×

போதைப் பொருட்கள் விற்க எதிர்ப்பு; வாலிபர் சரமாரி வெட்டிக் கொலை

* அண்ணன் படுகாயம்; 4 பேர் கைது
* திருவனந்தபுரத்தில் பயங்கரம்

திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் போதைப் பொருட்கள் விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்த வாலிபரை 4 பேர் கொண்ட கும்பல் சரமாரி வெட்டி கொன்றதுடன் அவரது அண்ணனையும் சரமாரியாக வெட்டியது. இது தொடர்பாக 4 பேரை கைது செய்தனர்.திருவனந்தபுரம் நகரின் மையப்பகுதியில் கரிமடம் காலனி உள்ளது. இந்த பகுதியில் நடைபெற்று வரும் போதைப் பொருட்கள் விற்பனை குறித்து இந்த பகுதியை சேர்ந்த அலியார் என்பவரின் மகன்கள் அல் அமீன் (21), அர்ஷாத் (19) ஆகியோர் போலீசாருக்கு தெரிவித்ததுடன் போதைப் பொருட்கள் விற்பனைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இவர்கள் மடத்தில் பிரதர்ஸ் என்ற பெயரில் கிளப் ஒன்றை தொடங்கி அந்த பகுதி முழுவதும் போதை எதிர்ப்பு நிகழ்ச்சிகளையும் மக்களிடையே நடத்தி வந்துள்ளனர். இது போதைப் பொருட்கள் விற்பனை கும்பலுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

நேற்று அர்ஷாத்தையும் அல் அமீனையும் பேச்சுவார்த்தைக்கு என்று கூறி போதைப் பொருட்கள் கும்பல் வரவழைத்துள்ளது. இதன்பின்னர் அந்த கும்பலை சேர்ந்த 4 பேர், அல் அமீனையும், அர்ஷாத்தையும் சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த 2 பேரும் திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்துவந்த நிலையில், அர்ஷாத் பரிதாபமாக இறந்தார். அவரது அண்ணனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.இதுகுறித்து திருவனந்தபுரம் போர்ட் போலீசார் சென்று விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக கரிமடம் காலனி பகுதியை சேர்ந்த தனுஷ் உள்பட 4 பேரை கைது செய்தனர். இதில் 3 பேர் சிறுவர்கள் என்பதால் சீர் திருத்தப்பள்ளியில் சேர்க்கப்பட்டனர்.

நெல்லை விவசாயி வெட்டிக் கொலை
நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள மேலகாடுவெட்டியை சேர்ந்தவர் இசக்கிபாண்டி (52). இவர் விவசாயி. இவரது மனைவி சங்கரி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இவரது வீட்டின் அருகே அவரது தாய் உச்சிமாகாளி டீக்கடை நடத்தி வருகிறார். இன்று அதிகாலை 6 மணியளவில் ஊரில் மின்சாரம் தடைபட்டபோது திடீரென சிலர் பைக்குகளில் வந்து இசக்கிபாண்டியின் வீட்டுக்குள் நுழைந்து அங்கு தூங்கி கொண்டிருந்த அவரை சரமாரியாக அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டிவிட்டு கும்பல் பைக்குகளில் தப்பிச்சென்றுவிட்டது.

இதையடுத்து அவரது மனைவி மற்றும் உறவினர்கள் வந்து இசக்கிபாண்டியை மருத்துவமனைக்கு கொண்டு செல்லதயாரானபோது பரிதாபமாக இறந்தார்.இதுபற்றி அறிந்ததும் களக்காடு போலீசார் சென்று இசக்கிபாண்டியின் உடலை பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முன்விரோதம் காரணமாக இசக்கிபாண்டியை கொலை செய்துள்ளனர் என்று தெரியவந்துள்ளது. கொலையாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

The post போதைப் பொருட்கள் விற்க எதிர்ப்பு; வாலிபர் சரமாரி வெட்டிக் கொலை appeared first on Dinakaran.

Tags : Thiruvananthapuram ,Thiruvananthapuram… ,
× RELATED திருவனந்தபுரத்தில் 2 வயது குழந்தை கடத்தல்