×

நீடிக்கும் இஸ்ரேல் – ஹமாஸ் போர் பாலஸ்தீன அகதிகளுக்கு இந்தியா ரூ.20 கோடி உதவி

ஜெருசலேம்: பாலஸ்தீன அகதிகளுக்கு உதவ ஐநா அமைப்புக்கு இந்தியா ரூ.20.5 கோடி நிதியுதவி அளித்துள்ளது. பாலஸ்தீனத்தின் காசாவை ஆளும் ஹமாஸ் படையினர் கடந்த அக்டோபர் 7ம் தேதி எல்லை தாண்டி இஸ்ரேலுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் தாக்குதல் ஒரு மாதத்தை கடந்து நீடித்து வருகிறது. வான்வழி தாக்குதலை நடத்தி வந்த இஸ்ரேல் தற்போது தரைவழி தாக்குதலையும் நடத்தி வருகிறது. இந்த போரில் காசாவில் வசிக்கும் அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்து வருகின்றனர்.

காசாவின் வடக்கு பகுதியில் இருந்து 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தென்பகுதியில் நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். இவர்கள் குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏதுமின்றி அவதியுற்று வருகின்றனர். இந்நிலையில் ‘பாலஸ்தீனிய அகதிகளுக்கான ஐநா நிவாரணம் மற்றும் பணிகள்’ என்ற அமைப்புக்கு இந்தியா ரூ.20.5 கோடி நிதியுதவி அளித்துள்ளது.

ஜெருசலேமில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாலஸ்தீனத்துக்கான இந்திய பிரதிநிதி ரேணு யாதவ், அமைப்பின் வௌியுறவுத்துறை கூட்டாண்மை இயக்குநர் கரீம் அமரிடம் நிதியுதவியை அளித்தார். இதுகுறித்து அமைப்பின் செய்தி தொடர்பாளர் தமரா அல்ரீஃபய் கூறியதாவது, “இக்கட்டான தருணத்தில் இந்தியாவிடம் இருந்து மிகவும் தராளமான நிதியுதவி கிடைத்துள்ளது மகிழ்ச்சி” என்று குறிப்பிட்டார்.

The post நீடிக்கும் இஸ்ரேல் – ஹமாஸ் போர் பாலஸ்தீன அகதிகளுக்கு இந்தியா ரூ.20 கோடி உதவி appeared first on Dinakaran.

Tags : India ,Israel ,Hamas ,war ,Jerusalem ,UN ,Palestine ,Gaza ,Dinakaran ,
× RELATED இஸ்ரேல் தலைநகர் மீது ஏவுகணைகளை ஏவி ஹமாஸ் போராளிக்குழு தாக்குதல்