×

மார்பக புற்றுநோய்க்கு இலவசமாக உயர்தர நவீன சிகிச்சை

சேலம், நவ.19: சேலம் அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனையில் மார்பாக புற்றுநோய்க்கு ஹீமோதெரபி, ரேடியோ தெரபி, எம்ஏபி தெரபி, ஆர்மோனல் தெரபி உள்ளிட்ட ₹20 லட்சம் மதிப்பிலான உயர்தர நவீன சிகிச்சைகள் இலவசமாக அளிக்கப்படுகிறது. மார்பக புற்றுநோய் என்பது மார்பக செல்களின் கட்டுப்பாடற்ற அசாதாரண வளர்ச்சி நிலையாகும். உலகளவில் பெண்களுக்கு ஏற்படக்கூடிய புற்றுநோயில் அதிகளவு மார்பக புற்றுநோயாக உள்ளது. இந்தியாவிலும் மார்பக புற்றுநோயால் பெருமளவில் பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் ஒன்றிய, மாநில அரசுகள் மார்பக புற்று நோய் குறித்து பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர். மார்பக புற்றுநோய்க்கு ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை பெற்றால் முழுமையாக குணப்படுத்தலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தவகையில் சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மார்பக புற்றுநோய்க்கு ₹20லட்சம் மதிப்பிலான நவீன உயர்தர சிகிச்சைகள் இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சேலம் அரசு மருத்துவக்கல்லூரி புற்றுநோய் மருத்துவர்கள் கூறியதாவது: சேலம் அரசு மருத்துவமனைக்கு வரும் புற்றுநோயாளிகளில் பெரும்பாலானவர்கள் மார்பக புற்று நோயாளிகளாகவே உள்ளனர். மற்ற நாடுகளில் 80 சதவீதம் பேர் ஆரம்பகட்டத்திலே மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வருகின்றனர். ஆனால் நமது நாட்டில் மருத்துவமனைக்கு வரும் 70 முதல் 80 சதவீதம் நோயாளிகள், நோய் முற்றிய நிலையிலேயே வருவது வழக்கமாக உள்ளனர்.

இதன் காரணமாக புற்றுநோய் குணமாகும் சதவீதமும் குறைவாக உள்ளது.இந்த அக்டோபர் மாதத்தின் முக்கிய ேநாக்கமே, மார்பக புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தி, ஆரம்ப நிலையிலேயே நோயை கண்டறிந்து சிகிச்சை அளிப்பதைக் கொண்டுள்ளது. கடந்த 6 ஆண்டுகளாகவே, சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மார்பக புற்றுநோய் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மருத்துவமனைக்கு வரும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மருத்துவமனை வளாகத்தில் மார்பக புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு பதாகைகள், டிஜிட்டல் பேனர்கள், காத்திருப்போர் அறையில் உள்ள தொலைக்காட்சியில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஔிபரப்பட்டு வருகிறது.

மார்பக புற்றுநோய்க்கு அறுவை சிகிச்சை, ஹீமோதெரபி, ரேடியோ தெரபி, எம்ஏபி தெரபி, ஆர்மோனல் தெரபி உள்ளிட்ட சிகிச்சை முறைகள் உள்ளது. அரசு மருத்துவமனையில் நவீன உயர்தர சிகிச்சை வசதிகள் இருந்தும் பொதுமக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லாமல், நோய் முற்றிய நிலையிலேயே சிகிச்சைக்கு வருகிறார்கள். ஆரம்ப நிலையில் சிகிச்சைக்கு வராமல் முற்றிய நிலையில் சிகிச்சைக்கு வரும்போது நோயை குணப்படுத்த முடியாத சூழல் உள்ளது. எனவே கட்டி வந்தால் உடனடியாக சிடி ஸ்கேன், எம்ஆர்ஐ உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யவேண்டும்.

எம்ஏபி சிகிச்சையை ஒருவருடம் எடுக்க வேண்டும். தனியார் மருத்துவமனையில் இவற்றை எடுத்தால் ₹10 லட்சம் செலவாகும். அறுவை சிகிச்சை உள்ளிட்ட அனைத்து கட்டணங்களும் சேர்த்தால், 15 முதல் 20 லட்சம் வரை செலவாகும். இவை அனைத்தும் அரசு மருத்துவமனையில் இலவசமாக செய்யப்பட்டு வருகிறது. இதை நோயாளிகள் பயன்படுத்தி சிகிச்சை பெற்று பலன்அடைய வேண்டும். இவ்வாறு மருத்துவர்கள் தெரிவித்தனர்.

The post மார்பக புற்றுநோய்க்கு இலவசமாக உயர்தர நவீன சிகிச்சை appeared first on Dinakaran.

Tags : Salem ,Salem Government Medical College Hospital ,Dinakaran ,
× RELATED பொறுப்பேற்பு