்தை நெருங்கியது: இன்னும் 12 மீட்டர் துளையிட்டால் போதும் appeared first on Dinakaran.

Tags : Uttarakhand ,Uttarakasi ,Dinakaran ,
× RELATED உத்தரகாண்ட் தேசிய நெடுஞ்சாலை தப்ரானி...