ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே, பெற்ற தாயே தனது ஒரு மாத குழந்தையை ரூ.3 லட்சத்திற்கு விற்பனை செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக தாய் உட்பட 4 பெண்களை போலீசார் கைது செய்தனர்.
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே சேத்தூர், ஜீவா நகர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முனீஸ்வரன். மனைவி முத்துச்சுடலி. இவர்களுக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகிறது. ஒரு மாதத்திற்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் முத்துச்சுடலி உடல் நல பாதிப்புக்கு சிகிச்சை பெற சேத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்றார்.
அப்போது டாக்டர்கள், குழந்தையை எங்கே என கேட்டுள்ளனர். இதற்கு முத்துச்சுடலி, குழந்தை இறந்து விட்டதாக கூறியுள்ளார். இதையடுத்து டாக்டர்கள், குழந்தையின் உடலை எங்கே புதைத்தீர்கள் என துருவி துருவி விசாரணை செய்தனர். இதில் குழந்தையை விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து விருதுநகர் குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரி திருப்பதிக்கு, டாக்டர்கள் தகவல் தெரிவித்தனர். அவர் கொடுத்த புகாரின்பேரில் சேத்தூர் போலீசார், முத்துச்சுடலியை பிடித்து விசாரணை நடத்தினர்.
இதில், குழந்தை புரோக்கர்களான முகவூரை சேர்ந்த ராஜேஸ்வரி, தென்காசி மாவட்டம், பெருமத்தூரை சேர்ந்த ரேவதி ஆகியோர் மூலம் ஈரோடு மாவட்டம், மாணிக்கம்பாளையத்தை சேர்ந்த தம்பிராஜ் மனைவி அசினாவிடம் (35) கடந்த 25ம் தேதி ரூ.3 லட்சத்திற்கு விற்பனை செய்ததாக தெரிவித்தார். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிந்து, குழந்தையின் தாய் முத்துச்சுடலி, புரோக்கர்கள் ராஜேஸ்வரி, ரேவதி, குழந்தையை வாங்கிய அசினா ஆகியோரை நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். குழந்தையையும் அதிரடியாக மீட்டனர். பெற்ற தாயே குழந்தையை ரூ.3 லட்சத்திற்கு விற்பனை செய்த சம்பவம் ராஜபாளையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
The post ராஜபாளையம் அருகே ஒரு மாத ஆண் குழந்தை ரூ.3 லட்சத்திற்கு விற்பனை: தாய் உட்பட 4 பெண்கள் கைது appeared first on Dinakaran.
