×

எம்ஜிஆர் சிலையை உடைத்த அதிமுக பிரமுகர் கைது

சமயபுரம்: திருச்சி அருகே எம்ஜிஆரின் சிலையை உடைத்த அதிமுக பிரமுகரை போலீசார் நேற்று கைது செய்தனர். திருச்சி மாவட்டம் சிறுகனூர் அடுத்த ரெட்டிமாங்குடி கடைவீதி பகுதியில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் உருவச்சிலை கடந்த 2003ம் ஆண்டு அமைக்கப்பட்டது. இந்த சிலையை கடந்த மாதம் 22ம்தேதி மர்ம நபர்கள் சிலர் உடைத்து சேதப்படுத்தி, அந்த சிலை மீது சாணத்தை பூசி விட்டு சென்றனர். இதையடுத்து அதிமுகவினர், எம்ஜிஆர் சிலையை புதுப்பித்து மீண்டும் அதே இடத்தில் கடந்த 10 தினங்களுக்கு முன் அமைத்தனர்.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு அந்த சிலையின் இடது கையை மீண்டும் சில மர்மநபர்கள் உடைத்து சேதப்படுத்தினர். தகவல் அறிந்த அந்த பகுதியில் குவிந்த அதிமுகவினர், சிலையை உடைத்த மர்மநபர்களை கைது செய்ய கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். லால்குடி டிஎஸ்பி அஜய்தங்கம், சிறுகனூர் இன்ஸ்பெக்டர் சுமதி உள்ளிட்ட போலீசார், சிலை உடைத்த மர்ம நபர்களை கண்டறிந்து உடனே நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதனையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதில், சிலையை உடைத்தது ரெட்டிமாங்குடி நடுத்தெருவை சேர்ந்த செந்தில்குமார் (47) என்பதும், அதிமுகவில் உறுப்பினராக இருந்து வருவதும் தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து செந்தில்குமாரை நேற்று கைது செய்தனர். இதுபற்றி போலீசார் கூறுகையில், ‘அதிமுகவில் உட்கட்சி பூசலால் உறுப்பினராக இருந்து வரும் செந்தில்குமாருக்கு பூத் கமிட்டியில் பொறுப்பு எதுவும் வழங்கப்படாததால், கட்சி மீது கடும் அதிருப்தியில் மதுபோதையில் சிலையை உடைத்தது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது’ என்றனர்.

The post எம்ஜிஆர் சிலையை உடைத்த அதிமுக பிரமுகர் கைது appeared first on Dinakaran.

Tags : AIADMK ,MGR ,Samayapuram ,Trichy ,Sirukanur, Trichy district ,Dinakaran ,
× RELATED எடப்பாடியுடன் மோதலால் பாஜவுக்கு தாவ...