×

சென்னையில் மழைக்கால காய்ச்சலை தடுக்கும் வகையில் 6000 மருத்துவ முகாம்கள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை, நவ.19: மழைக்கால காய்ச்சலை தடுக்கும் வகையில் சென்னை முழுவதும் 6000 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளதாக, அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், மழைக்காலங்களில் பொதுமக்களுக்கு நோய் தொற்று மற்றும் காய்ச்சல் ஏற்படாத வண்ணம் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, நொச்சிக்குப்பம் பகுதியில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாமை, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: மழைக்கால மருத்துவ சிறப்பு முகாம்கள் கடந்த மாதம் 23ம் தேதி தொடங்கி வரும் டிசம்பர் 30ம் தேதி வரை இடைப்பட்ட சனிக்கிழமைகளில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. கடந்த மாதம் முதல் தற்போது வரை 4 முகாம்கள் நடத்தப்பட்டிருக்கிறது.

கடந்த 3 வாரங்களில் நடைபெற்ற முகாம்களை பொறுத்தவரை, ஒவ்வொரு வாரமும் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பயன்பெற்றனர். ஒவ்வொரு வாரமும் 1000 முகாம்கள் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், ஒவ்வொரு வாரமும் 2000த்திற்கும் மேற்பட்ட முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு வாரமும் நடைபெறும் மருத்துவ முகாம்களில் 476 மருத்துவ நடமாடும் குழுக்களும், 805 ஆர்.பி.எஸ்.கே. வாகனங்கள் மூலம் பள்ளி சிறார்களுக்கான முகாம்களும் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 3 வாரங்களில் 6000த்திற்கும் மேற்பட்ட முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. தற்போது 4வது வாரம் நொச்சிக்குப்பம் பகுதியில் நடைபெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து அடுத்தவாரம் 25ம் தேதி முகாம் நடைபெற உள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சியினை பொறுத்தவரை ஒவ்வொரு மண்டலத்திற்கும் 3 என்கிற வகையில் 45 மருத்துவ முகாம்கள் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது.

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் டெங்கு, இன்புளுயன்சா காய்ச்ச்சல், அதிகரிக்க வாய்ப்பு இருப்பதால் இதனைக் கட்டுப்படுத்துகின்ற நோக்கில், இந்த முகாம்கள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை நடைபெற்ற முகாம்களில் சுமார் 500க்கும் மேற்பட்டவர்களுக்கு காய்ச்சல்களும், வறண்ட இருமல்களும், சளி போன்ற பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளானவர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். அப்படி கண்டறியப்படுபவர்களுக்கு தொடர் சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது. சென்னை மாநகராட்சியைப் பொறுத்தவரை 200 நலவாழ்வு மையங்கள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. தற்போது 140 நலவாழ்வு மையங்கள் தமிழ்நாடு முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. 120 நலவாழ்வு மையங்களுக்கான கட்டுமானப் பணிகள் முடிவுற்றிருக்கிறது.

இந்த நலவாழ்வு மையங்களுக்கு மருத்துவம் சார்ந்த பணியாளர்கள் நியமிக்கும் அரசாணை வெளியிடப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகள் முடிவடைந்தவுடன் தமிழ்நாடு முதலமைச்சரால் விரைவில் திறந்து வைக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார். நிகழ்வில் மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் மயிலை த.வேலு, மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், துணை ஆணையர் (கல்வி) ஷரண்யா அறி, மத்திய வட்டார துணை ஆணையர் கே.ஜெ.பிரவீன்குமார், பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை இயக்குநர் செல்வ விநாயகம், மாநகர நல அலுவலர் எம்.ஜெகதீசன், மாமன்ற உறுப்பினர் ரேவதி, மண்டல அலுவலர் உள்ளிட்ட உயரலுவலர்கள் கலந்து கொண்டனர்.

வீடுகள்தோறும் விழிப்புணர்வு
சென்னையில் டெங்கு காய்ச்சல் நடவடிக்கையாக மலேரியா பணியாளர்கள் வீடு வீடாக சென்று மழைநீர் தேங்க வாய்ப்புள்ள டயர், தேங்காய் சிரட்டை உள்ளிட்ட தேவையில்லாத பொருட்களை அகற்றி, உபயோகிக்கும் நீரினை சரியான முறையில் மூடி வைக்கவும், இதுகுறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வினையும் ஏற்படுத்தி வருகிறார்கள். நிலவேம்பு மூலிகை பவுடர் 645 கி.கி. தயார் நிலையில் உள்ளது. மேலும் வீடுவீடாக சென்று குளோரின் பவுடர்கள் வழங்கப்பட்டு வருகிறது, என அமைச்சர் தெரிவித்தார்.

ஒருங்கிணைப்பு கூட்டங்கள்
ஒன்றிய அரசு பல்வேறு மாநிலங்களில் டெங்கு போன்ற பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் என்று கடந்த 10 நாட்களுக்கு முன்பு சுற்றறிக்கை அனுப்பியிருந்தது. ஆனால் தமிழ்நாட்டினை பொறுத்தவரை கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பாகவே மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் சென்னை மாநகராட்சி மூலமாக பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே பல்வேறு நடவடிக்கைகளை தொடங்கியிருக்கிறோம். பல்வேறு துறை செயலாளர்களுடனான ஒருங்கிணைப்புக் கூட்டம், மாவட்ட அதிகாரிகளுடான ஒருங்கிணைப்பு கூட்டம், மக்கள் பிரதிநிதிகளுடான ஒருங்கிணைப்பு கூட்டம், தலைமை செயலாளர்களுடனான அனைத்து துறைகளின் ஒருங்கிணைப்புக் கூட்டம் என்று தொடர்ச்சியாக நடத்தி மருத்துவ முகாம்கள் நடத்துவது குறித்து திட்டமிடப்பட்டது.

கொசு ஒழிப்பு பணி தீவிரம்
மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் காலை மற்றும் மாலை இரு வேளைகளில் கொசுப்புகை மருந்து அடிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொசு ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக கையினால் இயங்கும் 215 புகைபரப்பும் இயந்திரங்கள், பேட்டரி மூலம் இயங்கும் 300 ஸ்பிரேயர்கள், 68 வாகனங்களில் பொருத்தப்பட்ட புகைபரப்பும் இயந்திரங்கள், 424 மருந்து தெளிப்பான்கள், 120 பவர் ஸ்பிரேயர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும், நீர்நிலைகளில் டிரோன் இயந்திரங்கள் பயன்படுத்தி கொசு ஒழிப்பு மருந்து தெளிக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளது.

The post சென்னையில் மழைக்கால காய்ச்சலை தடுக்கும் வகையில் 6000 மருத்துவ முகாம்கள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் appeared first on Dinakaran.

Tags : RAINY FEVER ,CHENNAI ,MINISTER ,MAJ ,Subramanian ,MAJ. ,Rainy ,Ma ,Dinakaran ,
× RELATED போதைப்பொருள் வழக்கில் அதிமுக...