×

ஐசிசி கனவு அணிக்கு ரோகித் கேப்டன்

துபாய்: உலக கோப்பையில் சிறப்பாக விளையாடிய 12 வீரர்களைக் கொண்ட கனவு அணியை ஐசிசி அறிவித்துள்ளது. கேப்டனாக ரோகித் ஷர்மா உள்பட மொத்தம் 6 இந்திய வீரர்கள் அணியில் இடம் பிடித்துள்ளனர். உலக கோப்பையை இந்தியா வெல்லாவிட்டாலும் தொடர் முழுவதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அணியாக உள்ளது. அரையிறுதி வரை இந்தியா வீழ்த்தாத அணியே இல்லை. இந்த தொடரில் அதிக ரன் குவித்த வீரராக கோஹ்லி, அதிக விக்கெட் எடுத்தவராக ஷமி, அதிக வெற்றிகளை பெற்ற கேப்டனாக ரோகித் என இந்திய வீரர்கள் அமர்க்களப்படுத்தி இருந்தனர். இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி), பைனல் வரை நடந்த ஆட்டங்களின் அடிப்படையில் சிறந்த வீரர்களைக் கொண்ட ஐசிசி உலக அணியை அறிவித்துள்ளது. இந்த அணிக்கான வீரர்களை அயன் பிஷப், காஸ் நாய்டூ, ஷேன் வாட்சன் (வர்ணனையாளர்கள்), வாசிம்கான் ( ஐசிசி பொது மேலாளர்), சுனில் வைத்யா (பத்திரிகையாளர்) ஆகியோர் இணைந்து தேர்வு செய்துள்ளனர்.மொத்தம் 11 பேர் கொண்ட அணியில் சாம்பியன் ஆஸ்திரேலியா, 2வது இடம் பிடித்த இந்தியா, அரையிறுதியில் களம் கண்ட தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகளை சேர்ந்த வீரர்கள் மட்டும் இடம் பிடித்துள்ளனர்.

இவர்கள் சிறப்பாக விளையாடியதுடன் இந்த தொடரில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளனர். இந்திய அணியின் கேப்டன் ரோகித், ஐசிசி கனவு அணியின் கேப்டனாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருடன் கோஹ்லி, ஷமி, ராகுல், பும்ரா, ஜடேஜா என 6 இந்திய வீரர்கள் ஐசிசி அணியில் இடம் பிடித்துள்ளனர். சாம்பியன் அணியில் இருந்து மேக்ஸ்வெல், ஆடம் ஸம்பா ஆகியோரும், தென் ஆப்ரிக்காவின் டி காக், நியூசிலாந்தின் டேரில் மிட்செல், இலங்கையின் தில்ஷன் மதுஷங்கா ஆகியோரும் தேர்வாகி உள்ளனர். 12வது வீரராக தென் ஆப்ரிக்காவின் ஜெரால்டு கோட்ஸீ சேர்க்கப்பட்டுள்ளார். தொடக்க வீரர்களாக டி காக் (விக்கெட் கீப்பர்), ரோகித் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த தொடரில் ரோகித் 597, டி காக் 594 ரன் குவித்துள்ளனர். 3வது இடத்தில் ரன் குவிப்பில் முதலிடம் பிடித்த கோஹ்லி (765 ரன்), 4வது இடத்தில் மிட்செல் (552 ரன்), 5வது இடத்தில் ராகுல் (452 ரன்) ஆகியோர் பேட்ஸ்மேன்களாக களமிறங்க தேர்வாகி உள்ளனர்.

 

The post ஐசிசி கனவு அணிக்கு ரோகித் கேப்டன் appeared first on Dinakaran.

Tags : Rohit ,ICC ,DUBAI ,World Cup ,Rohit Sharma ,Dinakaran ,
× RELATED ரோகித், கோலி 2027 உலகக்கோப்பை விளையாடுவார்களா? : கம்பீர் பதில்