×

கணையம் காப்போம்!

நன்றி குங்குமம் டாக்டர்

இன்றைய சூழலில், பலரும் நோய் அறிகுறிகள் தென்படும்போதே கவனிக்காமல், அது முற்றி, பாதிப்பை ஏற்படுத்திய பின்னரே, அதன் அபாயத்தை உணர்கிறோம். அந்த வகையைச் சார்ந்ததுதான் கணைய அழற்சியும். சிறிதாக இருக்கும்போதே கவனித்து சரி செய்துவிட்டால், பெரிய பாதிப்புகள் இல்லாமல் தப்பித்துக் கொள்ளலாம். அதுவே, நாள்பட்ட அழற்சியாக மாறும்போது, உயிருக்கே கூட ஆபத்தாக முடிந்துவிடலாம் என்கிறார் குடலியல் மற்றும் இரைப்பை நிபுணரான மருத்துவர் பி. மகாதேவன். கணைய அழற்சி குறித்து மேலும் அவர் நம்முடன் பகிர்ந்து கொண்டவை:

குடல், இரைப்பை, கல்லீரல் போன்று உணவு செரிமான மண்டலத்தின் மிக முக்கியமான உறுப்பு கணையம். இது இரைப்பைக்குக் கீழே அமைந்திருக்கும் வால் போன்ற ஓர் உறுப்பாகும். இதில்தான் உணவு செரிமானத்துக்குத் தேவையான என்சைம்கள், இன்சுலின் ஆகியவை சுரக்கின்றன. செரிமானத்தின் போது, கணையத்தில் இருந்து சுரக்கப்படும் என்சைம், கணைய நாளம் வழியாக முன் சிறுகுடலில் போய் கலக்கிறது. இந்த என்சைம் அங்கே செரிவுற்றதாக மாறி உணவுப் பொருள் செரிக்க உதவுகிறது.

ரத்தத்தில் கலக்கும் குளுக்கோஸைத் திசுக்கள் பயன்படுத்த உதவும் இன்சுலின் ஹார்மோனும் கணையத்தில்தான் உற்பத்தியாகின்றன. அதுபோன்று நமது உடலில் சுரக்கும் ஆசிட்களை சமன் செய்யும் பணியையும் கணையம் செய்கிறது. இந்நிலையில், கணையத்தின் இயக்கத்தில் பாதிப்பு ஏற்படும்போது, கணையம் வீக்கம் அடைந்து, கணைய அழற்சி (Pancreatitis) ஏற்படுகிறது. இதனால் கணையம் சரிவர வேலை செய்யாமல் இன்சுலின் சுரப்பு நின்று போய் சர்க்கரை நோய் வரும். இந்த சர்க்கரை மிகவும் ஆபத்தானது. ஏனென்றால், சிலருக்கு உச்சபட்ச சர்க்கரையை உருவாக்கிவிடும் அல்லது மிக குறைந்த சர்க்கரையை உருவாக்கும். இவை இரண்டுமே ஆபத்தானது. இந்நிலையைதான் கணைய சர்க்கரை நோய் என்கிறோம்.

அடுத்தது நாம் சாப்பிடும் உணவுகள் செரிக்காமல், சாப்பிடுவது அப்படியே வெளியே வந்துவிடும். இதனால், உடலுக்கு தேவையான சத்துகள் எதுவும் கிடைக்காமல் நோய்கள் உருவாகும். மேலும், கணையம் வேலை செய்யாதபோது, போதியளவு பை கார்பனேட் கிடைக்காமல் அல்சர் வரும். அதுபோன்று, உணவு, செரிமானம் ஆகும்போது கணையத்தில் இருந்து ஏராளமான என்சைம்கள் சுரக்கின்றன. இவை, கணையத்தில் இருந்து ஒரு குழாய் வழியே பயணித்து, சிறுகுடலை அடைகின்றன. பித்தப்பையில் இருந்து வரும் குழாயுடன், கணையத்தில் இருந்து வரும் குழாய் சிறுகுடல் அருகே இணைகிறது. பித்தப்பையில் கல் உருவாகி, அது பித்த நாளத்தை அடைக்கும்போது, கணைய என்சைம் பாதையையும் அடைக்கிறது. இதனால், கணையம் பாதித்து, வீக்கம் அடைகிறது.

அதுபோன்று, நோய்த்தொற்று உள்ளிட்ட காரணங்களாலும் கணையம் வீக்கம் அடைவதையும் கணைய அழற்சி என்கிறோம். கணையத்தில் ஏற்படக்கூடிய பாதிப்பை, உடனடி பாதிப்பு, நீண்ட நாள் பாதிப்பு என்று இரண்டு வகையாக பிரிக்கலாம். சாதாரண பாதிப்பு என்றால் மருந்து மாத்திரைகள் மூலம் சரிப்படுத்திவிடலாம்.ஆனால், கணைய அழற்சியைக் கவனிக்காமல் விடும்போது, நாட்பட்ட கணைய அழற்சியாக மாறுகிறது. இதனால், கணையம் மட்டும் அல்லாமல், மற்ற உறுப்புகளும் பாதிக்கப்படுகின்றன.

இது, இதயத்தைப் பாதித்து, உயர் ரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும். நுரையீரலைப் பாதித்து, மூச்சுத்திணறலை உண்டாக்கும். சிறுநீரகத்தைப் பாதித்து, சிறுநீர் வெளியேற்றம் குறையும். ரத்த அழுத்தம் குறைவாக இருக்கும்போது, அனைத்து உறுப்புகளுமே பாதிக்கப்படும். சிலருக்கு, பார்வைக் கோளாறு ஏற்பட்டு, பார்வை இழப்பு ஏற்படவும் வாய்ப்பும் உள்ளது. மூளையைப் பாதித்து நினைவை இழக்கக்கூடும். மஞ்சள்காமாலையும் வரக்கூடும்.

கணையம் பாதிக்க, முக்கிய காரணம் மது அருந்துதல் மற்றும் பித்தப்பை கல் அடைப்பு இவைதான். இது தவிர, வேறு சில காரணங்களும் இருக்கின்றன. அவை, கெட்ட கொழுப்பின் அளவு அதிகரிப்பது, கால்சியம் நார்மலைவிட அதிகரிப்பது, ஏதேனும் நோய்க்காக மருந்துகள் உட்கொள்வதால் ஏற்படும் பக்கவிளைவுகள், எச்.ஐ.வி. போன்ற நோய்களுக்கு சிகிச்சைகள் எடுத்துக் கொள்வது போன்றவற்றினால் கணையம் பாதிக்கும். இது தவிர, பிறக்கும்போதே ஏதேனும் பிரச்னையுடன் பிறப்பது போன்றவையும் கணையம் பாதிக்க காரணமாகும். இது தவிர, விபத்துகள் ஏற்படும்போது கணையம் பாதிக்கப்படலாம். இதுபோன்று இன்னும் சில பல காரணங்கள் கணைய அழற்சிக்கு காரணமாகிறது.

இந்த கணைய பாதிப்பு என்பது, ஒரு தீப்பெட்டி தொழிற்சாலையில் இருந்து தீக்குச்சிகள் பத்திரமாக கொண்டு வரப்பட்டு வீட்டில் நெருப்பை உண்டாக்குவது போன்றது. ஆனால், தொழிற்சாலையிலேயே தீக்குச்சி பற்றிக் கொண்டால் எப்படி மொத்த தொழிற்சாலையையே அழித்து விடுமோ அப்படிதான் கணைய அழற்சியும். கணைய அழற்சியை ஆரம்பத்திலேயே பார்த்துவிட வேண்டும். இல்லை என்றால், அது மற்ற உறுப்புகளையும் பாதித்து உயிருக்கே ஆபத்தாகிவிடும்.

அறிகுறிகள்

கடுமையான வயிற்றுவலி இருக்கும். அது நீண்ட நேர வலியாகவும் இருக்கும். வலி வயிற்றில் இருந்து இடுப்புப் பகுதிக்குப் பரவுவதால், நிமிர்ந்து அமர்ந்தால் வலி அதிகமாக இருக்கும். எனவே, குனிந்தே அமர்ந்திருக்கத் தோன்றும். முன்னால் வளையும்போது வலி குறையும். அதிகப்படியான பித்தத்தினால் மஞ்சள் மற்றும் பச்சை நிறத்தில் வாந்தி எடுப்பார்கள். அடிக்கடி காய்ச்சல் உண்டாகும். வயிற்று உப்புசம் இருக்கும். ஏப்பமோ, வாயுவோ வெளியேறாது. வயிற்று வலியினால் உடல் முழுதும் வியர்த்துக்கொட்டும்.

சிகிச்சைகள்: கணைய அழற்சி, மதுவினால் ஏற்பட்டிருந்தால், மதுவை நிறுத்திவிட்டால் சரியாகிவிடும். பித்தப்பை கல் அடைப்பினால் ஏற்பட்டிருந்தால், பித்தப்பை கல்லை நீக்கிவிட்டால் சரியாகிவிடும். அதிக கால்சியத்தால் பாதிக்கப்பட்டிருந்தால், கால்சியம் அளவை கட்டுக்குள் கொண்டு வந்தால் சரியாகிவிடும். அதுபோன்று சில மருந்து மாத்திரைகள் உட்கொள்வதால் வந்திருந்தால், அதனை நிறுத்தினால் சரியாகிவிடும். எனவே, பெரும்பாலும், எண்டோஸ்கோபி மூலமே சரி செய்துவிட முடியும்.

அதேசமயம் நாட்பட்ட கணைய அழற்சியாக மாறும்போது, அதற்கு மருந்து இல்லை. நாட்பட்ட கணைய அழற்சி முற்றும்போது கணையத்தில் இருந்து வடியும் திரவம், ரத்தத்துடன் கலந்து உடல் முழுவதும் செல்வதால், மரணம்கூட ஏற்படும். எனவே, வருமுன் காப்பதே நல்லது. அதுபோன்று சிலருக்கு பரம்பரை காரணமாக கணைய அழற்சி ஏற்பட்டால், அதனை சரி செய்வது கடினம். ஏனென்றால் அவர்களுக்கு மீண்டும் மீண்டும் வர வாய்ப்பு உண்டு.

சிகிச்சைக்குப் பின்

கணைய அழற்சியைத் தொடக்க நிலையில் கட்டுப்படுத்திய பிறகு, மீண்டும் தீவிரமாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். கணையம் பாதிக்கப்படும்போது, ஜீரணக் கோளாறுகள் உண்டாகும். ஆகையால், முதலில் டயட்டில் கவனம் செலுத்த வேண்டும். கொழுப்பு அதிகம் உள்ள உணவுகள் சாப்பிடுவதைக் குறைக்க வேண்டும். மதுவையும் சிகரெட்டையும் அறவே கைவிட வேண்டும். சரியான உணவு முறை, உடற்பயிற்சி அவசியம். வேறு ஏதேனும் நோய்க்கு மருந்து எடுத்துக்கொள்ளும் முன்னர், மருத்துவரிடம் இந்தப் பிரச்னையைத் தவறாமல் குறிப்பிட வேண்டும். கணைய அழற்சி மீண்டும் மீண்டும் ஏற்படும்போது, புற்றுநோயாக மாறவும் வாய்ப்பு உள்ளது.

தொகுப்பு: ஸ்ரீதேவி குமரேசன்

The post கணையம் காப்போம்! appeared first on Dinakaran.

Tags : Dr. ,Kumkum ,Dinakaran ,
× RELATED மனவெளிப் பயணம்