×

சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டு மையத்தில் மக்கள் குறைதீர் மையம்: அதிகாரிகள் தகவல்

சென்னை: சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டு, பேரிடர் காலங்களில் நிலைமையை கண்காணிக்கவும், பொதுமக்களுக்கு உதவி மையமாகவும் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையத்தில் இனிமேல், பொதுமக்கள் குறைதீர் மையம் செயல்படும் என்றும், இது அடுத்த வாரம் முதல் நடைமுறைக்கு வரவுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: சென்னை மாநகராட்சியில் சாதாரண நாட்களில், 1913 என்ற உதவி எண், சமூக ஊடகங்கள் மற்றும் நம்ம சென்னை செயலி உள்ளிட்ட பல்வேறு முறைகளில், பொதுமக்களிடம் இருந்து சுமார் 500 புகார்கள் பதிவு செய்யப்படுகின்றன.

இதில் வார்டு அளவிலான அதிகாரிகள், தங்கள் பிரச்னைகளுக்கு தீர்வு காணாமல், புகார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக, புகாரை முடித்து வைப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வந்தனர். இப்போது இந்த குறைதீர் மையம் நடைமுறைக்கு வரும்போது, வார்டு மற்றும் மண்டல அளவில் உள்ள அதிகாரிகள் மக்களின் குறைகளை தீர்க்காமல் புகார்களை முடித்து வைக்க முடியாது. மேலும், சென்னையில் உள்ள மிக முக்கியமான பிரச்னைகளை நிகழ் நேரத்தில் அடையாளம் காண முடியும்.

பொதுமக்கள் குறைதீர்க்கும் முறையை கூர்ந்து கவனித்து, எத்தனை புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது என்பதை தெரிந்து கொள்ளலாம். புதிய நடைமுறை அறிமுகப்படுத்திய பிறகு எங்களுக்கு வேறு செயலிகள் தேவைப்படாது. பொதுமக்களின் புகார்களை அனைத்து மண்டலங்கள், துறைகள் மற்றும் பிரிவுகள் சார்பில் கண்காணிக்கப்படும். பல்வேறு தளங்களில் உள்ள குறைகள் ஒரே குடையின் கீழ் கொண்டு வரப்படும். பெறப்பட்ட புகாரின் தன்மையின் அடிப்படையில் குறைகளை நிவர்த்தி செய்ய வசதியாக இருக்கும்.

சென்னை மாநகராட்சி பொது குறை தீர்க்கும் முறையின் கீழ் 97 வெவ்வேறு பிரிவுகளின் கீழ் புகார்களை அளிக்க முடியும். குப்பை சேகரிப்பு மற்றும் தெருவிளக்குகள் தற்போது பெரும் சவாலாக உள்ளது. இந்நிலையில், தற்போது இந்த பணிக்கான ஒருங்கிணைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இவை முடிந்ததும் அடுத்த வாரம் முதல் இந்த பொதுமக்கள் குறைத்தீர்க்கும் நடைமுறை பயன்பாட்டிற்கு வரும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டு மையத்தில் மக்கள் குறைதீர் மையம்: அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Tags : People's Grievance Center ,Chennai Corporation ,Chennai ,
× RELATED போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு...