×

வெங்காயம், உருளைக்கிழங்கு ஏற்றுமதி செய்வதாக கூறி ₹3000 கோடி முதலீடு பெற்று மோசடி: கலெக்டர், எஸ்பி ஆபீசில் புகார்

கிருஷ்ணகிரி: இலங்கைக்கு வெங்காயம், உருளைக்கிழங்கு ஏற்றுமதி செய்வதாக கூறி முதலீடு பெற்று ₹3 ஆயிரம் கோடி மோசடி செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கிருஷ்ணகிரி கலெக்டர் மற்றும் எஸ்.பி. அலுவலகத்தில் பொதுமக்கள் புகார் அளித்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி சுற்றுவட்டாரம் மற்றும் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை உள்ளிட்ட சுற்றுவட்டாரத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர், எஸ்.பி அலுவலகங்களில் புகார் மனு ஒன்றை அளித்தனர்.

பின்னர் அவர்கள் கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த யூனிக் எக்ஸ்போர்ட் நிறுவனத்தை ஈரோட்டை சேர்ந்த நவீன், விருதுநகர் முத்துசெல்வன் ஆகியோர் நடத்தி வந்தனர். இந்நிறுவனம் மூலம், இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு வெங்காயம், மிளகாய், உருளைக்கிழங்கு உள்ளிட்ட பொருட்களை ஏற்றுமதி செய்வதன் மூலம் அதிக வருவாய் கிடைப்பதாகவும், இதில் மூதலீடு செய்தால், கிடைக்கும் வருவாய் பகிர்ந்து அளிக்கப்படும் எனவும் போச்சம்பள்ளி புளியம்பட்டியை சேர்ந்த அரசு பஸ் ஓட்டுநர் திருமால், அவரது மனைவி அம்பிகா, முன்னாள் ராணுவ வீரர் நீலமேகம் உள்ளிட்ட சிலர், எங்களிடம் தெரிவித்தனர்.

குறிப்பாக ₹1 லட்சம் முதலீடு செய்தால், மாதம் ₹18 ஆயிரம் வீதம், 10 மாதங்களில் திருப்பி அளிக்கப்படும் என தெரிவித்தனர். இதனை நம்பி முதலீடு செய்த, எங்களுக்கு 10 மாதம் பணத்தை வழங்கினர். பின்னர், பல்வேறு கவர்ச்சிகரமான திட்டங்களை அறிமுகம் செய்தனர். இதனை நம்பி போச்சம்பள்ளி, கிருஷ்ணகிரி உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் கோடிக்கணக்கில் முதலீடு செய்தனர்.

மேலும், இலங்கையில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டபோது, அதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட இவர்கள், நாங்கள் முதலீடு செய்த பணத்தை திருப்பி கொடுக்காமல் தலைமறைவாகிவிட்டனர். இதுவரை ₹3 ஆயிரம் கோடிக்கு மேல் மோசடி செய்துள்ளது தெரியவந்துள்ளது. எனவே, அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்ட எங்களுக்கு பணத்தை மீட்டு தருமாறு கேட்டு மனு அளித்துள்ளோம் என்றனர்.

The post வெங்காயம், உருளைக்கிழங்கு ஏற்றுமதி செய்வதாக கூறி ₹3000 கோடி முதலீடு பெற்று மோசடி: கலெக்டர், எஸ்பி ஆபீசில் புகார் appeared first on Dinakaran.

Tags : SP ,Krishnagiri ,Sri Lanka ,Dinakaran ,
× RELATED சிவகங்கைக்கு புதிய எஸ்பி நியமனம்