×

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் கட்டிய அடுக்குமாடி குடியிருப்புகளை இன்று முதல்வர் திறந்து வைக்கிறார்: பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார்

சென்னை: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் இன்று தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில், பல்வேறு மாவட்டங்களில் உள்ள திட்டப் பகுதிகளில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைக்கிறார். மேலும் கைத்தறி நெசவாளர்களுக்கு பயனாளிகள் தாமாக வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கான பணி ஆணைகள் மற்றும் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகளுக்கு குடியிருப்புகளுக்கான ஒதுக்கீட்டு ஆணைகளையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்.

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களையும் திறந்து வைக்கிறார். மேலும் இணையவழிச் சேவையின் மூலமாக நிலஅளவைக்கு (F-Line Measurement) விண்ணப்பிக்கும் புதிய வசதியையும் தொடங்கி வைக்கிறார். அது மட்டுமல்லாமல் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்திற்காக நிலஎடுப்பு செய்ததால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட மாற்று இடங்களுக்கு நிலவரித்திட்டப் பணி மேற்கொண்டு பயனாளிகளுக்கு பட்டாக்கள் வழங்கும் பணியினை தொடங்கி வைத்து, பயனாளிகளுக்கு பட்டாக்களை வழங்குகிறார்.

கூட்டுறவுத் துறை சார்பில் திருச்செங்கோடு, ஈரோடு, ராசிபுரம், பெருந்துறை ஆகிய இடங்களிலுள்ள வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கங்களில் கட்டப்பட்டுள்ள கிடங்குகள், தானியங்கி வகைப்படுத்தும் மற்றும் தரப்படுத்தும் இயந்திரங்களுடன் கூடிய ஏல களங்கள் மற்றும் ஆய்வுக்கூடம், சிந்தாதிரிப்பேட்டை மற்றும் தென்மேல்பாக்கம் நகர கூட்டுறவுக் கடன் சங்கங்களில் கட்டப்பட்டுள்ள புதிய சங்கக் கட்டிடம் மற்றும் திருமண மண்டபம் ஆகியவற்றை திறந்து வைக்கிறார்.

The post தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் கட்டிய அடுக்குமாடி குடியிருப்புகளை இன்று முதல்வர் திறந்து வைக்கிறார்: பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Tamilnadu Urban Habitat Development Board ,Chennai ,Chief Secretariat ,Tamil ,Nadu ,M.K.Stal ,Tamil Nadu Urban Habitat Development Board ,
× RELATED உழவர் பெருமக்களது வாழ்வுக்கும்...