×

சுவாமியே சரணமய்யப்பா!: சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் விமானத்தில் இருமுடி எடுத்து செல்ல ஒன்றிய அரசு அனுமதி..!!

டெல்லி: சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் விமானத்தில் இருமுடி எடுத்து செல்ல ஒன்றிய அரசு அனுமதி வழங்கியுள்ளது. கேரளாவிலுள்ள சபரிமலைக்கு ஆண்டு தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் விரதமிருந்து சென்று வருகின்றனர். சபரிமலை யாத்திரையின் போது இருமுடி எடுத்துச் செல்வது ஐதீகம். கனடா, சிங்கப்பூர், மலேசியா, நேபாளம், இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளில் வசிப்போரும், இருமுடி தாங்கி விமானம் மூலம் கேரளாவின் பல்வேறு விமான நிலையங்களுக்கு சென்று, அங்கிருந்து சபரிமலை செல்கின்றனர். இதனிடையே, இந்தியா முழுவதும் விமானங்களில் கைப்பையில் தேங்காயுடன் இருமுடி கொண்டு செல்வதற்கு பாதுகாப்பு காரணங்களுக்காக தடை விதிக்கப்பட்டிருந்தது.

கடந்த ஆண்டு ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு விமானங்களில் அதிகளவில் பயணித்தனர். அப்போது தேங்காயுடன் கூடிய இருமுடியை கொண்டு செல்வதற்கு தடை நீக்கி அனுமதி அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தனர். இதன் காரணமாக கடந்த ஆண்டு ஒன்றிய அரசு தேங்காயுடன் இருமுடி கொண்டு செல்ல அனுமதி வழங்கியது. தற்போது சபரிமலையில் ஐய்யப்பன் கோயில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். இதனால் தேங்காயுடன் கூடிய இருமுடியை கொண்டு செல்வதற்கு அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர். பக்தர்களின் கோரிக்கையை ஏற்ற ஒன்றிய விமான சேவை பாதுகாப்பு அமைச்சகம், சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் விமானத்தில் இருமுடி எடுத்து செல்ல அனுமதி வழங்கியுள்ளது.

ஜனவரி 15ம் தேதி வரை விமானத்தில் தேங்காயுடன் கூடிய இருமுடி கொண்டு செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முறையான பாதுகாப்பு சோதனைகளுக்கு பின் எடுத்து செல்லலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. எக்ஸ்-ரே, இடிடி, உடல் பரிசோதனை ஆகியவற்றை பாதுகாப்பு அதிகாரிகள் நடத்திய பிறகே பக்தர்கள் தங்களது இருமுடியை விமானங்களில் உடன் கொண்டு செல்ல முடியும் என்கின்றனர். தற்போதைய விதிமுறைகளின் படி, தேங்காய் எரியும் தன்மைகொண்டது என்பதால் விமானங்களில் அதனை எடுத்துச் செல்வது தடைசெய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

The post சுவாமியே சரணமய்யப்பா!: சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் விமானத்தில் இருமுடி எடுத்து செல்ல ஒன்றிய அரசு அனுமதி..!! appeared first on Dinakaran.

Tags : Swamiye ,EU government ,Ayyappa ,Sabarimala ,Delhi ,Kerala ,Swamiye Saranamayyappa ,
× RELATED துறைமுகங்களை தனியாருக்கு விற்று ரூ.10,000 கோடி திரட்ட ஒன்றிய அரசு முடிவு