ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி பிஎம் என்றால் பனோட்டி (துரதிர்ஷ்டமான) மோடி என்று கடுமையாக தாக்கி பேசினார். ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் உள்ள வல்லப்நகர் மற்றும் பலோத்ராவில் உள்ள பேட்டூவில் நடந்த பிரசார கூட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் பங்கேற்று பேசியதாவது: மோடி டி.வி.யில் தோன்றி இந்து-முஸ்லிம் என்று பேசுகிறார். சில நேரங்களில் கிரிக்கெட் போட்டி பார்க்க சென்று விடுகிறார். போட்டியில் இந்தியா தோற்று விட்டது என்பது வேறு விஷயம். துரதிர்ஷ்டம். பிஎம் என்பதன் அர்த்தம் பனோட்டி (துரதிர்ஷ்டம்) மோடி. சாதிவாரி கணக்கெடுப்பு என்பது நாட்டின் எக்ஸ்ரே போன்றது.
எந்த பிரிவினரின் மக்கள் தொகை அதிகமாக இருக்கிறது என்பது தெரியாமல் அவர்களது நலனுக்கான கொள்கைகளை எப்படி உருவாக்க முடியும். ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சி அமைந்தால், காங்கிரஸ் தலைமையில் ஒன்றிய அரசு அமைந்தால் தேசிய அளவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும். முன்பு, பிரதமர் மோடி தான் ஓபிசி வகுப்பை சேர்ந்தவர் என கூறி வந்தார். எப்போது சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தப்பட்டதோ, அப்போதில் இருந்து நாட்டில் ஒரே ஒரு சாதி மட்டும் தான் இருக்கிறது. அது ஏழை சாதி என்று கூறுகிறார். ஆனால் கோடீஸ்வரர்கள் என்ற மற்றொரு சாதி இருப்பதை கூற மாட்டார். அது தான் அதானி, அம்பானி சாதியாகும். அவர்கள் மக்களை கொள்ளை அடிக்கும் போது, மோடி மக்களின் கவனத்தை திசை திருப்புகிறார். இவ்வாறு அவர் பேசினார்.
The post துரதிர்ஷ்டமானவர் மோடி: ராகுல் கடும் தாக்கு appeared first on Dinakaran.
