×

தமிழகத்தில் அனைத்து மருத்துவமனைகளிலும் மருத்துவ கட்டமைப்பு படுக்கை வசதிகள் உள்ளன: விஜயபாஸ்கருக்கு அமைச்சர் சுப்பிரமணியன் பதிலடி

சென்னை: தமிழகத்தில் அனைத்து மருத்துவமனைகளிலும் போதிய மருத்துவ கட்டமைப்புகளும் படுக்கை வசதிகளும் உள்ளன என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்துள்ளார். சென்னை, எழும்பூர் மகப்பேறு அரசு மருத்துவமனையில் உள்ள கூட்டரங்கில் உயர் பிறப்பு வரிசை குறைப்பு மற்றும் குடும்பநல அறுவை சிகிச்சையில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவக்கல்லூரி முதல்வர்கள், இணை இயக்குநர்கள், துணை இயக்குநர்கள் மற்றும் மருத்துவ அலுவலர்களுக்கு விருதுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று வழங்கினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் மொத்த கருவள விகிதம் என்பது 2.1 என்கின்ற அளவில் இருந்தது. ஆனால் தற்போது தமிழ்நாட்டில் மொத்த கருவள விகிதம் 1.4 என்கின்ற அளவில் கட்டுக்குள் இருக்கிறது. இந்தியாவிலேயே கருவள விகிதம் மிகக் குறைவாக கட்டுக்குள் இருக்கின்ற மாநிலத்தில் தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கிறது. 2000ல் 120 ஆக இருந்த மகப்பேறு மரண விகிதம் இப்பொழுது 54 ஆக குறைக்கப்பட்டுள்ளது. 1971-ல் 113 ஆக இருந்த சிசு மரண விகிதம் தற்போது 13 ஆக குறைக்கப்பட்டுள்ளது. 1985ல் 37.8% இருந்த உயர்வரிசை பிறப்பு 2022 ல் 6.7% குறைக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் செந்தில் பாலாஜி உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இன்று அல்லது நாளை சிகிச்சை குறித்த முழு விவரம் தெரிவிக்கப்படும். அதேபோல தேமுதிக தலைவர் விஜயகாந்த் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தாலும் உடல் நிலை சீராக உள்ளது, அவருக்கு ஏற்கனவே சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இருப்பதால் தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர். முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் எந்த மருத்துவமனையில் போதிய படுக்கை வசதி இல்லை என ஆய்வு செய்து கொள்ளலாம். இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கு 86 சேர்க்கைக்கு அனுமதிக்கப்பட்டது. இவர்களுக்கு கலந்தாய்வு முடிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் செல்லாமல் சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்புகளுக்கு அனுமதி தர வேண்டும் என்று ஒன்றிய அரசுடன் கோரியிருந்தோம்.

அதனடிப்படையில் தற்போது அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. மொத்தம் உள்ள காலியிடங்களில் தமிழ்நாட்டிற்கு 50% அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. முதுகலை மருத்துவ படிப்பில் மாணவர் சேர்க்கை குறித்து ஒன்றிய அரசுக்கு எழுதப்பட்ட கடிதத்திற்கு இன்னும் பதில் அளிக்கப்படவில்லை என்றார். இந்நிகழ்வில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்தவத்துறை இயக்குநர் செல்வவிநாயகம், மருத்துவம் மற்றும் ஊரகநலப்பணிகள் இயக்குநர் சண்முகக்கனி, குடும்பலத்துறை இயக்குநர் மரு.ஹரிசுந்தரி, சென்னை அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் மரு.தேரணிராஜன், எழும்பூர் மகப்பேறு அரசு மருத்துவமனை இயக்குநர் கலைவாணி உள்ளிட்ட உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post தமிழகத்தில் அனைத்து மருத்துவமனைகளிலும் மருத்துவ கட்டமைப்பு படுக்கை வசதிகள் உள்ளன: விஜயபாஸ்கருக்கு அமைச்சர் சுப்பிரமணியன் பதிலடி appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Minister ,Subramanian ,Vijayabaskar ,Chennai ,M. Subramanian ,
× RELATED புற்றுநோயை உண்டாக்கும்...