புழல்: தமிழ்நாட்டில் வட மாநில தொழிலாளர்கள் லட்சக்கணக்கில் தங்கியிருந்து கட்டிட வேலைகள், ஓட்டல் வேலைகள் உள்பட பல்வேறு பணிகளை செய்து வருகின்றனர். வேலைக்காக தினமும் பல்லாயிரக்கணக்கான வடமாநிலத்தவர்கள் தமிழகத்துக்கு வந்தவண்ணம் உள்ளனர். ஆனால் இவ்வாறு வருகின்றவர்களிடம் ஆதார் கார்டு, வாக்காளர் அட்டை, ரேஷன் கார்டு உள்ளதா என்பது குறித்து யாரும் ஆய்வு செய்வது கிடையாது. இதை பயன்படுத்தி சமூகவிரோதிகளும் வருகின்றனர். இதனால் அசம்பாவித சம்பவங்கள் நடைபெற வாய்ப்புள்ளது.
குறிப்பாக, சென்னை பாரிமுனை, சவுகார்பேட்டை மற்றும் தங்கசாலை பகுதிகளில் மீன்பாடி வண்டி, சைக்கிள் ரிக்ஷா ஆகியவற்றை ஓட்டுவதற்குகூட ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் வந்துவிட்டனர். அவர்களுக்கு தங்குவதற்கு இடமும் ஒரு நாளைக்கு சொற்ப தொகையை சம்பளம் கொடுக்கின்றனர். இவற்றை பெற்றுக்கொண்டு தங்களது பணிகளை செய்து வருகின்றனர். இந்தநிலையில், வடமாநிலத்தை சேர்ந்த பெண்கள் உள்பட ஏராளமானோர் பிச்சை எடுக்கும் தொழிலிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதில் பெரும்பாலானோர் சிக்னல் பகுதியில் ஏதாவது ஒரு பொருட்களை விற்று அதன் மூலம் வரும் வருமானத்தில் குடும்பம் நடத்தி வருகின்றனர்.
சிலர் சிக்னலில் பிச்சை எடுத்து குடும்பம் நடத்தி வருகின்றனர். சிக்னலில் வாகனங்கள் நிற்கும்போது கையில் குழந்தைகளுடன் வந்து பிச்சை கேட்கின்றனர். சில சமயங்களில் சிக்னல் விளக்கும் எரியும்போது வாகனங்கள் கிளம்பி செல்வதால் பிச்சை எடுப்பவர்களால் பிரச்னை ஏற்படுகிறது. வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கிவிடுகின்றனர். குறிப்பாக, சென்னை – கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில், புழல் அம்பேத்கர் சிலை பஸ் நிறுத்தம் அருகிலும் செங்குன்றம் பகுதியில் உள்ள ஓட்டல்கள், டீக்கடைகள், பிரபல துணிக்கடைகள், மார்க்கெட் பகுதிகளிலும், சாலைகளின் மையப் பகுதிகளிலும் நின்று கொண்டு பிச்சை எடுத்து வருகின்றனர். மேலும், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கவன குறைவால் விபத்துக்கள் ஏற்படுகிறது.
“எனவே மறுவாழ்வு துறையினர், சாலை மற்றும் கடைகள் முன்பு பிச்சை எடுப்பவர்களை மீட்டு அரசு, தனியார் மறுவாழ்வு மையங்களில் சேர்க்க வேண்டும்’’ என்று சமூகநல ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
The post வடமாநிலத்தில் இருந்து வந்துள்ளவர்கள் சிக்னலில் பிச்சை எடுப்பதால் விபத்தில் சிக்கும் வாகனங்கள் appeared first on Dinakaran.