×

அரசு கல்லூரிக்கு கட்டிடம் கட்ட ரீட் கூட்டுறவு இடம் ஒதுக்கீடு அரசாணை பிறப்பிக்க வேண்டும்: திருவொற்றியூர் மண்டல குழுவில் தீர்மானம்

திருவொற்றியூர்: திருவொற்றியூர் பூந்தோட்ட தெருவில் உள்ள சென்னை பல்கலைக்கழக கலை மற்றும் அறிவியல் உறுப்பு கல்லூரியில் சுமார் 900க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். கடந்த 2008ம் ஆண்டு திமுக ஆட்சியின் போது முன்னாள் அமைச்சர் மறைந்த கே.பி.பி.சாமி திருவொற்றியூரில் அரசு கல்லூரி தொடங்க வேண்டும் என்று அப்போதைய முதல்வர் மறைந்த கருணாநிதியிடம் கோரிக்கை விடுத்தார். அதன் அடிப்படையில், இதற்கான திட்ட வரைவு தயாரிக்கப்பட்டது. தொடர்ந்து 11.8.2012ல் பூந்தோட்ட தெருவில் இயங்கி வந்த ஆரம்ப பள்ளியில் தற்காலிகமாக திருவொற்றியூரில் அரசு கல்லூரி தொடங்கப்பட்டது. இந்நிலையில், இந்த கட்டிடத்தில் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப போதுமான வகுப்பறைகள் இல்லை. இதனால் 2 ஷிப்ட்டுகளாக மாணவ, மாணவிகள் படிக்க வேண்டிய அவலநிலை உள்ளது. இந்த கல்லூரிக்கு புதிய கட்டிடம் கட்டி தர வேண்டும் என்று பெற்றோர்களும், மாணவர்களும் கடந்த அதிமுக ஆட்சியில் கோரிக்கை விடுத்தனர். அதன் அடிப்படையில் கல்லூரி அமைந்துள்ள பூந்தோட்ட தெருவிலேயே கல்லூரிக்கு கல்வி கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், பல்வேறு காரணங்களால் அந்த பணி நடைபெறவில்லை.

இந்நிலையில், கடந்த ஆண்டு நடந்த சட்டமன்ற கூட்டத்தில் திருவொற்றியூர் கல்லூரிக்கு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என்று கே.பி.சங்கர் எம்.எல்.ஏ, முதல்வரிடம் கோரிக்கை விடுத்தார். இதனை தொடர்ந்து விம்கோ நகர் அருகே உள்ள ரீட் கூட்டுறவுக்கு சொந்தமான இடத்தை கே.பி.சங்கர் எம்எல்ஏ மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து கல்லூரிக்கு கட்டிடம் கட்ட இடம் தேர்வு செய்து துறை ரீதியான ஆவன நடவடிக்கை எடுத்தனர். ஆனாலும் இந்த இடம் ஒதுக்கீடு தொடர்பான ஆவணம் முழுமை பெறாமல் அப்படியே கிடப்பில் உள்ளதால் கல்லூரிக்கு கட்டிடம் கட்ட முடியாத நிலை உள்ளது. எனவே, தொடர்ந்து மாணவ, மாணவிகள் இடநெருக்கடியில் பாடம் படித்து வருகின்றனர். இந்நிலையில் திருவொற்றியூர் மண்டல குழு தலைவர் தி.மு.தனியரசு தலைமையில் நடந்த மண்டல குழு கூட்டத்தில் திருவொற்றியூர் அரசு கல்லூரிக்கு கட்டிடம் கட்ட ரீட் கூட்டுறவு இடத்தை ஒதுக்கீடு அரசாணை பிறப்பிக்க வேண்டும் என்று தி.மு.தனியரசு மற்றும் கவுன்சிலர்கள் சார்பில் முதல்வருக்கு கோரிக்கை விடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 

The post அரசு கல்லூரிக்கு கட்டிடம் கட்ட ரீட் கூட்டுறவு இடம் ஒதுக்கீடு அரசாணை பிறப்பிக்க வேண்டும்: திருவொற்றியூர் மண்டல குழுவில் தீர்மானம் appeared first on Dinakaran.

Tags : Thiruvottiyur Zonal Committee ,Tiruvotiyur ,Chennai University College of Arts and Science ,Thiruvotiyur Poonthota Street… ,Reed Co ,
× RELATED திருவொற்றியூரில் தேர்தல் பிரசார...