×

ஐயப்ப பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள்: முக்கடல் சங்கமம் பகுதியில் விஜய் வசந்த் எம்.பி ஆய்வு

 

நாகர்கோவில், நவ.19 : ஐயப்ப பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் தொடர்பாக கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் பகுதியில் விஜய் வசந்த் எம்பி நேற்று ஆய்வு மேற்கொண்டார். சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் திரிவேணி சங்கமம் மக்கள் கடலில் புனித நீராடும் பகுதியாகும். கொரோனா காலத்திற்கு முன்பு இயற்கையான மணல் பரப்பாகவே இருந்தது. கரையில் எவ்வளவு தூரம் அலை வந்தாலும் யாருக்கும் எவ்வித பாதிப்பும் இல்லாமல் இருந்தது.

இந்நிலையில் ஒன்றிய அரசின் கடற்கரை மேம்பாட்டு திட்டத்தில், கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் மணல் பாங்கான பகுதியில், மக்கள் புனித நீராடிய பகுதியில் கருங்கல்லால் சப்பாத்து போன்ற பகுதியை உருவாக்கினர். கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி மேற்பார்வையில் இந்தப் பணிகள் நடைபெற்றது. கடல் மணல் பரப்பில் கல்லால் சப்பாத்து அமைக்கும் பணிக்கு, அன்றைய கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் வசந்தகுமாரின் நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி ஒதுக்கப்பட்டது.

மணல் பரப்பில் சப்பாத்து அமைத்தால், எப்போதும் அலை அடித்துக் கொண்டிருக்கும் பகுதியில் பாசி படியும், இதனால் கடலில் நீராடுபவர்கள் கால் வழுக்கி விழும் நிலை ஏற்படும் என்ற எச்சரிக்கையை ஒன்றிய அரசின் அதிகாரிகளிடம் தெரிவித்த போது அதனை ஒன்றிய அரசு அதிகாரிகள் ஏற்றுக்கொள்ளவில்லை. கொரோனா காலத்தில் இந்த பணிகள் முழுமையாக நிறைவடைந்து விட்டது. முக்கடல் சங்கம கடல் பரப்பில் சப்பாத்து பகுதியில் நீராடிய பலரும் கால் வழுக்கி கீழே விழுந்ததில் பலருக்கும் தலையில் அடிபட்டு ஆம்புலன்சில் கன்னியாகுமரியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு எடுத்து செல்வதும் இங்கு சிகிச்சை கொடுக்க முடியாத நிலையில் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு உயர் சிகிச்சைக்கு அனுப்புவதும் தொடர் கதையாக உள்ளது.

இரண்டு வட மாநிலத்தவர் குறிப்பிட்ட பகுதியில் வழுக்கி விழுந்ததில் தலையில் பலமான காயம் ஏற்பட்டு மரணம் அடைந்தனர். கன்னியாகுமரிக்கு தற்போது ஐயப்ப பக்தர்கள் அதிகமாக வரும் காலமாகும். அனைத்து பக்தர்களும் கடலில் புனித நீராடுவார்கள். இந்நிலையில் பக்தர்கள், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு குறித்து விஜய் வசந்த் எம்பி சம்பந்தப்பட்ட பகுதியை தேவஸ்தான அதிகாரி, சுற்றுலா துறை அதிகாரி, கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி அதிகாரிகள் உடன் நேற்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் 3 துறையின் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட விஜய் வசந்த் எம்.பி படித்துறையில் பாசி படிந்துள்ள பகுதியை முழுவதுமாக அகற்றி விட்டு மணல் பரப்பு பகுதியை மீண்டும் உருவாக்கிட நடவடிக்கை எடுக்க இருப்பதாக தெரிவித்தார்.

The post ஐயப்ப பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள்: முக்கடல் சங்கமம் பகுதியில் விஜய் வசந்த் எம்.பி ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Ayyappa ,Vijay Vasant ,Nagercoil ,Vijay Vasanth ,Kanyakumari ,
× RELATED திருநின்றவூர் ஐயப்பன் கோயிலில் பல...