×

தந்தை கொலைக்கு பழிக்குப்பழியாக 23 ஆண்டுக்கு பின் பிரபல ரவுடியை சரமாரியாக வெட்டி கொன்ற மகன்: கூட்டாளிகளோடு போலீசில் சரண்

திருவொற்றியூர்: கொடுங்கையூர், நேரு நகர், ஏ.வி.பி அரசு தெருவை சேர்ந்தவர் செழியன் (59). திருமணம் ஆகாதவர். பிரபல ரவுடியான இவர், தற்போது வயது முதிர்ச்சி மற்றும் உடல் பலவீனம் காரணமாக, ரவுடி தொழிலை கைவிட்டு, வடபெரும்பாக்கத்தில் உள்ள ஒரு வெல்டிங் பட்டறையில் கூலி தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவர், நேற்று முன்தினம் இரவு, வேலை முடிந்ததும், வடபெரும்பாக்கம் சாலை வழியாக வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, 2 பைக்குகளில் வந்த 4 பேர், செழியனை சுற்றி வளைத்தனர். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த செழியன், உடனே அவர்களிடம் இருந்து தப்பிக்க, சாலையில் தலை தெறிக்க ஓடினார்.

ஆனாலும், அந்த கும்பல் அவரை விரட்டிச் சென்று சரமாரியாக வெட்டிவிட்டு, தப்பி ஓடியது. இதில் பலத்த காயமடைந்த செழியன் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்தார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், செங்குன்றம் போலீசார் விரைந்து வந்து, ஆபத்தான நிலையில் இருந்த செழியனை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் நள்ளிரவில் செழியன் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து செங்குன்றம் காவல் மாவட்ட துணை ஆணையர் பாலகிருஷ்ணன் மேற்பார்வையில், செங்குன்றம் காவல் உதவி ஆணையர் ராஜாராபர்ட் தலைமையில் கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் மேற்கொண்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியானது. இதுகுறித்து போலீசார் கூறியதாவது: கொடுங்கையூர் பகுதியில் கடந்த 2001ம் ஆண்டு செழியன் மற்றும் அதே பகுதியை சேர்ந்த பிரபாகரன், அவரது சகோதரர் பாபு ஆகியோர் சாராயம் விற்றுள்ளனர்.

அப்போது செழியனுக்கும், பிரபாகரனுக்கும் ஏற்பட்ட தொழில் போட்டியில் பிரபாகரன் மற்றும் அவரது சகோதரர் பாபு ஆகிய இருவரையும் செழியன் ஒரே ஆண்டில் அடுத்தடுத்து கொலை செய்துள்ளார். இது தொடர்பான வழக்கில் 2003ம் ஆண்டு தண்டனை பெற்று சிறைக்கு சென்ற செழியன், கடந்த 2018ம் ஆண்டு தண்டனை முடிந்து வெளியில் வந்தார். கொலை செய்யப்பட்ட பிரபாகரனின் மகன் சதீஷ்குமார் (29), பெரவள்ளூரில் வாட்டர் கேன் சப்ளை தொழில் செய்து வருகிறார். தன் தந்தையை கொலை செய்த செழியனை பழிக்குப் பழி வாங்க வேண்டும் என்று கடந்த பல ஆண்டுகளாக காத்திருந்துள்ளார்.

அதன்படி, சதீஷ்குமார் தனது கூட்டாளிகள் 3 பேருடன் சேர்ந்து, செழியனை சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளனர். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து சதீஷ்குமார் மற்றும் அவரது கூட்டாளிகளை பிடிக்க காவல் உதவி ஆணையர் ராஜாராபர்ட் தலைமையிலான போலீசார் கொடுங்கையூர் பகுதிக்கு விரைந்தனர். போலீசார் தேடுவதை அறிந்து கொண்ட சதீஷ்குமார் மற்றும் அவரது கூட்டாளிகளான கொளத்தூர் பகுதியை சேர்ந்த அப்பு (எ) அரிஹரன், மகேஷ் (21) மற்றும் விஷால் (21) ஆகிய 4 பேர் நேற்று காலை செங்குன்றம் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். அவர்களை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post தந்தை கொலைக்கு பழிக்குப்பழியாக 23 ஆண்டுக்கு பின் பிரபல ரவுடியை சரமாரியாக வெட்டி கொன்ற மகன்: கூட்டாளிகளோடு போலீசில் சரண் appeared first on Dinakaran.

Tags : Tiruvottiyur ,Chezhian ,AVP Government Street ,Kodunkaiyur ,Nehru Nagar ,Saran ,
× RELATED ரியல்எஸ்டேட் ஊழியரை மிரட்டி பணம் பறித்தவர்கள் கைது..!!