×

பாமக போராட்டத்தால் ஏற்பட்ட வருவாய் இழப்பை பொது சொத்துக்கு சேதம் ஏற்பட்டதாக கருத முடியுமா? தமிழ்நாடு அரசு பரிசீலிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள மாமல்லபுரத்தில், கடந்த 2013ல் வன்னியர் சங்கத்தினர் நடத்திய சித்திரை திருவிழாவின்போது மரக்காணத்தில் ஏற்பட்ட கலவரத்தில் பேருந்துகள் சேதப்படுத்தப்பட்டன. பல்வேறு மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் தீவைக்கப்பட்டன. பாமகவினர் போராட்டம் காரணமாக, 2013 ஏப்ரல் 25ம் தேதி முதல் மே 19ம் தேதி வரை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டதுடன், பொது போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

இதனால் ஏற்பட்ட வருவாய் இழப்பை வசூலிப்பது தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி பாமக தலைவர் ஜி.கே.மணிக்கு அரசு போக்குவரத்துக் கழகமும், டாஸ்மாக் நிர்வாகமும் நோட்டீஸ் அனுப்பியது. இதை எதிர்த்து ஜி.கே மணி 2014ம் ஆண்டு ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, விசாரணையில் தலையிட மறுத்து நோட்டீசுக்கு பதிலளிக்குமாறு உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து ஜி.கே.மணி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு, தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி பரதசக்ரவர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, பாமக தலைவர் ஜி.கே.மணி தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.எல்.ராஜா ஆஜராகி, ‘‘பொதுச் சொத்து சேத தடுப்புச் சட்டப்படி குற்றமாக இருந்தால்தான் இழப்பீடு கோர முடியும். ஆனாலும் இதுதொடர்பான வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டு உள்ளனர்.நோட்டீசும் கட்சிக்கு அனுப்பாமல், தலைவருக்கு அனுப்பப்பட்டுள்ளது என்றார். இதைக்கேட்ட தலைமை நீதிபதி அமர்வு, இதுபோல விளக்கம் கேட்டு அனுப்பப்படும் நோட்டீஸ் மீது நீதிமன்றம் தலையிடுவதில்லை.

இந்த வழக்கை பொறுத்தவரை மதுக்கடைகளும், பஸ்களும் செயல்பட முடியாததால் இழப்பு ஏற்படுத்தியதாக கூறுவது குறித்து அதிகாரிகள்தான் பரிசீலிக்க வேண்டும். அதேசமயம், வழக்குகளில் இருந்து விடுதலை ஆனதையும், வருவாய் இழப்பை பொதுசொத்து சேதமாக கருத முடியுமா என்பதையும் கருத்தில் கொண்டு அதிகாரிகள் பரிசீலிக்க வேண்டும். அரசு அனுப்பிய நோட்டீஸ் மீது மனுதாரர் தனது கூடுதல் பதிலை 15 நாளில் அளிக்க வேண்டும். அதை சட்டத்திற்குட்பட்டு அரசு பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.

The post பாமக போராட்டத்தால் ஏற்பட்ட வருவாய் இழப்பை பொது சொத்துக்கு சேதம் ஏற்பட்டதாக கருத முடியுமா? தமிழ்நாடு அரசு பரிசீலிக்க ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : BAM ,Tamil Nadu Govt ,ICourt ,Chennai ,Mamallapuram ,East Coast Road, Chennai ,Vanniyar Sangha ,Bamaka ,Tamilnadu government ,
× RELATED பாமகவினர் மீது நடவடிக்கை எடுக்கக்...