×

முதல் டி.20 போட்டி: விசாகப்பட்டினத்தில் நாளை இந்தியா-ஆஸ்திரேலியா மோதல்


விசாகப்பட்டணம்: உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இறுதிபோட்டியில் ஆஸ்திரேலியாவிடம் இந்தியா அதிர்ச்சி தோல்வி அடைந்தது. இந்த தோல்வி கவலையில் இருந்து ரசிகர்கள் இன்னும் மீளாத நிலையில் இரு அணிகள் இடையே 5 டி.20போட்டி நடைபெற உள்ளது. இதில் முதல் டி.20 போட்டி நாளை விசாகப்பட்டினத்தில் நடைபெற உள்ளது. 2வது போட்டி 26ம்தேதி திருவனந்தபுரம், 3வது போட்டி 28ம் தேதி கவுகாத்தி, 4வது போட்டி டிச.1ம் தேதி ராய்ப்பூர், கடைசி போட்டி பெங்களூருவில் டிச.3ம் தேதி நடைபெற உள்ளது. முதல் போட்டி நாளை விசாகப்பட்டினத்தில் நடைபெற உள்ள நிலையில் இரு அணி வீரர்களும் நேற்று அங்கு வந்தடைந்தனர்.

இன்று வலைப்பயிற்சியில் ஈடுபட்டனர். இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா கணுக்கால் காயம் காரணமாக ஆடாத நிலையில் சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். உலக கோப்பையில் ஆடியவர்களில் சூர்யகுமார், இஷான்கிஷன் மட்டும் டி.20 அணியில் இடம் பெற்றுள்ளனர். பேட்டிங்கில் ருதுராஜ், ஜெய்ஸ்வால், திலக் வர்மா, ரிங்குசிங் அதிரடியில் மிரட்டுவர். பவுலிங்கில் முகேஷ்குமார், பிரசித்கிருஷ்ணா, அர்ஷ்தீப் சிங், அவேஷ்கான், ஆகியோரில் 3பேருக்கு இடம்கிடைக்கலாம். சுழலில் ரவி பிஷ்னோய், அக்சர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர் இடையே போட்டி உள்ளது. ராகுல் டிராவிட்டின் பயிற்சி காலம் உலக கோப்பையுடன் முடிவடைந்த நிலையில் அவரின் ஒப்பந்தம் நீடிக்கப்படுமா என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

இந்த தொடருக்கு தேசிய கிரிக்கெட் அகாடமி தலைவர் விவிஎஸ் லட்சுமணன் பயிற்சியாளராக செயல்பட உள்ளார். மறுபுறம் ஆஸ்திரேலிய அணி மேத்யூ வேட் தலைமையில் களம் இறங்குகிறது. ஸ்டீவன் ஸ்மித், மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், உலக கோப்பை பைனல் ஆட்டநாயகன் டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ் , டிம்டேவிட், ஆடம் ஜாம்பா, சீன் அபேட், ஆகிய முன்னணி அனுபவ வீரர்களுடன் மத்தேயு ஷார்ட், நாதன் எல்லிஸ், ஆரோன் ஹார்டி, தன்வீர் சங்கா,ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப்,கேன் ரிச்சர்ட்சன் உள்ளிட்ட இளம் வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.உலக கோப்பை பைனலில் அடைந்த தோல்விக்கு பழிதீர்த்து ஆறுதல் தேட இளம்இந்திய அணி போராடும் என எதிர்பார்க்கலாம்.

இந்திய நேரப்படி நாளை இரவு 7 மணிக்கு போட்டி தொடங்கி நடைபெற உள்ளது. இதனை ஸ்போர்ட்ஸ் 18 சேனல் மற்றும் ஜியோ சினிமா ஓடிடி தளம் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.இந்திய உத்தேச அணி : ருதுராஜ் கெய்க்வாட், ஜெய்ஸ்வால்,இஷான் கிஷன் (வி.கீ) சூர்யகுமார் (கேப்டன்),திலக் வர்மா,ரிங்கு சிங்,வாஷிங்டன் சுந்தர்,அக்சர் படேல்,அர்ஷ்தீப் சிங்,பிரசித் கிருஷ்ணா,முகேஷ் குமார். ஆஸ்திரேலிய அணி: மேத்யூ வேட் (கேப்டன்), ஷார்ட், டிராவிஸ் ஹெட், ஸ்டீவன் ஸ்மித், மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ்,ஜோஷ் இங்கிலிஸ், ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப், சீன் அபோட் அல்லது நாதன் எல்லிஸ், கேன் ரிச்சர்ட்சன், ஆடம் ஜம்பா,

ராஜசேகர ரெட்டி ஸ்டேடியம்….
விசாகப்பட்டணம் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி ஸ்டேடியத்தில் இதற்கு முன் 3 டி.20 போட்டி நடந்துள்ளது. இந்த 3 போட்டியிலும் இந்தியா ஆடி உள்ள நிலையில் இரண்டில்( 2016ல் இலங்கை மற்றும் கடந்த ஆண்டு தென்ஆப்ரிக்காவுக்கு எதிராக) வெற்றி பெற்றுள்ளது. 2019ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மோதிய போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா தோல்வி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் தென்ஆப்ரிக்காவுக்கு எதிராக இந்தியா 179/5 ரன் எடுத்தது தான் பெஸ்ட் ஸ்கோராக உள்ளது.

இதுவரை நேருக்கு நேர்…
இரு அணிகளும் இதுவரை 26 டி.20 போட்டிகளில் நேருக்கு நேர் மோதி உள்ளன. இதில் 15ல் இந்தியாவும், 10ல் ஆஸ்திரேலியாவும் வென்றுள்ளன. ஒரு போட்டி கைவிடப்பட்டுள்ளது. கடைசியாக மோதிய 5 போட்டியில் 3-2 என இந்தியா முன்னிலை வகிக்கிறது.

தரவரிசையில் மாற்றம் வருமா?
ஐசிசி டி.20 தரவரிசையில் இந்திய அணி 265 புள்ளியுடன் முதல் இடத்திலும், இங்கிலாந்து( 259 ), நியூசிலாந்து (255), ஆஸ்திரேலியா (252) முறையே 2முதல் 4வது இடத்தில் உள்ளன. தொடரை இந்தியா கைப்பற்றினால் முதல் இடத்தை தக்க வைக்கலாம். மாறாக 4-1,5 -0 என தோல்வி அடைந்தால் முதல் இடம் பறிபோகும் அபாயம் உள்ளது.

The post முதல் டி.20 போட்டி: விசாகப்பட்டினத்தில் நாளை இந்தியா-ஆஸ்திரேலியா மோதல் appeared first on Dinakaran.

Tags : First T20 ,India ,Australia ,Visakhapatnam ,World Cup cricket ,Dinakaran ,
× RELATED நியூசிலாந்துடன் முதல் டி20 கடைசி...