×

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் குடிநீர் தொட்டியில் மலம் கலப்பு? ராமதாஸ் கண்டனம், கலெக்டர் விளக்கம்

சென்னை: உத்திரமேரூர் அருகே திருவந்தவார் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை உள்ள இப்பள்ளியில் அதே கிராமத்தை சேர்ந்த 96 மாணவ மாணவியர்கள் பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளியில் சமையலறை அருகே மாணவ மாணவியர்கள் பயன்படுத்தும் சிமென்ட்டில் கட்டப்பட்ட சுமார் 500 லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர் தொட்டி உள்ளது. இந்த தண்ணீர் தொட்டியில் வழக்கும்போல் நேற்று காலை சத்துணவு அமைப்பாளர் கண்ணகி என்பவர் தண்ணீர் எடுத்துள்ளார். அப்போது தண்ணீருடன் மலம் போன்ற பொருள் கலந்து வந்ததாக கூறப்படுகிறது.

இதைக் கவனிக்காமல் கண்ணகி அந்த தண்ணீரை அருந்தியதாகவும் கூறப்படுகிறது. தண்ணீரில் துர்நாற்றம் வீசியதையடுத்து அதில் மலம் இருந்ததைக் கண்டு கண்ணகி அதிர்ச்சி அடைந்துள்ளார். இதையடுத்து தண்ணீர் தொட்டியில் பார்த்தபோது ஒரு முட்டை ஓடு ஒன்றில் மலம் போடப்பட்டிருந்ததாக தெரிகிறது. உடனே இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு மாவட்ட எஸ்பி சுதாகர், கலெக்டர் கலைச்செல்வி மோகன், வருவாய் கோட்டாட்சியர் ரம்யா, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் நளினி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் மற்றும் தடயவியல் துறையினரும் விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து கலெக்டர் கலைச்செல்வி மோகன் கூறுகையில், ‘‘திருவந்தவார் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் காலை உணவு திட்டத்திற்காக புதிய குடிநீர் தொட்டி அமைக்கபட்டு, மாணவ – மாணவிகள் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் இப்பள்ளியில் பயன்பாட்டில் இல்லாத பழைய குடிநீர் தொட்டியில், காக்கா முட்டையின் ஓடு போடப்பட்டதால், தண்ணீர் துர்நாற்றம் வீசியுள்ளது. எனவே வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்.

மேலும் பயன்பாட்டில் இல்லாத பழைய குடிநீர் தொட்டியினை அகற்ற வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். இதற்கிடைய பாமக நிறுவனர் ராமதாஸ் இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் வட்டம் திருவந்தவார் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளியின் குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது கடுமையாக கண்டிக்கத்தக்கது. வேங்கைவயல் நிகழ்வில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படாதது தான் இத்தகைய குற்றச்செயல்கள் தொடரவும், அதிகரிக்கவும் காரணமாகி இருக்கிறது. எனவே, இனியும் தாமதிக்காமல் வேங்கைவயலில் மனிதநேயமற்ற குற்றத்தை நடத்தியவர்களை கண்டுபிடித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் குடிநீர் தொட்டியில் மலம் கலப்பு? ராமதாஸ் கண்டனம், கலெக்டர் விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Panchayat Union Middle School ,Chennai ,Thiruvanthwar ,Uttaramerur ,
× RELATED ஆசிரியரிடம் வழிப்பறி வழக்கில் 2 இளைஞர்களுக்கு தலா 2 ஆண்டுகள் சிறை