×

டைப் 1 மற்றும் டைப் 2 சர்க்கரை நோய்

நன்றி குங்குமம் டாக்டர்

மூத்த சர்க்கரை நோய் நிபுணர், மருத்துவர் வி.மோகன்

ஓர் அலசல்!

இன்றைய நவீன வளர்ச்சிகளாலும், வாழ்க்கைமுறை மாற்றத்தாலும் இந்தியாவில் சுமார் 10கோடி மக்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக, அதிர்ச்சித் தகவலை வெளியிட்டிருக்கிறது சமீபத்திய ஆய்வுகள். சர்க்கரை நோய் எதனால் வருகிறது.. அதனை கட்டுப்படுத்தும் வழிகள் என்ன.. என்பதை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார் மூத்த சர்க்கரை நோய் நிபுணர், மருத்துவர் வி.மோகன்.

“சர்க்கரை நோய் என்பது நீரிழிவு நோயாகும். இது உலகிற்கு புதிதல்ல. சுமார் 2000 வருடங்களுக்கு முன்பே நீரிழிவு நோய் மக்களுக்கு இருந்திருக்கிறது. உதாரணமாக, ஸ்சுரதா, சரக்கா அவர்களின் காலத்திலேயே நிரிழிவு நோய் இருந்திருப்பதற்கான ஆதாரங்கள் காணப்படுகிறது. அதுபோலவே, பல நூற்றாண்டுகளுக்கு முன்பே எகிப்தியர்களிடையேயும் நீரிழிவு நோய் இருந்ததற்கான அறிகுறிகள் அப்போதைய மருத்துவக் குறிப்புகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஸ்சுரதா, சரக்கா காலங்களில் சர்க்கரை நோய், மதுமேகா என்று சொல்லப்பட்டு இருக்கிறது. சிறுநீரில் இனிப்பு கலந்திருப்பதை கண்டுபிடித்திருக்கிறார்கள். அப்போதே இது குறித்த ஆய்வுகளும் செய்து, மதுமேகாவை பல பிரிவுகளாக பிரித்திருக்கிறார்கள். அதன்படி, சர்க்கரை நோய் வந்தவர்கள் சிலர், உடல் எடை கூடுவதும், சிலர் இளைத்துப் போவதும் சொல்லப்பட்டிருக்கிறது. இதில் முதல் வகைதான் நாம் இப்போது சொல்கிற டைப் 2 இரண்டாவது வகைதான் டைப் 1 ஆகும்.

இதில், உடல் எடை அதிகரிப்பதால் வருவது, பரம்பரை ஜீன் காரணமாக வருவது இவை பொதுவானது. இதுதான் 100-ல் 90 பேருக்கு இருக்கக்கூடிய நார்மலான சர்க்கரை நோய் டைப் 2வாகும். பொதுவாக சர்க்கரை நோய் என்று சொல்லப்படுவதும் இதுதான். இதுதவிர்த்து, டைப் 1 சர்க்கரைநோய் என்று எடுத்துக்கொண்டால் அதில் பல வகைகள் இருக்கின்றன. உதாரணமாக, இன்சுலீன் எடுத்துக்கொள்வது, குழந்தைகளுக்கான சர்க்கரை நோய் இப்படி குறிப்பிட்டு சொல்லப்படும்.

ஆனால், டைப்1, டைப்2 என்பது மட்டுமல்ல, நீரிழிவிலேயே டயாபடீஸ் மெலிட்டஸ், டயாபடீஸ் இன்ஸிபிடஸ் என்று இருக்கிறது. இதில் டயாபடீஸ் மெலிட்டஸ்ஸில்தான் சர்க்கரை அதிகம் இருக்கும். டயாபடீஸ் இன்ஸிபிடஸில் சர்க்கரைக்கான அறிகுறிகள் எல்லாம் இருக்கும் அடிக்கடி சிறுநீர் கழிப்பது, அடிக்கடி தண்ணீர் தாகம் எடுப்பது என்று ஆனால், சர்க்கரை அளவு குறைவாகத்தான் இருக்கும். இது பிட்டியூட்டரி கிளாண்டில் வரும் வியாதி ஆகும். இது ஒரு தனி வகை. டயாபடீஸ் மெலிட்டஸ் என்பதுதான் மதுமேகா என்று சொல்லப்படுவது.

இது தவிர, சர்க்கரை நோயில் மற்ற வகைகள் என்றால், கர்ப்பகால சர்க்கரை நோயாகும். இது கர்ப்பகாலத்தில் பெண்களுக்கு வரும் சர்க்கரை நோயாகும். இது பிரசவத்திற்கு பின்பு சரியாகிவிடும். அடுத்து, கணையத்தில் சிலருக்கு கல் உருவாகும். இதனால் ஏற்படும் சர்க்கரை நோய் ஒருவகையாகும். இது இந்தியாவில் அதிகம் காணப்படும் ஒரு வகை சர்க்கரைநோயாகும். இந்தியாவில் கேரளா, தமிழ்நாட்டில் அதிகம் பேருக்கு காணப்படுகிறது.

இது தவிர, பரம்பரையாக வரும் சர்க்கரை நோய் ஒருவகை. இதில் பல வகைகள் இருக்கின்றன. அவற்றை மருத்துவ மொழியில் மொடி(Maturity-onset diabetes of the young) என்று சொல்வோம். இது தாத்தா- பாட்டி, பிள்ளைகள், பேர பிள்ளைகள் என்று வழி வழியாக் தலைமுறை தலைமுறையாக வருவதாகும். இதை தடுப்பது கடினம். ஆனால், மருந்து மாத்திரைகளால் கன்ட்ரோல் செய்யலாம்.

இதுபோன்று சுமார் ஐம்பது வகையான சர்க்கரை நோய் உள்ளன. ஆனால், முதலில் சொன்னது போன்று 90 சதவீதம் டைப் 2 வில் அடங்கிவிடும். அடுத்த 2 சதவீதம் டைப் 1னில் அடங்கும். மீதமுள்ள 8 சதவீதம்தான் மற்ற 48 வகையான சர்க்கரை நோயாகும். இதில், நாம் தெரிந்துகொள்ள வேண்டியது பொதுவான டைப் 2 டயாபடீஸ் பற்றிதான். சமீபகாலமாக அதிகரித்து வரும் சர்க்கரை நோயும் இதுதான்.

முன்பெல்லாம் சர்க்கரை நோய் என்பது பணக்கார வியாதியாகவும், எங்கோ ஒருவருக்குத்தான் காணப்பட்டது. உதாரணமாக, எனது தந்தை மருத்துவராக பணிபுரிந்த காலத்தில், 1948-இல் ஸ்டான்லி மருத்துவமனையில் சர்க்கரை நோய்க்கென்று ஒரு பரிவை தொடங்கினார்களாம். அப்போது, எங்கோ ஒருவருக்கு இருக்கும் அரிதான சர்க்கரை நோய்க்காக தனிப் பிரிவு வேண்டுமா என்று அனைவரும் கேட்டுள்ளனர். ஆனால், இன்றைய நிலையே வேறு, தற்போது வீட்டுக்கு ஒருவருக்கோ அல்லது இருவருக்கோ சர்க்கரை நோய் உள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்தியா முழுவதும் நடத்திய ஆய்வில், இந்தியாவில் மட்டும் 101 மல்லியன் மக்களுக்கு சர்க்கரை நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதுபோல, வருங்காலங்களில், 136மில்லியனை தாண்டும் அபாயம் உள்ளது என்பதையும் ஆய்வு தெரிவிக்கின்றது. சென்னையை பொறுத்தவரை, 20 வயதுக்கு மேல் உள்ளவர்கள் சுமார், 25 சதவீத பேர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்தவகையில், 20 வயதுக்கு மேல் உள்ளவர்களில் 4-ல் ஒருவருக்கு சர்க்கரை உள்ளது. இதுவே 50 வயதுக்கு மேல் உள்ளவர்களை எடுத்துக் கொண்டால் 2-ல் ஒருவருக்கு உள்ளது. இது நிரூபிக்கப்பட்ட ஆய்வாகும்.

இந்தளவிற்கு மக்களுக்கு சர்க்கரை அதிகரிக்க என்ன காரணம் என்றால், பொருளாதாரம் தான்.பொருளாதாரம் உயர உயர வாழ்க்கைமுறை மாறுகிறது. அரிதாக ஹோட்டல்களுக்கு சென்றவர்கள், இப்போது வீக் என்ட், டிரீட் என அவ்வப்போது, ஹோட்டலில் சாப்பிட ஆரம்பித்துவிட்டார்கள். மேலும், வீட்டு வாசலுக்கே உணவுகளை கொண்டுவரும் ஆன்லைன் நிறுவனங்களும் அதிகரித்துவிட்டது. வெளி உணவுகளில் கூடுதல் சுவைக்காக அதிக சுவை ஊட்டிகள், எண்ணெய், உப்பு, காரம் என அனைத்தும் கூடுதலாக இருக்கும். இவை அனைத்தும் உடலுக்கு கெடுதலாகும். இதை தொடர்ந்து சாப்பிடும்போது, கலோரி, கொழுப்பு, உப்பு என எல்லாமே கூடுகிறது. இதனால், உடல்எடை கூடுகிறது. உடல் எடை அதிகரிப்புக்கும், சர்க்கரைக்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு.

அடுத்தகட்டமாக பொருளாதார உயர்வால், வாகன வசதிகளும் பெருகிவிட்டது. இதனால் அருகில் உள்ள கடைக்கு சென்று ஏதேனும் வாங்க வேண்டும் என்றாலும் வண்டியில் சென்றுதான் வாங்குகிறார்கள். இதுவே, 20, 30 ஆண்டுகளுக்கு முன்புவரை எங்கு போக வேண்டும் என்றாலும் 1-2 கிலோமீட்டர் வரை நடந்துதான் போக வேண்டும். ஆனால், இப்போது அப்படியில்லை, வீட்டு வாசலிலேயே பள்ளி வாகனங்கள் முதல் கொண்டு வந்துவிடுகிறது. இதனால், நடந்து செல்வது குறைந்துவிட்டது.

வீட்டுச் சாப்பாட்டை எடுத்துக் கொண்டால், அந்த நாளில் நான் சாப்பிட்ட அதே அரிசிதானே இப்போதும் சாப்பிடுகிறேன் என்று நினைப்பார்கள். ஆனால் அப்போது நாம் சாப்பிட்ட அரிசிக்கும் இப்போது நாம் சாப்பிடும் அரிசிக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. உதாரணமாக, 1970-இல் மொத்த இந்தியாவுக்கும் சேர்த்து, 29 அரிசி மில்கள்தான் இருந்தன. இப்போது, சுமார் 2 லட்சம் அரிசி மில்கள் இருக்கின்றன.

அன்று பட்டை தீட்டாத கைகுத்தல் அரிசிகளைதான் சாப்பிட்டார்கள். அதில் சத்துக்கள் ஏராளமாக இருந்தன. இன்று வெண்மையாகவும், மெலிதாகவும் இருக்கும் அரிசிதான் நமக்கு பிடிக்கிறது. இதற்காக, பாலிஷ் செய்யப்பட்ட அரிசியைதான் சாப்பிடுகிறோம். அரிசியை பாலிஷ் செய்ய செய்ய அதில் உள்ள சத்துக்கள் அழிந்துபோகிறது. அதனால், அதை சாப்பிட்டதுமே சர்க்கரை அளவு கூடிவிடுகிறது.

அதுபோன்று, அந்த காலத்தில் பெண்கள் பெரும்பாலும் இல்லதரசிகளாக இருந்தனர். ஆனால், இன்று வேலைக்கு செல்கிறார்கள். இதனால், சமைப்பதற்கான நேரம் கிடைப்பதில்லை. வேலை முடிந்து வீடு திரும்பும்போதே, உணவகங்களில் உணவு பொட்டலங்களை வாங்கி வந்துவிடுகிறார்கள். அந்த காலத்தில், பதப்படுத்தப்பட்ட ஸ்நாக்ஸ்கள் எல்லாம் கிடையாது. ஸ்நாக்ஸ் சாப்பிட வேண்டும் என்று நினைத்தால், வீட்டில் அம்மா செய்து கொடுத்த லட்டோ, முறுக்கோதான் இருக்கும். இல்லை என்றால், வீட்டுக் கொல்னையில் பறித்த பழங்கள்தான் கிடைக்கும். ஆனால், இப்போதோ, சிப்ஸ், லேஸ் என விதவிதமான பாக்கெட்களில் அடைக்கப்பட்ட பதப்படுத்தப்பட்ட ஸ்நாக்ஸ்கள்தான் கிடைக்கின்றன. அவையெல்லாம் சுவை அதிகமாக இருக்கும். ஆனால், துளிகூட ஆரோக்கியம் இல்லாதவை.

அதுபோன்று, பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் எடுத்து சென்று குடிக்கும் பழக்கம் வந்துவிட்டது. பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் சேமித்து வைத்து குடிப்பதனால், பிளாஸ்டிக்கில் உள்ள தீய ரசாயனங்கள் தண்ணீரில் இறங்கிவிடும். பிளாஸ்டிக் பாட்டிலில் சேமித்து அருந்தப்படும் தண்ணீருக்கும் சர்க்கரை நோய்க்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. அதுபோன்று, சமீபத்தில் நாங்கள் நடத்திய ஆய்வில், காற்று மாசு கூட சர்க்கரைநோய்க்கு ஒரு காரணம் என்று கண்டறிந்துள்ளோம். இது எங்களுக்கே அதிர்ச்சியாக இருந்தது.

இதுநாள் வரை, காற்று மாசினால் நுரையீரல்தான் பாதிக்கப்படுகிறது என்று நினைத்திருந்தோம். ஆனால், சர்க்கரையும் வரும் என்பதை இப்போது கண்டு பிடித்துள்ளோம். இதுதான் கிராமப்புறங்களைவிட நகரத்தில் சர்க்கரை அதிகரிக்க காரணம் என்பதையும் ஆய்வு தெரிவிக்கிறது. உடனே கிராமப்புறங்களில் சர்க்கரை இல்லையா என்று நீங்கள் நினைக்கலாம். அவர்களுக்கு சர்க்கரை வர முக்கிய காரணம், வயல்வெளிகளில் பூச்சிக் கொல்லியாக தெளிக்கும் மருந்துகள், உரங்களில் இருக்கும் ரசாயனத்தினால் சர்க்கரை நோய் வருகிறது.

இவை எல்லாவற்றையும் விட, மிக முக்கியமாக பார்க்கப்படுவது, மன அழுத்தம். ஒருவருக்கு மன அழுத்தம் அதிகரிக்கும்போது, உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றத்தால், இன்சுலின் சுரப்பு பாதிக்கப்பட்டு சர்க்கரை அதிகரிக்கிறது. இதனால்தான், சர்க்கரை நோயாளிகளை யோகா செய்யுங்கள், தியானம் செய்யுங்கள் என்று சொல்கிறோம். என் அப்பா காலத்தில், 50-60 வயதில் வந்த சர்க்கரைநோய், தற்போது, காலநிலை மாற்றத்தால், வாழ்க்கை முறை மாற்றத்தாலும், படிப்படியாக வளர்ந்து 25-30 வயதிலேயே சர்க்கரை வந்துவிடுகிறது.

அதைவிட, வருத்தத்துக்குரிய விஷயம் என்னவென்றால், தற்போது 12-13 வயது குழந்தைகளுக்கு கூட சர்க்கரை நோய் அதிகரித்து வருகிறது. காரணம், ஜங்க் புட் சாப்பிடுவது, உடல் எடை அதிகரிப்பது, உடற்பயிற்சியின்மை, வீடியோ அடிக்கஷன். செல்போன் அடிக்கஷன் போன்றவற்றினால் ஏற்படுகிறது.

கடந்த 30 ஆண்டுகளில் நமது நாடு நல்ல வளர்ச்சிப் பாதையை அடைந்துள்ளது. இந்த முன்னேற்றம் நல்லதாக இருந்தாலும். நமது வாழ்க்கை முறை, சுற்றுச்சூழல் போன்றவை முற்றிலும் மாறிவிட்டதால் நோய்களும் அதிகரித்துவருகிறது. அதிலிருந்து தற்காத்துக் கொள்ளவதே வரும் காலத்துக்கு நல்லது.

தற்காத்துக்கொள்ளும் வழிகள்

ஒவ்வொருவரும் அவரவர் ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் தர வேண்டும். ஒருவர் எவ்வளவு உயரம் இருக்கிறாரோ அதற்கு தகுந்த உடல் எடையை பராமரிக்க வேண்டும். கொஞ்சம் கூடவோ, குறைவோ இருப்பது தவறில்லை. அதுவே, மிக அதிகமாகவோ, மிக குறைவாகவோ இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.தினசரி சின்ன சின்ன உடற்பயிற்சி செய்வதை கட்டாயமாக்கிக் கொள்ள வேண்டும். அடிக்கடி வெளி உணவுகள் சாப்பிடுவதை தவிர்த்துவிட்டு, வீட்டில் தயாரித்த உணவுகளையே சாப்பிட வேண்டும். அதிலும் அரிசி சாதம் குறைவாக வைத்துக் கொண்டு, காய்கறிகள் அதிகம் இருப்பது நல்லது.

யோகா, பிராணயாமம், தியானம் போன்றவற்றை மேற்கொள்வதை வழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். சிலர், நான் தினசரி நடைபயிற்சி செய்கிறேனே, பின் எதற்காக யோகா, தியானம் எல்லாம் செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால், நடைபயிற்சி மட்டுமே எப்பவும் போதாது. ஏனென்றால் நடைபயிற்சி செய்யும்போது இதயத் துடிப்பு, ஸ்டிரெஸ் ஹார்மோன எல்லாம் அதிகமாகும். எனவே, நடைபயிற்சி முடித்தபின் குறைந்தபட்சம் 5 நிமிடமாவது அமைதியாக அமரந்திருக்க வேண்டும்.

அதற்கு, யோகா, பிராணயாமம் உதவியாக இருக்கும். அதுபோல, காற்று மாசில் இருந்து தப்பிக்க முடிந்தவரை வெளியில் செல்லும்போது முகக்கவசம் அணிந்து செல்வது நலம் தரும். பொதுவாக, சர்க்கரை நோயாளிகள் ஒவ்வொருவருமே, மூன்று மாதத்திற்கு ஒருமுறை மருத்துவ பரிசோதனைகள் செய்துகொள்வது மிகவும் நல்லது. இவற்றை எல்லாம் மேற்கொண்டாலே, வரும்காலம் ஆரோக்கியமானதாக இருக்கும்.

The post டைப் 1 மற்றும் டைப் 2 சர்க்கரை நோய் appeared first on Dinakaran.

Tags : Doctor ,V. Mohan ,Dinakaran ,
× RELATED அழகான கூந்தலுக்கு உதவும்