×

சிகிச்சை பெற வந்தபோது விபரீதம் மருத்துவ கல்லூரி பேராசிரியைக்கு லவ் ெலட்டர் கொடுத்து பாலியல் சீண்டல்: பெண் வன்கொடுமை சட்டத்தில் ஆசாமி கைது

சென்னை: அபிராமபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற வந்த இடத்தில், ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி பெண் உதவி பேராசிரியருக்கு ‘லவ் ெலட்டர்’ கொடுத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசாமியை போலீசார் ‘‘பெண் வன்கொடுமை சட்டத்தின் கீழ்’ கைது செய்தனர். சென்னை ராஜா அண்ணாமலைபுரம் பகுதியை சேர்ந்தவர் கலா(40)(பெயர் மாற்றப்பட்டுள்ளது). டாக்டரான இவர், தற்போது ஸ்டான்லி அரசு மருத்துவ கல்லூரியில் உதவி பேராசிரியராக உள்ளார். இவர் பகுதி நேரமாக அபிராமபுரம் காமராஜர் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் டாக்டராக பணியாற்றி வருகிறார். கடந்த 18ம் தேதி டாக்டரான உதவி பேராசிரியர் கலா, தனியார் மருத்துவமனையில் பணியில் இருந்தார். அப்போது 49 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர், கழுத்தில் கட்டிக்காக தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்தார். டாக்டரை பார்ப்பதற்கு முன்பு, அந்த நபர், ஏற்கனவே டாக்டர் கலா மருந்து எழுதி கொடுத்த சீட்டின் பின்புறம், ‘டாக்டர் நீங்கள் அழகாக இருக்கீங்க…. உங்களை எனக்கு ரொம்ப பிடித்து இருக்கு… எப்ப சந்திக்கலாம்’ என எழுதி டாக்டர் கலாவிடம் கொடுத்துள்ளார்.

முதலில் சிகிச்சைக்கு வந்த நபர் கொடுத்த மருந்து சீட்டை டாக்டர் கலா பார்க்கவில்லை. பிறகு சிகிச்சைக்கு வந்த நபரின் கழுத்தில் உள்ள கட்டியை டாக்டர் ஆய்வு செய்தார். அப்போது திடீரென சிகிச்சைக்கு வந்த நபர், டாக்டரின் தொடையில் கையை வைத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதை சற்றும் எதிர்பார்க்காத பெண் டாக்டர் உதவி கேட்டு சத்தம் போட்டுள்ளார். உடனே சிகிச்சைக்கு வந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். பிறகு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த பொதுமக்கள் பெண் டாக்டரிடம் என்ன என்று கேட்டனர். அப்போது நடந்த சம்பவத்தை கூறி பெண் டாக்டர் அழுதுள்ளார். பிறகு தப்பி ஓடிய நபர் கொடுத்த மருத்து சீட்டை பார்த்த போது, தான் அவர் டாக்டருக்கு ‘லவ் லட்டர்’ எழுதி கொடுத்து இருந்தது தெரியவந்தது. உடனே சம்பவம் குறித்து பெண் டாக்டர் அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அந்த புகாரின் படி, போலீசார் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த பொதுமக்கள் அளித்த தகவலின் படி ராஜா அண்ணாமலைபுரம் காமராஜர் சாலையை சேர்ந்த எல்லப்பன்(49) என தெரியவந்தது. உடனே போலீசார் அதிரடியாக எல்லப்பனை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது, எந்த வேலையும் செய்யாமல் ஊதாரியாக சுற்றி வந்ததாகவும், தனது கழுத்தில் உள்ள கட்டிக்காக டாக்டரை பார்க்க இந்த மருத்துவமனைக்கு வந்ததாகவும், அவர் மிகவும் பணிவுடன் உடலில் என்ன பிரச்னை என்று கேட்டு சிகிச்சை அளிக்கிறார். இது எனக்கு மிகவும் படித்து இருந்தது. அதனால் தான் அவருக்கு லவ் லட்டர் கொடுத்து தன் வழிக்கு மடக்க நினைத்ததாக தெரிவித்துள்ளார். அதைதொடர்ந்து போலீசார் எல்லப்பன் மீது பெண்கள் வன் கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் ராஜா அண்ணாமலைபுரம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

 

The post சிகிச்சை பெற வந்தபோது விபரீதம் மருத்துவ கல்லூரி பேராசிரியைக்கு லவ் ெலட்டர் கொடுத்து பாலியல் சீண்டல்: பெண் வன்கொடுமை சட்டத்தில் ஆசாமி கைது appeared first on Dinakaran.

Tags : Viparaetham medical college ,Asami ,CHENNAI ,Abhiramapuram ,Stanley Government Medical College ,
× RELATED அடுக்குமாடி குடியிருப்பில்...