×

கேரளாவில் இருந்து அனுமதியின்றி கோவைக்கு இயக்கப்பட்ட தனியார் பஸ் பறிமுதல்

 

மதுக்கரை, நவ.20: கேரள மாநிலம் பத்தினம் திட்டா பகுதியைச் சேர்ந்தவர் பேபி கிரீஸ். இவர் ராபின் டிராவல்ஸ் என்ற பெயரில் நிறுவனம் நடத்தி வருகின்றார். இவரது டிராவல்ஸில் உள்ள பஸ் ஒன்றுக்கு அகில இந்திய சுற்றுலா அனுமதி பெற்றுள்ளார். அதன்மூலம், பத்தினம் திட்டாவில் இருந்து கோவைக்கு பஸ் சேவையை துவங்கி செயல்படுத்தி வந்தார். இதற்கு கேரள மோட்டார் வாகனத்துறை அனுமதி மறுத்து வந்ததால் இதுதொடர்பாக கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. இதில், முன்பதிவு செய்து பயணிகளை அழைத்து செல்லாம் என தீர்ப்பு வழங்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து நேற்று முன்தினம் பத்தனம்திட்டாவிலிருந்து கோவைக்கு பஸ் சேவையை ராபின் டிராவல்ஸ் நிறுவனம் தொடங்கியது. பஸ் புறப்பட்ட சில நிமிடங்களில் கேரள மோட்டார் வாகன அதிகாரிகள் ராபின் டிராவல்ஸ் பஸ்சை வழிமறித்து அபராதம் விதித்தனர். இதனிடையே நேற்று முன்தினம் இந்த பஸ் தமிழக எல்லைக்குள் வந்தபோது க.க.சாவடி அருகே பஸ்சை வழிமறித்த தமிழக வட்டார போக்குவரத்து அதிகாரிகள் இந்த தனியார் பஸ்சுக்கு ரூ.70,410 அபராதம் விதித்தனர்.

இந்நிலையில், அந்த பஸ் நேற்று வழக்கம் போல் பயணிகளை ஏற்றிக்கொண்டு தமிழகத்திற்குள் நுழைந்தது அந்த பேருந்தை வழிமறித்த மதுக்கரை போக்குவரத்து சோதனை சாவடி அதிகாரிகள் உடனடியாக பஸ்சை பறிமுதல் செய்தனர். பஸ்சில் வந்த பயணிகள் எதிர்ப்பு தெரிவித்து போக்குவரத்து துறை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

The post கேரளாவில் இருந்து அனுமதியின்றி கோவைக்கு இயக்கப்பட்ட தனியார் பஸ் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Kerala ,Coimbatore ,Madhukarai ,Greece ,Pathanam Thitta, Kerala ,Robin Travels ,Dinakaran ,
× RELATED ஆடையில் ரகசிய அறை அமைத்து ரூ.14.20 லட்சம்...