×

வெளிநாட்டில் மேற்படிப்பு படிக்க விரும்பிய வாலிபருக்கு போலி பி.டெக் சான்றிதழை தயாரித்து கொடுத்த ஆந்திர இன்ஜினியர் கைது

சென்னை: ஆந்திரா மாநிலம் பல்நாடு பகுதியை சேர்ந்தவர் ஹேம்நாத்(24). இவர் அமெரிக்காவில் மேற்படிப்பு படிக்க விரும்பினார். இதனால், அவர் சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதரகத்தில் மாணவருக்கான விசாவுக்கு விண்ணப்பித்திருந்தார். அதன்படி கடந்த 16ம் தேதி அமெரிக்கா துணை தூதரகத்தில் நடந்த நேர்முக தேர்வில் ஹேம்நாத் பங்கேற்றார். அப்போது தூதரகத்தில் பணியாற்றும் உதவி மண்டல செயலாளர் மெல்வின் என்பவர் ஹேம்நாத் அளித்த சான்றுகளை ஆய்வு செய்தார். அப்போது, ஹேம்நாத் அளித்த பி.டெக் மதிப்பெண் சான்று போலியானது என தெரியவந்தது. இதையடுத்து உதவி மண்டல செயலாளர் மெல்வின் போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோரிடம் சம்பவம் குறித்து புகார் அளித்தார். அதன்படி மத்திய குற்றப்பிரிவு கூடுதல் துணை கமிஷனர் முத்துவேல் பாண்டி, இன்ஸ்பெக்டர் ஜாராணி தலைமையிலான போலீசார் அமெரிக்க துணை தூதரகத்துக்கு சென்று, அங்கு தூதரக அதிகாரிகள் பிடித்து வைத்திருந்த ஹேம்நாத்தை கைது செய்தனர். பின்னர், போலி பி.டெக் சான்றிதழ் தயாரித்தது குறித்து கைது செய்யப்பட்ட ஹேம்நாத்திடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது, ஆந்திரா மாநிலம் பல்நாடு மாவட்டம் நரசராவ்பேட்டை, பிரகாஷ் நகர் பகுதியில் தனியார் நிறுவனம் நடத்தி வந்த பொறியாளர் அரிபாபு(35) என்பவர் தயாரித்து கொடுத்தது தெரியவந்தது. அதை தொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு தனிப்படை போலீசார் ஆந்திரா சென்று போலி சான்று கொடுத்த அரிபாபுவை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், தெலங்கானா மாநிலத்தில் உள்ள பிரபல பொறியியல் கல்லூரியில் பி.டெக் (இஇஇ) முடித்த அரிபாபு, கடந்த 2020ம் ஆண்டு மும்பையில் உள்ள ஐபிஎம் என்ற ஐடி நிறுவனத்தில் டேட்டா தயாரிப்பாளராக இருந்துள்ளார்.பிறகு அதிக பணம் சாம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையில் ஆந்திரா மாநிலம் நரசராவ் பேட்டை, பிரகாஷ் நகரில் தனியாக அலுவலகம் தொடங்கி, வெளிநாடு செல்பவர்களுக்கு போலியான கல்வி சான்றிதழ்களை தயாரித்து கொடுத்து வந்துள்ளார்.

அதன்படி வெளிநாடுகளில் மேற்படிப்பு படிக்க போலி சான்றிதழ் மற்றும் மதிப்பெண் சான்றிதழ்கள் தயாரித்து கொடுக்க ஒரு சான்றிதழுக்கு ரூ.50 ஆயிரம் மூலம் ரூ.1 லட்சம் வரை வாங்கி வந்துள்ளார். அதன்படி போலி சான்றிதழ் கேட்கும் நபர்களுக்கு, பிரபல இன்ஜினியரிங் கல்லூரிகள் பெயரில் போலியான 150க்கும் மேற்பட்ட சான்றிதழ்கள் தயாரித்து கொடுத்து வந்துள்ளார்.
அதைதொடர்ந்து கைது ெசய்யப்பட்ட அரிபாபுவின் அலுவலகத்தில் நடத்திய சோதனையில் போலி சான்றிதழ்கள் தயாரிக்க பயன்படுத்திய 1 கணினி, 1 சிபியூ, 1 எச்பி கலர் பிரின்டர், 3 ஹார்ட் டிஸ்க், 1 ஸ்கேனர், விலை உயர்ந்த 1 லேப்டாப், 3 போலி சான்றிதழ்கள், போலி சான்றிதழ்கள் தயாரிக்க வைத்திருந்த 50 பேப்பர்கள், ரூ.2 லட்சம் ரொக்கம், 3 செல்போன்கள், ஒரு பென் டிரைவ் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர், சென்னை அழைத்து வரப்பட்ட அரிபாபுவை விசாரணைக்கு பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் சிறையில் அடைத்தனர்.

 

The post வெளிநாட்டில் மேற்படிப்பு படிக்க விரும்பிய வாலிபருக்கு போலி பி.டெக் சான்றிதழை தயாரித்து கொடுத்த ஆந்திர இன்ஜினியர் கைது appeared first on Dinakaran.

Tags : Chennai ,Hemnath ,Palnadu ,Andhra ,America ,
× RELATED சென்னை மாநகராட்சி மேயர் பிரியா சென்ற கார் மீது லாரி மோதி விபத்து!