×

வெங்கப்பாக்கம் அரசு பள்ளியில் முன்னாள் மாணவ, மாணவியர் சந்திப்பு நிகழ்ச்சி

திருக்கழுக்குன்றம்: வெங்கப்பாக்கம் அரசு பள்ளியில் 30 ஆண்டுகளுக்கு முன் பயின்ற முன்னாள் மாணவ, மாணவியர் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. கல்பாக்கம் அடுத்த வெங்கம்பாக்கம் அரசினர் மேல்நிலைப்பள்ளி, கடந்த 1991-92ம் ஆண்டு நடுநிலை பள்ளியாக இருந்தபோது, அதில் படித்த முன்னாள் மாணவ, மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நேற்று நடந்தது.

சுமார் 30 ஆண்டுகளுக்கு பின்னர் தமக்கு கல்வி கற்பித்த ஆசிரியர்களை வணங்கி, அவர்களுக்கு சால்வை மற்றும் மாலை அணிவித்து நினைவு பரிசை வழங்கி கவுரவித்தனர். மேலும் ஆசிரியர்களிடம் பழைய மாணவ, மாணவிகள் தங்களையும், தங்களது கணவன், மனைவி மற்றும் பிள்ளைகளையும் அறிமுகம் செய்துகொண்டு, தாங்கள் தற்போது பணிபுரியும் துறைகள் மற்றும் பதவிகள் பற்றியும் விளக்கினர்.

தாங்கள் படித்த காலத்தின் பழைய நினைவுகளை ஒவ்வொருவராக பகிர்ந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் இப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவரும், முன்னாள் ஒன்றிய பெருந்தலைவருமான வாசு, ஒன்றிய முன்னாள் துணை பெருந்தலைவர் விஜயரங்கன், வெங்கம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் வேண்டாமிர்தம் ஏழுமலை, பள்ளி மேலான்மை குழு கல்வியாளர் ஏழுமலை உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக முன்னாள் மாணவ, மாணவியரின் பிள்ளைகளின் பரதநாட்டிய கலை நிகழ்ச்சி நடந்தது.

The post வெங்கப்பாக்கம் அரசு பள்ளியில் முன்னாள் மாணவ, மாணவியர் சந்திப்பு நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Venkappakkam Government School ,
× RELATED ஆட்டோ செயலி உருவாக்கம்: போக்குவரத்துத் துறை ஆணையர் இன்று ஆலோசனை