×

ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ்: 7வது முறையாக ஜோகோவிச் சாம்பியன்

டுரின்: ஏடிபி உலக டூர் பைனல்ஸ் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில், செர்பியாவின் நோவாக் ஜோகோவிச் 7வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தார். ஆண்டு இறுதி தரவரிசையில் டாப் 8 இடங்களைப் பிடித்த வீரர்கள் மற்றும் ஜோடிகள் பங்கேற்ற இந்த தொடர், இத்தாலியின் டுரின் நகரில் நடைபெற்றது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் உள்ளூர் நட்சத்திரம் யானிக் சின்னருடன் (22 வயது, 4வது ரேங்க்) மோதிய ஜோகோவிச் (36 வயது, முதல் ரேங்க்) அதிரடியாக விளையாடி 6-3, 6-3 என்ற நேர் செட்களில் வென்று 7வது முறையாக கோப்பையைக் கைப்பற்றி அசத்தினார்.இப்போட்டி 1 மணி, 43 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது.

லீக் சுற்றில் சின்னரிடம் அடைந்த தோல்விக்கு பைனலில் ஜோகோவிச் பழிதீர்த்தது குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றியின் மூலம் நம்பர் 1 அந்தஸ்தை மேலும் வலுப்படுத்திக்கொண்ட அவர், தரவரிசையில் 400வது வாரமாக முதலிடத்தில் நீடிக்கும் சாதனையையும் வசப்படுத்தி உள்ளார். இதே தொடரின் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இங்கிலாந்தின் ஜோ சாலிஸ்பரி – ராஜீவ் ராம் (அமெரிக்கா) ஜோடி 6-3, 6-4 என்ற நேர் செட்களில் ஸ்பெயினின் கிரானோலர்ஸ் – ஸெபல்லாஸ் (அர்ஜென்டினா) ஜோடியை வீழ்த்தி கோப்பையை முத்தமிட்டது.

 

The post ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ்: 7வது முறையாக ஜோகோவிச் சாம்பியன் appeared first on Dinakaran.

Tags : ATP Finals Tennis ,Djokovic ,Turin ,Novak Djokovic ,Serbia ,ATP World Tour Finals tennis series ,ATP Finals ,Dinakaran ,
× RELATED விம்பிள்டன் டென்னிஸ்; அரையிறுதியில்...