×

நீர்நிலை ஆக்கிரமிப்புக்கு பட்டா வழங்க முடியாது: ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: நீர்நிலை ஆக்கிரமிப்புக்கு பட்டா வழங்க உத்தரவிட முடியாது என ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்டம், வடிவேல்கரை புதுக்குளம் பிட் 1 பகுதியைச் சேர்ந்த பவுன்ராஜ், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: புதுக்குளம் பிட் 1 பகுதியில் நீண்ட காலமாக எனது பயன்பாட்டில் நிலம் உள்ளது. நீர்நிலை பகுதியை ஆக்கிரமித்துள்ளதாக கூறி, உடனடியாக காலி செய்யுமாறு நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நோட்டீசை ரத்து செய்து, எனது பயன்பாட்டில் உள்ள நிலத்திற்கு பட்டா வழங்குமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார்.
இந்த மனுவை நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.புகழேந்தி ஆகியோர் விசாரித்தனர். கலெக்டர் தரப்பில் தாக்கல் செய்த பதில் மனுவில், ‘புதுக்குளம் பிட் 1 பகுதியிலுள்ள பெரியகுளம் என்ற நீர்நிலையின் நீர்ப்பிடிப்பு பகுதியை மனுதாரர் ஆக்கிரமித்து தற்காலிக தகர ஷெட் அமைத்துள்ளார். அங்கு அவர் குடியிருக்கவில்லை. அதே நேரம் அவருக்கு சொந்தமான நத்தம் பட்டா நிலத்தில் கான்கிரீட் வீடு கட்டி குடியிருக்கிறார்.

அதை மறைத்து மனு செய்துள்ளார். நீர்நிலை பகுதியை ஆக்கிரமித்து பட்டா கேட்கிறார்’ என அதில் கூறப்பட்டிருந்தது. இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: வருவாய்த்துறை தரப்பில் போதுமான ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. நீர்நிலையின் ஒரு பகுதியை மனுதாரர் ஆக்கிரமித்துள்ளார். தனது கோரிக்கைக்கான எந்த ஆவணமும் அவரிடம் இல்லை. இதனால், நீர் நிலைப்பகுதிக்கு பட்டா வழங்குமாறு நீதிமன்றத்தால் உத்தரவிட முடியாது. மனுதாரர் கோரிக்கையில் எந்த முகாந்திரமும் இல்லாததால் இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. மனுதாரர் மட்டுமின்றி ஏராளமானோர் நீர்நிலைகளை ஆக்கிரமித்துள்ளனர். சம்பந்தப்பட்ட நீர்நிலையை ஆக்கிரமித்துள்ளவர்களில் மனுதாரர் மட்டுமின்றி, அனைத்து வகையான ஆக்கிரமிப்புகளையும் அதிகாரிகள் அகற்ற வேண்டும். ஆக்கிரமிப்புகள் அகற்றத்திற்கான சட்டப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டுள்ளனர்.

 

The post நீர்நிலை ஆக்கிரமிப்புக்கு பட்டா வழங்க முடியாது: ஐகோர்ட் கிளை உத்தரவு appeared first on Dinakaran.

Tags : ICourt Branch ,Madurai ,Madurai District ,Vadivelkarai ,Pudukulam… ,Dinakaran ,
× RELATED மேம்பால கட்டுமான பணிக்கு தடை விதிக்க...