×

முன்னாள் ஊராட்சி தலைவர் மீது நகை மோசடி புகார் கலெக்டர் அலுவலகம் முன் மறியல் புதுப்பெண் உள்பட 7 பேர் கைது: புகார் அளித்தவர்கள் மீது நடவடிக்கையால் பரபரப்பு

திருவள்ளூர்: கடம்பத்தூர் அடுத்த வெண்மனம்புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விநாயகம். இவரது மனைவி சிவகாமி (50). இவரிடம் கடம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் மகன் ராஜேந்திரன் (49), அவரது மனைவி கவிதா (45) ஆகியோர் கடந்த 2020ம் ஆண்டு நில பத்திரப்பதிவு செய்வதற்காக அவசர தேவைக்காக 6 சவரன் நகையை வாங்கியுள்ளனர். அதன்பின் நகையை திருப்பி கொடுக்காமல் 3 வருடங்களாக அலைக்கழித்துள்ளனர். இந்நிலையில் கடந்த செப்டம்பர் 24ம் தேதி சிவகாமி நேரில் சென்று நகையை கேட்டதற்கு தகாத வார்த்தைகளால் பேசி கீழே தள்ளி காயப்படுத்தி உள்ளனர்.

இதையடுத்து, ராஜேந்திரன் மற்றும் கவிதா மீது கடம்பத்தூர் காவல் நிலையத்தில் சிவகாமி புகார் கொடுத்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். ராஜேந்திரன் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர். இவர் பகுஜன் சமாஜ் கட்சியில் இருப்பதால் போலீசார் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டியதாக கூறப்படுகிறது. மேலும், மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் சிவகாமி புகார் கொடுத்தும் எந்த விசாரணையும் நடத்தவில்லை. சிவகாமியை போலீசார் மிரட்டியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த சிவகாமி மற்றும் அவரது மகன், மகள் மற்றும் உறவினர்களுடன் திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் புகார் கொடுக்க நேற்று வந்தனர். ஆனால் போலீசார் தடுத்து நிறுத்தினர்.

எனவே, சென்னை -திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் கலெக்டர் அலுவலகம் எதிரே இவர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனே அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அப்புறப்படுத்த முயன்றனர். அப்போது, கடம்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த தங்களை அலட்சியப்படுத்தியதாகவும், தாங்கள் புகார் அளித்த ராஜேந்திரனுக்கு சாதகமாக போலீசார் செயல்படுவதாகவும் குற்றம் சாட்டினர். நகையை மீட்டுத் தராமல் இங்கிருந்து செல்லமாட்டோம் என போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 2 மணி நேரத்திற்கும் மேலாக மறியல் ஈடுபட்ட நிலையில் மற்றொரு புறத்தில் வாகனங்களை போலீசார் இயக்கி வந்தனர். தொடர்ந்து, ஆய்வாளர் பத்ம பாபி மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், சிவகாமி குடும்பத்தினர் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

இதையடுத்து சிவகாமி குடும்பத்தினரை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று வேனில் ஏற்றி கைது செய்தனர். அவர்களின் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சந்திரா (65), சிவகாமி (50), அர்ச்சனா (43), குமுதா (42), வைஷாலி (25) மற்றும் வினோத் (23), விக்னேஷ் (25) ஆகிய 7 பேரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்களை டிசம்பர் 4ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். எனவே, 2 ஆண்கள் திருவள்ளூர் கிளை சிறையிலும், திருமணம் நிச்சயமான பெண் உள்பட 5 பெண்களை புழல் மகளிர் சிறையிலும் அடைத்தனர். இவர்களில் மறியலில் ஈடுபட்ட வைஷாலி (25) என்ற இளம்பெண்ணிற்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு அடுத்த மாதம் திருமணம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

The post முன்னாள் ஊராட்சி தலைவர் மீது நகை மோசடி புகார் கலெக்டர் அலுவலகம் முன் மறியல் புதுப்பெண் உள்பட 7 பேர் கைது: புகார் அளித்தவர்கள் மீது நடவடிக்கையால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Tiruvallur ,Vinayagam ,Venmanambudur ,Kadambathur ,Sivakami ,
× RELATED மீஞ்சூர் பகுதியில் ஓடும் காரில்...