×

ஊராட்சி தலைவர் பற்றி அவதூறு: டிஎஸ்பியிடம் புகார்

திருவள்ளூர்:  திருவள்ளூர் அடுத்த 26 வேப்பம்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் சதா பாஸ்கரன் தலைமையில் ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பின் மாவட்ட தலைவர் சுமிதா சுந்தர், ஊராட்சி மன்ற தலைவர்கள் உஷா பிரேம், ராஜேஸ்வரி சேகர், கே.கே.சொக்கலிங்கம், சுபத்ரா ராஜ்குமார், பானுப்பிரியா முருகன், சீனிவாசன், தமிழ்ச்செல்வன் உள்பட 50க்கும் மேற்பட்டோர் திருவள்ளூர் டிஎஸ்பி சந்திரதாசனிடம் ஒரு புகார் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது.திருவள்ளூர் ஒன்றியம், அயத்தூரில் சுந்தர விநாயகர் கோயிலுக்கு சொந்தமான நிலங்களை வருவாய்த்துறையினர் பராமரித்து, பாதுகாக்கும் வகையில் திருவள்ளூர் வட்டாட்சியர் உத்தரவிட்டார். அதன்படி அதிகாரிகள், அங்கு ஆய்வு செய்தனர்.இந்த வேளையில், அப்பகுதியில் தொடர்ந்து பெய்த மழையால் குளம்போல் தேங்கிய தண்ணீரை அகற்ற கோயில் அருகே கால்வாயில் உள்ள செடிகளை சுத்தம் செய்யும் பணியில் வருவாய்த்துறையினர் ஈடுபட்டனர். அப்போது, அங்கு வந்த அயத்தூர் கிராமத்தை சேர்ந்த கணேசன், வீரலட்சுமி குணசேகரன், அவரது மகன் சுரேஷ் ஆகியோர் வருவாய் துறையினரை பணி செய்ய விடாமல் தடுத்து நிறுத்தினர்.மேலும், வீரலட்சுமி என்பவர் 26,வேப்பம்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் சதா.பாஸ்கரன் குறித்து பொய்யான வதந்திகளை சமூக வலைதளங்களில் அவதூறாக பதிவிட்டுள்ளார். அவரது பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவது மட்டுமின்றி, சமுதாய வெறியோடு ‘நாங்கள் கலவரம் செய்ய ஆரம்பித்தால் இந்திய ராணுவமே வந்தாலும் எங்களை தடுக்க முடியாது’ என வன்முறையை தூண்டும் விதமாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார். இதையொட்டி, எங்கள் பகுதியில் பெரும் மோதல் மற்றும் அசம்பாவிதம் ஏற்படும் சூழ்நிலையை அவர் உருவாக்கியுளளார். எனவே ஊராட்சி மன்ற தலைவர் குறித்து சமூக வலைதளங்களில் சமுதாய வெறியோடு வன்முறையை தூண்டும் விதமாக அவதூறாக பதிவிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்து கோயில் நிலங்களை அபகரிக்க முயல்பவர்கள் மீது நில அபகரிப்பு தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது….

The post ஊராட்சி தலைவர் பற்றி அவதூறு: டிஎஸ்பியிடம் புகார் appeared first on Dinakaran.

Tags : Panchayat ,DSP ,Tiruvallur ,Panchayat Council ,President ,Sada Bhaskaran ,Dinakaran ,
× RELATED ஒப்பந்ததாரரிடம் ₹15,000 லஞ்சம் ஊராட்சி மன்ற தலைவர் கைது: பாஜவை சேர்ந்தவர்