×

புழல் ஜிஎன்டி சாலை சிக்னலில் போக்குவரத்துக்கு இடையூறாக பிச்சை எடுக்கும் வடமாநிலத்தவர்கள்: விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

புழல்: வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் என பெயரெடுத்த நமது மாநிலத்தில், பல்வேறு தொழில்கள் பலருக்கும் காத்திருக்கிறது. இதனால் வட மாநில தொழிலாளர்கள், தினமும் லட்சக்கணக்கில் தமிழ்நாட்டுக்கு வந்து சேருகின்றனர். அவர்களிடம் முறையாக ஆதார் கார்டு, வாக்காளர் அட்டை, ரேஷன் கார்டு உள்ளதா என்பதை யாரும் முறையாக ஆய்வு செய்வதில்லை. மாறாக, குறைந்த சம்பளத்தில் நமக்கு வேலைக்கு கொத்தடிமை கிடைத்தால் போதும் என நினைத்து, பலரையும் வேலைக்கு சேர்க்கின்றனர். குறிப்பாக பாலம் கட்டுவது, சாலை அமைப்பது, கட்டுமான பணிகள், ஓட்டலில் சர்வர் என்பது உள்பட பல தொழில்களில், நமது மாநில மக்களை புறந்தள்ளிவிட்டு, அவர்கள் முந்தி நிற்கின்றனர்.

சென்னை பாரிமுனை, சவுகார்பேட்டை, தங்கசாலை ஆகிய பகுதிகளில் மீன்பாடி வண்டி, சைக்கிள் ரிக்ஷா ஓட்டி வந்தவர்களும், மூட்டை தூக்கி கூலி தொழிலாளர்களாக வேலை செய்த பலரும் தற்போது எங்கே இருக்கிறார்கள் என ஜல்லடை போட்டு தேடவேண்டிய நிலைக்கு வந்துவிட்டனர். அதிலும், வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் நுழைந்துவிட்டனர். அவர்களுக்கு தங்குவதற்கு இடமும், ஒரு நாளைக்கு சொற்ப தொகையை சம்பளமாக கொடுத்தால் போதும் என வேலையில் சேர்ந்து விடுகிறார்கள். இதனால், அவர்கள் நேரம் என்பதே இல்லாமல் வேலை செய்கின்றனர். தமிழ்நாட்டில் உள்ள பல குடும்பங்களில் உள்ள முதியோர்களை யாரும் சரிவர பராமரிப்பது இல்லை. வசதி படைத்தவர்கள், தங்களது பெற்றோரை ஆசிரமத்தில் சேர்த்துவிடுகின்றனர். அவர்களை, மாதத்தில் ஒருமுறை சென்று பார்த்து, பேசி வருகின்றனர்.

வசதி இல்லாதவர்கள், முறையான உணவு, மருந்து, மாத்திரை, கவனிப்பு எதுவும் இல்லாமல் துன்புறுத்துவதால், வீட்டை விட்டு வெளியேறி கோயில்கள், நெடுஞ்சாலைகளில் பிச்சை எடுக்கும் அவல நிலை உள்ளது. இவர்களை அரசு மற்றும் தனியார் சார்பில் அமைக்கப்பட்டுள்ள சில அமைப்பினர் மீட்டு பராமரிக்கின்றனர். அதிலும் சிலர் விடுபட்டு, இன்று வரை தெருக்களில் பிச்சை எடுக்கும் அவலநிலை நீடிக்கிறது. இந்நிலையில், பிச்சை எடுக்கும் தொழிலிலும், வட மாநிலத்தை சேர்ந்தவர்கள், தமிழ்நாட்டில் போட்டிப்போடுகிறார்கள் என்பது வேதனையான விஷயமாகவே உள்ளது. பல நெடுஞ்சாலைகளில் உள்ள சிக்னல்களில் நிற்கும் வாகனங்களை மறித்து, வாகன ஓட்டிகளிடம் கையேந்துவது ஒருபுறம் பரிதாபமாக இருந்தாலும், சொந்த ஊரை விட்டு, இங்கே வந்து பிச்சை எடுக்கிறார்களே என அதிர்ச்சியடையவும் செய்கிறது.

குறிப்பாக, சென்னை – கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில், புழல் அம்பேத்கர் சிலை பஸ் நிறுத்தம் அருகிலும், செங்குன்றம் பகுதியில் உள்ள ஓட்டல்கள், டீக்கடைகள், பிரபல துணிக்கடைகள், மார்க்கெட் பகுதிகளிலும், சாலைகளின் மையப் பகுதிகளிலும் நின்று கொண்டு, வட மாநிலத்தை சேர்ந்த பலர் பிச்சை எடுத்து வருகின்றனர். இதனால் சாலையில் செல்பவர்களும் ஓட்டல் மற்றும் கடைகளுக்கு செல்பவர்களும் ஒருவித அச்சத்துடன் சென்று வருகின்றனர். மேலும், வாகன ஓட்டிகள் கவன குறைவால் விபத்துகள் ஏற்படுகிறது. எனவே தமிழக அரசின் மறுவாழ்வு துறையினர், சாலை மற்றும் கடைகள் முன்பு பிச்சை எடுப்பதை கண்டறிந்து அவர்களை மீட்டு அரசு மற்றும் தனியார் மறுவாழ்வு மையங்களில் சேர்க்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

The post புழல் ஜிஎன்டி சாலை சிக்னலில் போக்குவரத்துக்கு இடையூறாக பிச்சை எடுக்கும் வடமாநிலத்தவர்கள்: விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள் appeared first on Dinakaran.

Tags : Northerners ,Puzhal GND ,Puzhal ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED புழல் சிறையில் பரபரப்பு காவலருக்கு...