×

சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டியது ஆளுநரின் கடமை: அமைச்சர் ரகுபதி பேட்டி

புதுக்கோட்டை: சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டியது ஆளுநரின் கடமை என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட 10 மசோதாக்களை தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி மாநில அரசுக்கே திருப்பி அனுப்பிய நிலையில், சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி, அந்த மசோதாக்களை மீண்டும் தமிழக அரசு நிறைவேற்றியிருக்கிறது. இந்நிலையில், புதுக்கோட்டையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர், சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டியது ஆளுநரின் கடமை. 10 மசோதாக்களையும் மீண்டும் நிறைவேற்றி அன்றைய தினம் பிற்பகல் 3 மணிக்கே ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. அண்மையில் அனுப்பப்பட்ட 5 மசோதாக்களையும் ஆளுநர் ரவி நிலுவையில் வைத்துள்ளார். இத்தனை மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்துவிட்டேன் என்று கூறிவிட்டு எஞ்சிய மசோதாக்களை நிலுவையில் வைக்கக் கூடாது என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அமைச்சர் ரகுபதி, விஜயபாஸ்கர், ரமணா மீதான விசாரணைக்கு அனுமதி தந்ததை ஆளுநர் அன்றே தெரியப்படுத்தி இருக்கலாம்.

குட்கா வழக்கில் முன்னாள் அமைச்சர்களை விசாரிக்க ஆளுநர் ஒப்புதல் தந்ததை சிபிஐ-க்கு தெரிவிப்போம் என்றார். மேலும், தமிழக ஆளுநருக்கு எதிராக தொடர்ந்த வழக்குகளில் முன்வைத்த காலை பின்வைக்க மாட்டோம். ஆளுநரின் நடவடிக்கையை சகித்துக்கொள்ள முடியாததால் தான் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தோம் என்று அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

The post சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டியது ஆளுநரின் கடமை: அமைச்சர் ரகுபதி பேட்டி appeared first on Dinakaran.

Tags : Minister ,Ragupati ,Pudukkottai ,
× RELATED திரவ உயிர் உரங்களை பயன்படுத்தி...