×

சிறுவாபுரி, ஊத்துக்கோட்டை, குன்றத்தூர் முருகன் கோயில்களில் சூரசம்ஹார விழா கோலாகலம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

திருவள்ளூர், நவ. 19: கந்த சஷ்டி விழாவைத் தொடர்ந்து சிறுவாபுரி, ஊத்துக்கோட்டை, குன்றத்தூரில் உள்ள முருகன் கோயில்களில் சூரசம்ஹார விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று இவ்விழாவை பக்திப் பரவசத்துடன் கண்டு களித்தனர். சிறுவாபுரி: திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அடுத்த சிறுவாபுரியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 13ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதன்படி, கந்த சஷ்டி நிறைவு நாளான நேற்று அதிகாலை முதல் தொடர்ச்சியாக பாலசுப்ரமணியருக்கு சிறப்பு அர்ச்சனைகளும், ஆராதனைகளும் நடைபெற்றது. பின்னர் மாலை 5 மணியளவில் முருகப்பெருமான், வீரபாகு துணையுடன் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்வு நடைபெற்றது. இதில் முதலாக, யானை முகம் கொண்ட தாரகாசுரனை முருகப்பெருமான் வதம் செய்தார்.

இதையடுத்து சிங்கமுகம் கொண்ட சூரபத்மனை வேலால் வதம் செய்தார். பின்னர் தன் முகம் கொண்ட சூரபத்மனை வதம் செய்தார். தொடர்ந்து மாமரமாகவும், சேவலாகவும் வந்த சூரபத்மனை வதம் செய்து சேவலை தனது கொடியாகவும், மாமரத்தை மயிலாகவும் மாற்றி முருகப்பெருமான் தன் வாகனமாக ஆட்கொண்டார். இந்த சூரசம்ஹாரம் விழாவை காண சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு, சாமி தரிசனம் செய்தனர். பின்னர் உற்சவர் கோயிலை சுற்றி உலா வந்தார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் செந்தில்குமார் செய்திருந்தார். ஊத்துக்கோட்டை: கடந்த 13ம்தேதி கந்த சஷ்டி விழா தொடங்கியது. விழாவையொட்டி, ஊத்துக்கோட்டையில் உள்ள  ஆனந்தவல்லி சமேத திருநீலகண்டேஸ்வரர் கோயிலில், கந்த சஷ்டியை முன்னிட்டு தினமும் காலையில் விநாயகர், சிவன், பார்வதி, முருகன், வள்ளி – தெய்வானை ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

6வது நாளான நேற்று சூரசம்ஹாரத்தை முன்னிட்டு முருகன் – வள்ளி – தெய்வானைக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்கள் மூலம் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மாலை 4 மணிக்கு கோயிலிருந்து சூரபத்மன் புறப்படுதல் நிகழ்ச்சியும், மாலை 5 மணிக்கு முருகன் வேல் கொண்டு சூரபத்மனை வதம் செய்யும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பெண்கள், சிறுவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். திருமழிசை: திருமழிசையில் உள்ள குளிர்ந்த நாயகி சமேத ஒத்தாண்டேஸ்வரர் திருக்கோயில் வளாகத்தில் அமைந்துள்ள வள்ளி தேவசேன சமேத சிவசுப்ரமணிய சுவாமிக்கு மகா கந்த சஷ்டி லட்சார்ச்சனை திருவிழா நடைபெற்றது. கடந்த 13ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை மகா கந்த சஷ்டி லட்சார்ச்சனை திருவிழா நடைபெற்றது.

மேலும் விழாவை முன்னிட்டு காலை, உச்சி, மாலை ஆகிய மூன்று காலங்களில் சண்முகார்ச்சனை முறையில் 18 சகஸ்ரநாம அர்ச்சனைகள் நடைபெற்று. தினமும் மாலை திருக்கோயில் வளாகத்தில் திருமுறை திருப்புகழ் இன்னிசை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து நேற்று இரவு 7 மணி அளவில் சூரசம்ஹாரம் நடைபெற்றது. இந்த சூரசம்ஹார நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர். இதனைத் தொடர்ந்து இன்று 19ம் தேதி இரவு 7 மணி அளவில் திருக்கல்யாணமும், நாளை 20ம் தேதி இரவு 7 மணியளவில் சுவாமி ஆஸ்தானமும் நடைபெற உள்ளது.

54 ஆண்டுகளுக்கு பிறகு சூரசம்ஹாரம்
குன்றத்தூரில் மிகவும் பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. மலை குன்றின் மீது அமைந்துள்ள இந்த கோவிலுக்கு தினந்தோறும் தமிழகம் மட்டுமல்லாது சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்த நிலையில், கடந்த 1969ம் ஆண்டு இக்கோயிலில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதன் பிறகு சுமார் 54 ஆண்டுகளாக சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடத்தப்படாமல் இருந்த நிலையில் இந்த முறை இந்த கோவிலில் கந்த சஷ்டி விழா மற்றும் சூரசம்ஹாரம் நடத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தது. கடந்த 13ம் தேதி கந்த சஷ்டி விழாவின் தொடக்கமாக லட்சார்ச்சனை விழாவும் அதன் பிறகு நேற்று முன்தினம் மாலை நகைமுக வல்லி உடனுறை கந்தழீஸ்வரர் கோவிலில் வேல் வாங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

சூரசம்ஹாரத்தை முன்னிட்டு காலை முதல் சாமி தரிசனம் செய்ய கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்தனர். பக்தர்களின் வசதிக்காக கோயில் நிர்வாகம் சார்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில் நேற்று மாலை மலை குன்றின் கீழ் அமைந்துள்ள இடத்தில் சூரனை முருகன் வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது. முருகன் வதம் செய்வது போன்ற நிகழ்ச்சியின் போது தேவர்கள், அரக்கர்கள் போல் பலர் வேடமிட்டு இருந்தனர். இந்த நிகழ்ச்சியை காண குன்றத்தூர் மட்டுமல்லாது சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் அந்த பகுதியில் திரண்டனர். மக்கள் வெள்ளத்தில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சியானது நடைபெற்றது போல் இருந்தது. பக்தர்களின் வசதிக்காக கோவிலுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது வாகனங்கள் நிறுத்துவதற்கு போதிய இடமும் ஏற்பாடு செய்யப்பட்டு ஆங்காங்கே கழிவறை வசதிகளும், மருத்துவ முகாம்களும் செய்து கொடுக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் சிறு – குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தாமரை கண்ணன், கோவில் அறங்காவலர்கள் சரவணன், குணசேகரன், சங்கீதா கார்த்திகேயன், ஜெயக்குமார், கோவில் செயல் அலுவலர்  கன்யா ஆகியோர் விழா ஏற்பாடுகளை செய்து இருந்தனர் அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

The post சிறுவாபுரி, ஊத்துக்கோட்டை, குன்றத்தூர் முருகன் கோயில்களில் சூரசம்ஹார விழா கோலாகலம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Surasamhara Festival ,Siruvapuri ,Oothukottai ,Kunrathur Murugan ,Temples ,Thiruvallur ,Kunradathur Murugan Temples ,Kanda Sashti Festival ,Kunradathur ,Murugan Temples ,
× RELATED யுகாதி பண்டிகையை முன்னிட்டு...