×

துருக்கி வழியாக 25 பணியாளர்களுடன் இந்தியா நோக்கி வந்த சரக்கு கப்பல் கடத்தல்: இஸ்ரேலுக்கு எதிராக ஹவுதி போராளிகள் அட்டூழியம்

புதுடெல்லி: துருக்கி வழியாக 25 பணியாளர்களுடன் இந்தியா நோக்கி வந்த சரக்கு கப்பலை ஹவுதி போராளிகள் கடத்தி சென்றனர். இஸ்ரேல் – ஹமாஸ் போருக்கு மத்தியில், துருக்கியில் இருந்து இந்தியா நோக்கிச் சென்ற இஸ்ரேலிய சரக்குக் கப்பலை, ஏமன் நாட்டின் ஹவுதி போராளிகள் கடத்திச் சென்றனர். இதுதொடர்பாக இஸ்ரேல் தரப்பில் வெளியான செய்தியில், ‘இரண்டு டஜனுக்கும் அதிகமான பணியாளர்களுடன், துருக்கி வளைகுடாவில் இருந்து, இந்தியாவின் பிபாவாவ் துறைமுகத்தை நோக்கி இஸ்ரேல் சரக்கு கப்பல் வந்து கொண்டிருந்தது. அந்த கப்பல் செங்கடல் வழியாக வந்த போது, ஏமனில் செயல்பட்டு வரும் ஈரான் ஆதரவு ஹவுதி போராளிகள் கும்பல் கடத்தியது.

அந்த கப்பலில் இருந்த பணியாளர்களை அந்த கும்பல் பிணைக் கைதிகளாக பிடித்து சென்றது. மேலும் அந்த குழு வெளியிட்ட அறிக்கையில், ‘காசாவில் இருக்கும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் தனது தாக்குதலை நிறுத்தும் வரை சர்வதேச கடல் பகுதி வழியாக செல்லும் இஸ்ரேல் கப்பல்களை குறிவைத்து தாக்குவோம் அல்லது கடத்துவோம்’ என்று எச்சரித்துள்ளது. கடத்தப்பட்ட கப்பலில் பஹாமாஸ் கொடி கட்டப்பட்டிருந்தது. பல்கேரியர்கள், பிலிப்பினோக்கள், மெக்சிகன்கள், உக்ரேனியர்கள் உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 25 பணியாளர்கள் இருந்தனர்.

ஆனால் அவர்கள் இஸ்ரேல் நாட்டை சேர்ந்தவர்கள் இல்லை என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. ஆனால் இந்த கப்பல் கடத்தப்பட்டதை தீவிரவாதிகளின் செயல் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. அதேநேரம் இந்த கப்பல் பிரிட்டனுக்கு சொந்தமானது என்றும், ஜப்பானால் இயக்கப்படுவது என்றும் இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்தனர்’ என்று அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post துருக்கி வழியாக 25 பணியாளர்களுடன் இந்தியா நோக்கி வந்த சரக்கு கப்பல் கடத்தல்: இஸ்ரேலுக்கு எதிராக ஹவுதி போராளிகள் அட்டூழியம் appeared first on Dinakaran.

Tags : India ,Turkey ,Houthi ,Israel ,New Delhi ,Dinakaran ,
× RELATED பிஸ்தா பற்றி தெரிந்து கொள்ளலாம்…