×

நேஷனல் ஹெரால்டு வழக்கு ரூ.752 கோடி சொத்து முடக்கம்: அமலாக்கத்துறை அறிவிப்பு

புதுடெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் ரூ.752 கோடி சொத்துக்களை முடக்கியிருப்பதாக அமலாக்கத்துறை நேற்று அறிவித்தது. நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை வெளியிட்டு வந்த அசோசியேட்டட் ஜர்னல்ஸ் நிறுவனத்தை, காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியாகாந்தி, அவரது மகன் ராகுல்காந்தி மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர்களை இயக்குநர்களாக கொண்ட யங் இந்தியா நிறுவனம் கையகப்படுத்தியது. இதில் சட்டவிரோத பண பரிமாற்றம் நடந்தததாக கூறி, அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் ராகுல்காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது.

அவர் தொடர்ந்து 5 நாள் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரானார். அதே போல் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியிடமும் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. இந்த நிலையில் நேஷனல் ஹெரால்டு வழக்கில் ரூ.751.90 கோடி சொத்துக்களை முடக்கியிருப்பதாக நேற்று அமலாக்கத்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதுதொடர்பாக அமலாக்கத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (பிஎம்எல்ஏ) கீழ், பத்திரிகையின் வெளியீட்டாளர் அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட் மற்றும் அதன் ஹோல்டிங் நிறுவனமான யங் இந்தியன் மீது தற்காலிக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட் டெல்லி, மும்பை மற்றும் லக்னோ போன்ற இந்தியாவின் பல நகரங்களில் இருந்து ரூ. 661.69 கோடியை யங் இந்தியா அசையாச் சொத்துக்களின் வடிவில் குற்றத்தின் மூலம் வருமானம் ஈட்டியுள்ளது விசாரணையில் தெரியவந்தது. அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் ஈக்விட்டி பங்குகளில் முதலீடு செய்த ரூ.90.21 கோடி யங் இந்தியா வசம் உள்ளது. அதுவும் முடக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேஷனல் ஹெரால்டு வழக்கின் விசாரணை தொடர்பாக அமலாக்கத்துறை முடக்கி உள்ள ரூ.90 கோடி சொத்துக்கள் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தியுடன் தொடர்புடையவை என்று கூறப்படுகிறது. மேலும் அமலாக்கத்துறை இணைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ள சொத்தில் டெல்லி மற்றும் மும்பையில் உள்ள நேஷனல் ஹெரால்டு ஹவுஸ் மற்றும் லக்னோவில் உள்ள நேரு பவன் ஆகியவை அடங்கும்.

* பா.ஜவுக்கு தோல்வி பயம்
யங் இந்தியா சொத்துக்களை முடக்கியது தொடர்பான அமலாக்கத்துறை அறிவிப்பு குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் சிங்வி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,’ அமலாக்கத்துறை மூலம் அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட் சொத்துக்கள் முடக்கப்பட்டதாக அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. 5 மாநில தேர்தல் தோல்விகளில் இருந்து கவனத்தை திசை திருப்பும் அவர்களின் விரக்தியான யுக்தியை பிரதிபலிக்கிறது. இந்த பழிவாங்கும் தந்திரங்கள் காங்கிரஸ் கட்சியையோ அல்லது எதிர்க்கட்சி கூட்டணியையோ வீழ்த்தாது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

The post நேஷனல் ஹெரால்டு வழக்கு ரூ.752 கோடி சொத்து முடக்கம்: அமலாக்கத்துறை அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : National ,Enforcement Department ,New Delhi ,Enforcement Directorate ,Congress ,National Herald ,Dinakaran ,
× RELATED கண்ணாடி முகப்பில் பாஸ்டேக் ஸ்டிக்கர்...