×

வண்டலூர் அடுத்த நல்லம்பாக்கம் மின் நிலையத்திலிருந்து தனியார் தொழிற்சாலைக்கு மின்சாரம் வழங்க கடும் எதிர்ப்பு: கலெக்டர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

கூடுவாஞ்சேரி: வண்டலூர் அடுத்த நல்லம்பாக்கம் ஊராட்சி மக்களுக்காக அமைக்கப்பட்ட மின் நிலையத்திலிருந்து தனியார் தொழிற்சாலைக்கு மின்சாரம் வழங்குவதற்காக சாலையில் வழிநெடுக ராட்சத மின்கம்பங்கள் நடப்பட்டு வருகின்றன. இதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட வண்டலூர் அருகே உள்ள நல்லம்பாக்கம் ஊராட்சியில், நல்லம்பாக்கம், கண்டிகை, கண்டிகை பஜார், மல்ரோசாபுரம், வலம்புரி நகர், அம்பேத்கர் நகர், பெரியார் நகர், சின்ன காலனி, காந்தி நகர், இருளர் பகுதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், நல்லம்பாக்கம் ஊராட்சி பொதுமக்களின் பயன்பாட்டுக்காக அமைக்கப்பட்டுள்ள மின் நிலையத்திலிருந்து கொளப்பாக்கத்தில் உள்ள தனியார் தொழிற்சாலைக்கு மின்சாரம் வழங்குவதற்காக மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், ஊராட்சிக்கு உட்பட்ட நல்லம்பாக்கம் ஏரிக்கரையை ஒட்டியுள்ள 200 ஏக்கர் நிலப்பரப்பில் யுனிடெக் நிறுவனம் சார்பில் பல அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டுள்ளன. இதில் 500 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இந்த குடியிருப்பில் உள்ள குடும்பத்தினருக்காகவும், தலைமுறை தலைமுறையாக குடியிருந்து வரும் அப்பகுதி மக்களின் பயன்பாட்டிற்காகவும் நல்லம்பாக்கத்தில் மின் நிலையம் அமைக்கப்பட்டது. இந்நிலையில், நல்லம்பாக்கத்தில் இருந்து கிரஷர் வழியாக கொளப்பாக்கத்தில் இயங்கி வரும் தனியார் தொழிற்சாலைக்கு மேற்படி மின் நிலையத்திலிருந்து மின்சாரம் வழங்குவதற்காக கடந்த ஆண்டு பூமிக்கு அடியில் ராட்சத கேபிள் புதைக்கப்பட்டது. எதிர்காலத்தில் அத்தியாவசிய தேவைக்காக பொக்லைன் இயந்திரம் மூலம் சாலையோரத்தில் பள்ளம் தோண்டினாலோ, அல்லது வெடித்தாலோ பேராபத்து ஏற்படும் என்று கூறி பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.

மேலும் சாலையோரத்தில் இருப்பது வனத்துறைக்குச் சொந்தமான இடம் என்பதால் அனுமதி வழங்க வனத்துறையும் மறுத்துவிட்டது. இதனால் மேற்படி சாலை வழியாக கேபில் புதைக்கப்பட்டு தனியார் தொழிற்சாலைக்கு மின் இணைப்பு வழங்கும் நடவடிக்கை கைவிடப்பட்டது. இந்நிலையில், கீரப்பாக்கம் – மேலைகோட்டையூர் சாலையோரம் வழி நெடுக ராட்சத மின்கம்பங்கள் கடந்த வாரம் திடீரென நடப்பட்டன. இதில் கொளப்பாகத்தில் உள்ள மேற்படி தனியார் தொழிற்சாலையை ஒட்டியபடி 3 கிலோ மீட்டர் அருகிலேயே ஊனைமாஞ்சேரி ஊராட்சி உள்ளது. அங்குள்ள மின் நிலையத்திலிருந்து மின்சாரம் எடுக்காமல் 10 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள நல்லம்பாக்கத்தில் இருந்து மின்சாரம் எடுக்க வேண்டிய அவசியம் என்ன என்றும், இதில் ஏற்கனவே உள்ள குறைந்த மின்னழுத்த பிரச்னை, அடிக்கடி அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டு பிரச்னையால் மாணவர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் கடும் அவதிப்பட்டு வருகிறோம்.

இதில் நல்லம்பாக்கம் ஊராட்சி மக்களின் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்டுள்ள மின் நிலையத்திலிருந்து தனியார் தொழிற்சாலைக்கு மின் விநியோகம் வழங்கினால் பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாக நேரிடும். எனவே இதுகுறித்து மாவட்ட கலெக்டர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் இது தொடர்பாக தமிழக முதல்வரிடம் நேரில் சென்று முறையிடுவோம் என்றனர். இதுகுறித்து மின்வாரிய அதிகாரியிடம் கேட்டதற்கு, இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நல்லம்பாக்கம் ஊராட்சி மன்றம் சார்பில் கடிதம் கொடுத்துள்ளனர். அதனால் தற்போது மேற்படி பணியை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளோம் என்றனர்.

* ஊனைமாஞ்சேரியில் அனுமதி கேட்காதது ஏன்?
வண்டலூர் அடுத்தபடி ஊனைமாஞ்சேரி ஊராட்சியில் மின் நிலையம் உள்ளது. இங்கிருந்து 3 கிலோமீட்டர் அருகில்தான் கொளப்பாக்கத்தில் தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கிருந்து மேற்படி தொழிற்சாலைக்கு மின்சாரம் வழங்கினால் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் எந்த ஒரு இடையூறும் ஏற்படாது. ஆனால் நல்லம்பாக்கம் கூட்ரோடு, வெங்கபாக்கம் கூட்ரோடு, ரத்தினமங்கலம், கண்டிகை, மேலைகோட்டியூர் என பல கிராமங்களை தாண்டி 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நல்லம்பாக்கத்தில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்டுள்ள மின் நிலையத்திலிருந்து மேற்படி தொழிற்சாலைக்கு மின்சாரம் வழங்குவதற்காக மின்சார வாரியம் நடவடிக்கை எடுத்தால் போக்குவரத்துக்கும், பொது மக்களுக்கும் எதிர்காலத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். மேற்படி தொழிற்சாலைக்கு மின் இணைப்பு வழங்கக்கோரி அருகிலுள்ள ஊனைமாஞ்சேரி ஊராட்சியில் அனுமதி கேட்காமல் நல்லமாபாக்கம் ஊராட்சியில் அனுமதி கேட்டு கடிதம் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

The post வண்டலூர் அடுத்த நல்லம்பாக்கம் மின் நிலையத்திலிருந்து தனியார் தொழிற்சாலைக்கு மின்சாரம் வழங்க கடும் எதிர்ப்பு: கலெக்டர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Vandalur ,Nallampakkam power station ,Guduvanchery ,Nallampakkam panchayat ,Dinakaran ,
× RELATED வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஊழியரை கடித்து குதறிய முதலை