×

துப்பாக்கி முனையில் இஸ்ரேல் ராணுவம் மிரட்டல் எதிரொலி காசா மருத்துவமனையில் இருந்து 30 குழந்தைகள் மீட்பு: சிகிச்சைக்காக எகிப்துக்கு அனுப்பி வைப்பு

கான்யூனிஸ்: காசா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 30 குறைமாத குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர் என்றும் அவர்கள் எகிப்தில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர் என காசா அதிகாரிகள் தெரிவித்தனர். பாலஸ்தீனம், காசாவில் உள்ள மிக பெரிய மருத்துவமனையாக உள்ள ஷிபா மருத்துவமனை ஹமாஸ் படையின் முக்கிய கட்டளை தளமாக செயல்படுவதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியது. இஸ்ரேலின் குற்றச்சாட்டை ஷிபா மருத்துவமனை நிர்வாகம் மறுத்தது. பாலஸ்தீனத்தின் மீதான தாக்குதலில் ஷிபா மருத்துவமனையை கைப்பற்றுவது இஸ்ரேலின் முக்கிய நோக்கம். கடந்த வாரம் இஸ்ரேல் ராணுவம் ஷிபா மருத்துவமனைக்கு உள்ளே புகுந்தது.

மருத்துவமனை வளாகத்தில் ராணுவ வீரர்கள் சோதனை நடத்தினர். இதில் ஆயுதங்கள்,கையெறி குண்டுகள் ஆகியவை கைப்பற்றப்பட்டன. மருத்துவமனை வளாகத்தில் உள்ள சுரங்கத்துக்குள் செல்வதற்கான நுழைவாயிலும் கண்டுபிடிக்கப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்தது. ஆனால்,இஸ்ரேல் வெளியிட்ட ஆதாரங்கள் எதையும் உறுதி செய்ய முடியவில்லை என ஏபி செய்தி நிறுவனம் தெரிவித்தது. ஏற்கனவே, மின்சாரம் இல்லாததாலும், எரிபொருள் பற்றாக்குறையாலும் ஷிபா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகள் உடல் நிலை கடுமையாக பாதிக்கப்பட்டது. இதில்,பல குழந்தைகளும் அடங்குவர்.

இந்நிலையில், நேற்றுமுன்தினம் நோயாளிகள்,புறநோயாளிகள், மருத்துவ ஊழியர்கள் உட்பட 2,500 பேர் மருத்துவமனையை விட்டு வெளியேறினர். அவர்கள் தாமாகவே வெளியேறியதாக இஸ்ரேல் தெரிவித்தது. ஆனால்,துப்பாக்கி முனையில் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டதாக அங்கு சிகிச்சை பெற்ற நோயாளி மகமூத் அபு என்பவர் தெரிவித்தார். ஐ.நா குழுவினர் நேற்றுமுன்தினம் ஷிபா மருத்துவமனைக்கு சென்று பார்த்தனர். மருத்துவமனையில் 32 குறைமாத குழந்தைகள் உட்பட 291 நோயாளிகள் உள்ளனர். அவர்களில் பல நோயாளிகள் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களால் நடக்க கூட முடியாத நிலையில் உள்ளனர்.

தற்போது மருத்துவமனையில் 25 ஊழியர்கள் உள்ளனர் என்றும் அவர்கள் கடும் அச்சத்துடன் உள்ளனர். ஷிபா மருத்துவமனை சாவு மண்டலமாக உள்ளது என ஐநா குழுவினர் தெரிவித்தனர். 30 குழந்தைகள் மீட்பு இந்நிலையில், காசா சுகாதார துறை அதிகாரிகள் கூறுகையில்,‘‘ ஷிபா மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த 30 குழந்தைகள் நேற்று மீட்கப்பட்டனர். எகிப்தில் உள்ள மருத்துவமனைகளுக்கு அவர்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்’’ என்றனர். மீட்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை எதுவும் உடனடியாக உறுதி செய்ய முடியவில்லை.

* குண்டுவீச்சில் 46 பேர் பலி

வடக்கு காசாவில் உள்ள ஜபாலியா அகதிகள் முகாமில் நேற்று முன்தினம் இஸ்ரேல் விமானம் குண்டு வீசி தாக்குதல் நடத்தியது. இதில்,12 க்கும் மேற்பட்டோர் பலியாகினர். ஆனால், அங்குள்ள மருத்துவமனையில் 20க்கும் மேற்பட்ட உடல்கள் கிடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே போல், கான்யூனிசில் உள்ள குடியிருப்பில் நடந்த விமான குண்டுவீச்சில் 26 பாலஸ்தீனர்கள் உயிரிழந்தனர். இஸ்ரேல்-ஹமாஸ் போரில் இதுவரை 11 ஆயிரத்து 500 பேர் உயிரிழந்தனர்,2,700 பேர் மாயமாகியுள்ளனர் என பாலஸ்தீன சுகாதார துறை தெரிவித்துள்ளது.

The post துப்பாக்கி முனையில் இஸ்ரேல் ராணுவம் மிரட்டல் எதிரொலி காசா மருத்துவமனையில் இருந்து 30 குழந்தைகள் மீட்பு: சிகிச்சைக்காக எகிப்துக்கு அனுப்பி வைப்பு appeared first on Dinakaran.

Tags : Gaza ,Egypt ,Conunis ,
× RELATED காசா மீது இஸ்ரேல் படைகள் தீவிர...