×

கம்பன் நினைவிடத்திற்கு சாலை அமைக்கக்கோரி மனு

 

சிவகங்கை, நவ.21: சிவகங்கை அருகே கண்டனிப்பட்டியில் இருந்து கம்பன் நினைவிடத்திற்கு புதிய சாலை அமைக்க வேண்டும் என வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. திமுக நிர்வாகி காளைமணி மற்றும் கிராமத்தினர் சார்பில் குறைதீர் கூட்டத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: நாட்டரசன் கோட்டையில் கம்பன் நினைவிடம் உள்ளது. சிவகங்கையிலிருந்து காளையார்கோவில் செல்லும் தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து கண்டனிப்பட்டி, கருதுப்பட்டி வழி நாட்டரசன் கோட்டை கம்பன் நினைவிடம் வரை செல்லும் இச்சாலை சுமார் 3 கி.மீ தூரம் கொண்டது.

இந்த சாலை கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்டது. மண் சாலையாக இருந்து முதன்முறையாக தார்ச்சாலையாக மாற்றப்பட்ட பின்னர் எவ்வித பராமரிப்பும் செய்யாமல் விடப்பட்டுள்ளது. கம்பன் நினைவிடத்திற்கு சிறிது தூரம் முன்வரை நாட்டரசன்கோட்டை பேரூராட்சி சாலையாகவும், எஞ்சிய தூரம் காளையார்கோவில் யூனியன் சாலையாகவும் உள்ளது. இதில் பேரூராட்சி எல்கைக்கு உட்பட்ட பகுதியில் மட்டும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் புதிய சாலை அமைக்கப்பட்டது.

ஆனால் எஞ்சிய தூரத்திற்கு புதிய சாலை அமைக்க யூனியன் நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் சாலை, போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் இப்பகுதி துண்டிக்கப்பட்டுள்ளது. இந்த சாலையை கண்டனிப்பட்டி, கருதுப்பட்டி, நாட்டரசன்கோட்டை, கொல்லங்குடி, வாக்காட்டுப்பட்டி உள்ளிட்ட ஏராளமான ஊர் மக்கள் பயன்படுத்துகின்றனர். எனவே இந்த சாலையை உடனடியாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

The post கம்பன் நினைவிடத்திற்கு சாலை அமைக்கக்கோரி மனு appeared first on Dinakaran.

Tags : Kampan Memorial ,Sivagangai ,Kandanipatti ,Dinakaran ,
× RELATED தொழில் நுட்பங்களை பின்பற்றினால் எள்ளில் அதிக மகசூல் பெறலாம்