×

10 மணி நேரம் விசாரணையை தொடர்ந்து நீர்வளத்துறை முதன்மை பொறியாளர் முத்தையா 2வது நாளாக நேரில் ஆஜர்: பறிமுதல் செய்த ஆவணங்களை வைத்து அமலாக்கத்துறை சரமாரி கேள்வி

சென்னை: மணல் குவாரிகளில் நடந்த சோதனையை தொடர்ந்து நீர்வளத்துறை முதன்மை பொறியாளர் முத்தையா இரண்டாவது நாளாக இன்றும் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்து வருகிறார். அவரிடம் சோதனையில் கிடைத்த ஆவணங்களை வைத்து கேள்விகள் கேட்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதிமுக ஆட்சியின் போது தமிழ்நாட்டில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதலாக மணல் அள்ளி பெரிய அளவில் மோசடி நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

அதைதொடர்ந்து மணல் குவாரிகளின் ஒப்பந்ததாரர்களாக பிரபல தொழிலதிபர்களான புதுக்கோட்டையை சேர்ந்த ராமச்சந்திரன், திண்டுக்கல் ரத்தினம், கரிகாலன் ஆகியோருக்கு சொந்தமான மணல் குவாரிகள், வீடுகள், அலுவலகங்கள் மற்றும் பொதுப்பணித்துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற பொறியாளர் திலகம், நீர்வளத்துறை முதன்மை பொறியாளர் முத்தையா ஆகியோருக்கு சொந்தமான இடங்கள் என 34 இடங்களில் கடந்த செப்டம்பர் 12ம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். கணக்கில் வராத பல கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள், ரூ.12.82 கோடி ரொக்க பணம், ரூ.56.86 லட்சம் மதிப்புள்ள 1024 கிராம் தங்கம் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அதைதொடர்ந்து மணல் குவாரி முறைகேடு தொடர்பாக மணல் குவாரிகள் அமைந்துள்ள மாவட்டங்களில் பணியாற்றிய 10 மாவட்ட ஆட்சியர்கள், நீர்வளத்துறை முதன்மை பொறியாளர் முத்தையா, ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை பொறியாளர் திலகம் ஆகியோருக்கு அமலாக்கத்துறை நேரில் வந்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று சம்மன் அனுப்பி இருந்தது.அந்த சம்மனை தொடர்ந்து நேற்று நீர்வளத்துறை முதன்மை பொறியாளர் முத்தையா நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் முக்கிய ஆவணங்களுடன் விசாரணை அதிகாரிகள் முன்பு நேரில் ஆஜராகினர். பின்னர் 10 மணி நேரம் விசாரணைக்கு பிறகு முதன்மை பொறியாளர் முத்தையாவை நாளை காலை இன்று நேரில் ஆஜராக வேண்டும் என்று கூறி அமலாக்கத்துறை அதிகாரிகள் அனுப்பினர்.

அதைதொடர்ந்து நீர்வளத்துறை முதன்மை பொறியாளர் முத்தையா இரண்டாவது நாளாக இன்று காலை 11 மணிக்கு மீண்டும் அமலாக்கத்துறை அதிகாரிகள் முன்பு ஆஜரானார். அவரிடம் நேற்று நடந்த விசாரணையின் போது, சில ஆவணங்களை இன்று தாக்கல் செய்ய வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். அதை தொடர்ந்து முத்தையா இரண்டாம் நாள் விசாரணையின் போது, அமலாக்கத்துறை அதிகாரிகள் கேட்ட மணல் குவாரிகள் தொடர்பான விற்பனை விபரங்கள், ஒப்பந்துபுள்ளிக்கான விபரங்கள் அடங்கிய ஆவணங்களை அவர் கொண்டு வந்ததாக கூறப்படுகிறது.

முத்தையாவிடம் நடத்தப்படும் விசாரணை விபரங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் வெளியே விடவில்லை. இருந்தாலும், முத்தையா அளித்த வாக்குமூலத்தை தொடர்ந்து, ஏற்கனவே சம்மன் அனுப்பப்பட்ட 10 ஐஏஎஸ் அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்படும் என்று அதிகாரிகள் வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது.

The post 10 மணி நேரம் விசாரணையை தொடர்ந்து நீர்வளத்துறை முதன்மை பொறியாளர் முத்தையா 2வது நாளாக நேரில் ஆஜர்: பறிமுதல் செய்த ஆவணங்களை வைத்து அமலாக்கத்துறை சரமாரி கேள்வி appeared first on Dinakaran.

Tags : Water Resources Department ,Chief Engineer ,Muthiah ,Enforcement Department ,CHENNAI ,
× RELATED நீர்வளத்துறையில் காலியாக உள்ள ஓட்டுநர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்