×

திருவள்ளூர் அருகே பரிதாபம் மின்சார ரயில் மோதியதில் தந்தை, 2 மகள்கள் பலி: சோகத்தில் மூழ்கியது கிராமம்

சென்னை: மனைவியை பார்ப்பதற்காக தன் 2 மகள்களுடன் கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு செல்வதற்காக வேப்பம்பட்டு அருகே தண்டவாளத்தை கடக்கும்போது அரக்கோணம் சென்ற மின்சார ரயில் மோதி 3 பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தனர். திருவள்ளூர் அடுத்த பெருமாள் பட்டு பகுதியைச் சேர்ந்தவர் மனோகர்(48). இவர் தனது மனைவிக்கு உடல்நிலை சரியில்லாததால் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று காலை அவர் தனது மகள்களான தர்ஷினி(18), தாரணி(17) ஆகியோரை அழைத்துக் கொண்டு கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு மனைவியை பார்க்க வேப்பம்பட்டு ரயில் நிலையத்துக்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது, அனைவரும் ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளனர். அப்போது சென்னையில் இருந்து அரக்கோணம் நோக்கி சென்ற மின்சார ரயில், இவர்கள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் 3 பேரும் கை, கால் மற்றும் முகம் சிதைந்து சம்பவ இடத்திலே பலியானார்கள். இதுகுறித்து தகவல் அறிந்த திருவள்ளூர் ரயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து திருவள்ளூர் ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். இந்த சம்பவம் பெருமாள்பட்டுப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

* பொதுமக்கள் சாலை மறியல்
ரயில் மோதி தந்தை, 2 மகள்கள் பலியான தகவல் அறிந்த வேப்பம்பட்டு, பெருமாள்பட்டு மற்றும் சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் திரண்டனர். கடந்த 10 ஆண்டுக்கு மேல் ரயில்வே மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் இந்த வேப்பம்பட்டு ரயில் நிலையத்தில் 100க்கும் மேற்பட்டோர் ரயில் மோதி பலியாகியுள்ளனர். ரயில்வே மேம்பாலத்தை வேகமாக கட்டி முடிக்க வலியுறுத்தி திருவள்ளூர்-ஆவடி நெடுஞ்சாலையில் வேப்பம்பட்டு மற்றும் சுற்றுப்புற பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த திருவள்ளூர் தாசில்தார் சுரேஷ்குமார், செவ்வாப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

The post திருவள்ளூர் அருகே பரிதாபம் மின்சார ரயில் மோதியதில் தந்தை, 2 மகள்கள் பலி: சோகத்தில் மூழ்கியது கிராமம் appeared first on Dinakaran.

Tags : Paritapam ,Tiruvallur ,CHENNAI ,Veppampatu ,Arakkonam ,
× RELATED செங்கல்சூளை தொழிலாளர்களின்...