×

மகளிர் சுயஉதவி குழுக்களிடம் லட்சக்கணக்கில் மோசடி அப்ரோ யேசுதாசுக்கு 7 ஆண்டு கடுங்காவல் சிறை: எழும்பூர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

சென்னை: சுய உதவி குழுக்களிடம் மோசடி செய்த கொளத்தூர் அப்ரோ, ஐ.பி பவுன்டேஷன் அறக்கட்டளைகளின் தலைவர் நடத்தி வந்த ஐ.பி.ஏசுதாசுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இது குறித்த விவரம் வருமாறு: அப்ரோ தலைவரான யேசுதாசும், செயலாளராக எண்ணூரை சேர்ந்த எஸ்.தேவி என்பவரும், அறக்கட்டளைக்கு பணம் வசூல் செய்து தருபவராக குறிஞ்சிப்பாடியை சேர்ந்த எஸ்.கிரிஜாவும் இருந்தனர். இந்நிலையில், மகளிர் சுய உதவி குழுவை சேர்ந்த உறுப்பினர்களுக்கு 50 பைசா வட்டியில் ரூ.20 ஆயிரம், ரூ.50 ஆயிரம், ரூ.1 லட்சம் வழங்கப்படும் என்று அறிவிப்பு செய்தார். இந்த கடனை பெற ரூ.1 லட்சத்துக்கு விண்ணப்ப கட்டணமாக ரூ.600ம், வைப்பீடு தொகையாக ரூ.5,600 அறக்கட்டளையால் வசூலிக்கப்பட்டது.

இந்த வகையில் 13 சுய உதவி குழுக்களை சேர்ந்த 227 உறுப்பினர்கள் கிரிஜாவின் ஆசை வார்த்தையை நம்பி வைப்பீடு தொகையாக ரூ.16 லட்சத்து 11,500 தொகையை 2012ல் யேசுதாசிடம் கொடுத்துள்ளனர். இதேபோல் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களிடமிருந்து மொத்தம் ரூ.37 லட்சத்து 34,500 வசூல் செய்துள்ளனர். இவர்கள் மீதான வழக்கு எழும்பூர் தலைமை பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி கோதண்டராஜ் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில் குற்றச்சாட்டுகள் போதிய ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டதால் யேசுதாஸ், தேவி, கிரிஜா ஆகியோருக்கு தலா 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும் தலா ரூ.14 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்ட அபராதத்தையும் சேர்த்து மொத்தம் ரூ.46 லட்சம் விதிக்கப்பட்டது. இந்த தொகையில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கான ரூ.35 லட்சத்து 98,100ஐ அந்தந்த குழுக்களுக்கு குற்ற அறிக்கையில் கூறப்பட்டுள்ளபடி வழங்க வேண்டும் என்றும் நீதிபதி தீர்ப்பில் கூறியுள்ளார்.

The post மகளிர் சுயஉதவி குழுக்களிடம் லட்சக்கணக்கில் மோசடி அப்ரோ யேசுதாசுக்கு 7 ஆண்டு கடுங்காவல் சிறை: எழும்பூர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Abro Yesudas ,Egmore ,CHENNAI ,Kolathur Apro ,IP Foundation Trusts ,IP Yesudas ,
× RELATED பொள்ளாச்சி, உடுமலை வழியாக கோவை-சென்னை...